Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மேலப்பளையம் ஆட்டிறைச்சி கடைகளில் சோதனை பிரிட்ஜில் வைக்கப்பட்டிருந்த இறைச்சி பறிமுதல் : போலி சீல்கள் கைப்பற்றப்பட்டன

Print PDF

தினமலர் 25.03.2010

மேலப்பளையம் ஆட்டிறைச்சி கடைகளில் சோதனை பிரிட்ஜில் வைக்கப்பட்டிருந்த இறைச்சி பறிமுதல் : போலி சீல்கள் கைப்பற்றப்பட்டன

திருநெல்வேலி : மேலப்பாளையம் ஆட்டிறைச்சி கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் சோதனை நடத்தி பிரிட்ஜில் இருந்த இறைச்சிகளை பறிமுதல் செய்தனர். அதிகாரிகளை ஏமாற்ற வைக்கப்பட்டிருந்த போலி முத்திரைகளையும் கைப்பற்றினர். நெல்லை மாநகரில் 50க்கும் மேற்பட்ட ஆட்டிறைச்சி கடைகள் உள்ளன. மேலப்பாளையத்தில் மட்டும் 30 கடைகள் உள்ளது. கடைகளில் வைத்து ஆடுகள் வெட்டும் போது அதில் உள்ள கழிவுகள் மூலம் சுகாதார சீர்கேடு ஏற்படும் என்பதற்காக மாநகராட்சி சார்பில் மேலப்பாளையத்தில் ஆடறுப்பு மனை அமைக்கப்பட்டுள்ளது. வியாபாரிகள் இங்கு ஆடுகளை கொண்டு வந்து வெட்டி சீல் வைத்து அதன் பிறகு தான் கடைகளுக்கு கொண்டு சென்று வியாபாரம் செய்யவேண்டும். இங்கு வெட்டப்படும் ஆடுகளுக்கு தலா ரூ.20 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பெரும்பாலான வியாபாரிகள் ஆடுகளை ஆடறுப்பு மனைக்கு கொண்டு செல்லாமல் கடைகளிலேயே வெட்டி விடுவதாக புகார்கள் வந்தன.

இதையடுத்து மாநகராட்சி கமிஷனர் பாஸ்கரன் உத்தரவின் பேரில் சுகாதார அதிகாரி கலுசிவலிங்கம், மேலப்பாளையம் உதவிக்கமிஷனர் கருப்பசாமி தலைமையில் உணவு ஆய்வாளர்கள் ஏ.ஆர்.சங்கரலிங்கம், காளிமுத்து, சுகாதார ஆய்வாளர்கள் சாகுல்ஹமீது, முருகேசன், ஆறுமுகம், வேலாயுதம், இளநிலைப் பொறியாளர்கள் பிரதீப், இளங்கோ மற்றும் ஊழியர்கள் மேலப்பாளையம் ஆட்டிறைச்சி கடைகளில் நேற்றிரவு திடீர் சோதனை நடத்தினர்.

ஆசாத் ரோட்டில் உள்ள காசிராஜன் கடையில் ஆடுகள் அங்கேயே அறுக்கப்பட்டு கழிவுகள் அனைத்தும் சுகாதாரமற்ற முறையில் கொட்டப்பட்டிருந்தது. மேலும் பிரிட்ஜில் வைக்கப்பட்டிருந்த இறைச்சியையும், வியாபாரத்திற்காக வைத்திருந்தார். இதையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதே போல் சாயன்தரகன் தெருவில் உள்ள அப்துல்லா கடையில் இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன. 20க்கும் மேற்பட்ட கடைகளில் இந்த சோதனை நடந்தது.

வியாபாரிகள் தங்களது ஆடுகளை ஆடறுப்பு மனைக்கு கொண்டு செல்லும் போது குத்தகைதாரர்கள் அந்த இறைச்சிகளில் சீல் வைப்பர். ஆனால் ஒரு சிலர் ஆடுகளை கொண்டு செல்லாமல் கடைகளிலேயே வெட்டி, அதிகாரிகளை ஏமாற்றுவதற்காக தாங்கள் வைத்துள்ள போலி சீல் மூலம் முத்திரை குத்தி விடுகின்றனர். இந்த சோதனையில் காசிராஜன், அப்துல்லா கடைகளில் இருந்து போலி சீல் மற்றும் பேடுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மருந்து தெளித்து அழிப்பு : இந்த சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சியை கிருமி நாசினி மருந்து தெளித்து மாநகராட்சி அதிகாரிகள் லாரியில் ஏற்றிச் சென்றனர்.

Last Updated on Thursday, 25 March 2010 09:54