Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீர் பாக்கெட்டுகள் மெரீனாவில் பறிமுதல்

Print PDF

தினமலர் 06.04.2010

குடிநீர் பாக்கெட்டுகள் மெரீனாவில் பறிமுதல்

சென்னை : மெரீனா கடற்கரையில் விற்க தடை செய்யப்பட்ட குடிநீர் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.மெரீனா கடற்கரையில் மாசு ஏற்படுவதை தவிர்க்க சென்னை மாநகராட்சி பிளாஸ்டிக் பொருள்களை உபயோகிப்பதற்கும், விற்பதற்கும் தடை செய்தது. இதனால் மெரீனாவில் குடிநீர் பாக்கெட்டுகள் விற்பது தடைசெய்யப்பட்டது. திருவல்லிக்கேணி மாநகராட்சி அதிகாரிகள் மெரீனாவில் குடிநீர் பாக்கெட் விற்பனை நடப்பது குறித்து அடிக்கடி சோதனை செய்து வந்தனர். இந்நிலையில், மீண்டும் மெரீனாவில் குடிநீர் பாக்கெட்டுகள் மறைத்து வைத்து விற்பதாக மாநகராட்சிக்கு புகார்கள் வந்தது. அதைத் தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் 40 க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை மெரீனாவில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, 60 மூட்டை குடிநீர் பாக்கெட்டுகள் பதுக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்தனர். அதில் இருந்த ஆறாயிரம் பாக்கெட்டுகளை அழித்தனர்.

பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளை கடைகளுக்கு வெளியில் போட்டதாக எட்டு கடைக்காரர்களிடம் தலா 100 ரூபாய் வீதம் 800 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. மெரீனா கடற்கரை சர்வீஸ் சாலையில், சுகாதாரமற்ற முறையில் விற்க வைக்கப்பட்டிருந்த 250 கிலோ எடையுள்ள இட்லி, பொங்கல், போன்ற சிற்றுண்டிகள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. அதோடு நடைபாதையில் ஆக்கிரமிப்பு செய்து வைக்கப்பட்டிருந்த 20 கடைகளை மாநகராட்சியினர் அகற்றினர். இது போன்ற சோதனை இனி காலை, மாலை நேரங்களில் தொடர்ந்து நடக்கும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Last Updated on Tuesday, 06 April 2010 06:04