Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தரமற்ற, சுகாதாரமற்ற உணவுகள் பறிமுதல் : மாநகராட்சி அதிரடி சோதனை

Print PDF

தினமலர் 07.04.2010

தரமற்ற, சுகாதாரமற்ற உணவுகள் பறிமுதல் : மாநகராட்சி அதிரடி சோதனை

சென்னை : மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள், வடசென்னையில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில், 550 கிலோ எடை கொண்ட தரமற்ற உணவுகள், தண்ணீர் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன.சென்னை நகரில், கோடை காலத்தில் சுகாதாரமற்ற குடிநீர் பாக்கெட்களின் விற்பனை அதிகரித்து விடும். அதேபோல, தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக வடசென்னை பகுதிகளில், சுகாதாரமற்ற முறையில் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதால், அப்பகுதி மக்கள் அடிக்கடி தொற்று நோய்களுக்கு ஆளாகிவருகின்றனர்.இது குறித்து, பொதுநலச்சங்கங்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் மாநகராட்சியில் புகார் செய்து வருகின்றனர். மாநகராட்சி அதிகாரிகளும் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

புளியந்தோப்பு மண்டலம்-3 உதவி சுகாதார அலுவலர் ராஜா தலைமையில், ஆய்வாளர் முத்துக்கிருஷ்ணன் மற்றும் ஊழியர்கள் அடங்கிய குழு ஒன்று பூக்கடை பஸ் ஸ்டாண்டு, வால்டாக்ஸ் சாலை, அல்லிக்குளம், பெரம்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள பகுதிகள் மற்றும் புளியந்தோப்பு ஆகிய இடங்களில் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டது.இதில், 3,500 தரமற்ற குடிநீர் பாக் கெட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், சாலையோரங்களில் தயாரித்து சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்த பிரியாணி, போண்டா, பஜ்ஜி, பூரி உள்ளிட்ட 550 கிலோ எடைகொண்ட உணவுப் பண்டங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.அவற்றின் மீது பிளீசிங் பவுடர் தூவி மாநகராட்சி குப்பை கொட்டும் வளாகத்தில் கொட்டி அழிக்கப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட ஆறு நிறுவனங்களில் குடிநீர் பாக்கெட்டுக்கள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.நேற்று முன்தினம் மாநகராட்சியினர் நடத்திய சோதனையில் ஆறாயிரம் குடிநீர் பாக்கெட்டுகள், 250 சுகாதாரமற்ற உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,'சென்னை நகரில் மாநகராட்சி சார்பில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு, தரமற்ற உணவுப் பொருட்கள், தண்ணீர் பாக் கெட்டுகள் பறிமுதல் செய்து அழிக்கப் பட்டு வருகின்றன.இந்த சோதனை இனி தொடர்ந்து நடத்தப்படும். எனவே, சிறு கடை விற்பனையாளர்கள் தரமுள்ள உணவுப் பொருட்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.தரமற்ற பொருட் களை விற்பனை செய்து சோதனையில் சிக்குபவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்.

Last Updated on Wednesday, 07 April 2010 06:34