Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பாப்பான்கால்வாயில் கழிவுநீர் விடுவதை தவிர்க்க வேண்டும்: நகராட்சி நிர்வாகம் வலியுறுத்தல்

Print PDF

தினமலர் 08.04.2010

பாப்பான்கால்வாயில் கழிவுநீர் விடுவதை தவிர்க்க வேண்டும்: நகராட்சி நிர்வாகம் வலியுறுத்தல்

கடையநல்லூர்: கடையநல்லூர் பாப்பான் கால்வாயில் கழிப்பறை கழிவுகளை கால்வாயில் விடுவதை தவிர்க்க வேண்டுமென நகராட்சி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. இதுகுறித்து நகராட்சி ஆணையர் அப்துல் லத்தீப் கூறியிருப்பதாவது:- கடையநல்லூர் கருப்பாநதி அணையிலிருந்து விவசாய பாசனத்திற்கு தண்ணீர் செல்லும் பாப்பான் கால்வாய் நகராட்சி பகுதியில் மையமாக அமைந்துள்ளது. சுமார் 3 கி.மீ நீளத்தில் அமைந்துள்ள இக்கால்வாய் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன் அதிகளவில் வேகமாக பரவிய மர்ம காய்ச்சலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகளின் ஆய்வு குழுக்கள் நகர் பகுதியை ஆய்வு செய்தது.இதனையடுத்து ஆய்வு குழுக்கள் பாப்பான்கால்வாய் பகுதியினை ஒட்டி அமைந்துள்ள வீடுகளில் இருந்து கழிப்பறை கழிவுகள் நேரடியாக கால்வாயில் விடுவதை தடுத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தின. அதனடிப்படையில் கால்வாய் பகுதியினை ஒட்டி அமைந்துள்ள வீடுகளில் ஆய்வு செய்ததில் கழிப்பறை கழிவுநீர் செப்டிக் டேங்கில் சேகரிக்காமல் நேரடியாக பாப்பான்கால்வாயில் விடுவது தெரியவந்ததை அடுத்து சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு உடனடியாக செப்டிக் டேங்க் அமைக்கவும், கழிவுநீரை பாப்பான்கால்வாயில் விடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது. செப்டிக் டேங்க் அமைக்காத வீட்டின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

எனவே பொதுமக்கள் 15 தினங்களுக்குள் தங்கள் வீட்டிலுள்ள கழிப்பறை கழிவுகள் செப்டிக் டேங்கில் விடுவதற்கு தேவையான நடவடிக்கையை காலதாமதமின்றி அமைத்திட வேண்டும். நகரின் பொது சுகாதாரத்தில் பொதுமக்களின் பங்களிப்பும், ஒத்துழைப்பும் மிகவும் அவசியமாகிறது. எனவே பொதுமக்கள் தங்கள் கடமையை உணர்ந்து எதிர்காலங்களில் தொற்றுநோய் பரவாமல் சுகாதாரத்தை மேம்படுத்த வீடுகளில் அமைந்துள்ள கழிப்பறை கழிவுகள் செப்டிக் டேங்குகள் அமைத்து அதில் விடுமாறு செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் நகராட்சி மூலம் கழிவறையின் கழிவுநீர் குழாய்கள் அப்புறப்படுத்தப்படுவதுடன் கழிவறைகளை நகராட்சி நிர்வாகத்தில் இடித்து அப்புறப்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார

Last Updated on Thursday, 08 April 2010 06:31