Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நீலகிரி மாவட்டத்தில் ஒரு லட்சம் கழிப்பிடங்கள்! முழு சுகாதாரத்தை ஏற்படுத்த நடவடிக்கை

Print PDF

தினமலர் 13.04.2010

நீலகிரி மாவட்டத்தில் ஒரு லட்சம் கழிப்பிடங்கள்! முழு சுகாதாரத்தை ஏற்படுத்த நடவடிக்கை

ஊட்டி : 'நீலகிரி மாவட்ட கிராமப் புறங்களில், மக்கள் ஒத்துழைப்புடன் ஒரு லட்சம் கழிப்பிடங்கள் கட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது' என தெரிவிக்கப்பட்டது. பெரும்பாலான கிராமங்களில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாத நிலை இன்றும் தொடர்கிறது. குறிப்பாக, கழிப்பிட வசதிகள் போதியளவில் இல்லை; திறந்தவெளியே கழிப்பிடமாக அமைவதால் நோய் பரவுகிறது.மேலும், நிலத்தடி நீர் மற்றும் மழைநீரில் கழிவு கலந்து, நீராதாரங்களில் கலக்கிறது. இதை பருகும் மக்களுக்கு நோய் பரவுகிறது. எனவே, கழிப்பிடங்களை சிறப்பாக கட்டும் பணிகளை, மத்திய, மாநில அரசுகள், முழு சுகாதார திட்டத்தின் கீழ் செயல்படுத்தி வருகின்றன; மானியத்துடன் கடனுதவியும் அளிக்கப்படுகிறது. இதே போன்ற திட்டத்தை, நெதர்லாந்து நாட்டுடன் இணைந்து, இந்தியாவின் பல மாநிலங்களில் செயல்படுத்தும் நோக்கில், 'பினிஸ்' என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் துவக்கப்பட்ட இந்த செயல்பாட்டுக்காக, முதற் கட்டமாக நெதர்லாந்து நாட்டின் சார்பில் 27 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகள் செயல்படும் இந்த திட்டத்தின் கீழ், ஒரிசா, தமிழ்நாடு, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம் உட்பட மாநிலங்கள் பயன் பெறுகின்றன; இதுவரை, ஒரிசா உட்பட சில மாநிலங்களில் 28 ஆயிரம் தரம் மிக்க கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளன. தமிழகத்தில், திருவாரூர் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் முதற்கட்டமாக செயல்படுத்த, இந்த அமைப்பு முடிவு செய்து, நீலகிரி மாவட்டத்தில் ஆர்.டி.., அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பில் கடந்த 3 மாதங்களாக 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆய்வுப் பணிகள் மேற்கொண்டன. பல கிராமங்களில் 200 வீடுகளுக்கு 30 கழிப்பிடங்கள் மட்டுமே இருந்தது தெரியவந்தது;

இதைத் தொடர்ந்து, மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களின் சார்பில் 'மைக்ரோ' கடனுதவி திட்டத்தின் கீழ், முழு சுகாதார திட்டத்தை செயல்படுத்தி வரும் 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் கழிப்பிடங்களை மாவட்டத்தில் கட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது. திட்டத்தை செயல்படுத்தும் 'பினிஸ்' அமைப்பின் நிர்வாகி பாவ் கூறியதாவது: பொதுமக்கள் மற்றும் தனியார் அமைப்புகளின் ஒத்துழைப்புடன், தமிழகத்தில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் ஆர்.டி.., அறக்கட்டளை சார்பில் 'மைக்ரோ' கடனுதவி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ளது. 'நல்ல கழிப்பிடம் நோயில்லா உடலை தரும்' என்பது தான் இதன் நோக்கம். நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரை 15 ஆயிரம் ரூபாய் வரை கடனுதவி அளிக்க, 'நபார்டு' வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். பல கிராமங்களில் நடந்த ஆய்வுப் பணிகளின் போது, திட்டத்தில் கழிப்பிடங்கள் கட்டித் தந்தால், வாரத்துக்கு 125 ரூபாய் கடனை செலுத்தி விடுவதாக, கிராம மக்கள் உறுதியளித்துள்ளனர். மகளிர் சுய உதவிக்குழுவினர், திட்டத்தை செயல்படுத்த ஆர்வமாக உள்ளனர். இந்தியா முழுவதும் இத்திட்டத்தை செயல்படுத்த 1,000 கோடி ரூபாய் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதன் மூலம் குறைந்தபட்சம் 10 லட்சம் கழிப்பிடங்கள் கட்டப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, பாவ் கூறினார்.

நெதர்லாந்து நாட்டின் ஒருங்கிணைப்பாளர் வேலன்டைன், நிர்வாகி பிரிட்டா, டாடா இன்சூரஸ் அதிகாரி விஜய், செயல் அலுவலர் முகுல் சிங்கால், ஆர்.டி.., அறக்கட்டளை அறங்காவலர் பெருமாள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Last Updated on Tuesday, 13 April 2010 07:14