Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சென்னையில் காலரா இல்லை: மேயர் மா. சுப்பிரமணியன்

Print PDF

தினமணி 15.04.2010

சென்னையில் காலரா இல்லை: மேயர் மா. சுப்பிரமணியன்

சென்னை, ஏப்.14: சென்னையில் காலரா இல்லை, பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்று மேயர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள தொற்றுநோய் மருத்துவமனையில்புதன்கிழமை அவர் சோதனை மேற்கொண்டார். பின்னர் அவர் கூறியது:

சென்னையில் விற்பனை செய்யப்பட்டுவரும் தரமற்ற பாக்கெட் குடிநீர், உணவுப் பொருள்களை மாநகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து பறிமுதல் செய்து வருகின்றனர்.

புறநகர் பகுதிகளான திருவள்ளூர், செங்குன்றம், திருவொற்றியூர், மாதவரம், புழல் பகுதிகளிலிருந்து 175 பேர், கடந்த 5 நாள்களுக்கு முன்பு தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் வயிற்றுப்போக்குக்காக சிகிச்சை பெற்றுள்ளனர்.

சாலை ஓரங்களில் விற்கப்படும் சுகாதாரமற்ற உணவுப் பொருள்கள், தரமற்ற குடிநீர் ஆகியவற்றால்தான் வயிற்றுப்போக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள 165 மருத்துவமனைகள் மூலம், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேவைப்படுவபவர்களுக்கு குளோரின் மாத்திரைகள், வயிற்றுப்போக்குக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மண்டலம் 1, 2 ஆகியவற்றில் உள்ள சில பகுதிகளில் குடிநீரில் குளோரின் அளவு குறைந்துள்ளதால், உடனடியாக அப்பகுதியில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டு, மாநகராட்சி மூலம் வீடுவீடாக குளோரின் மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. வயிற்றுப்போக்கு உள்ளவர்களுக்கு உப்பு, சர்க்கரை கரைசல் பாக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன.

மழைக் காலத்தின்போதும், கோடை காலத்தின்போதும் தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் சாதாரணமாக 30 முதல் 40 நபர்கள் வரை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவது வழக்கமான ஒன்று. எனவே பொதுமக்கள் பீதியடைய வேண்டாம், சென்னையில் காலரா இல்லை என்றார் மேயர்.

Last Updated on Thursday, 15 April 2010 10:08