Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான உப்புகரைசல் பாக்கெட்

Print PDF

தினமலர் 23.04.2010

கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான உப்புகரைசல் பாக்கெட்

கோவில்பட்டி : கோவில்பட்டி நகராட்சி சார்பில் கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான உப்புக்கரைசல் பாக்கெட் வழங்கிய சம்பவம் பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.கோவில்பட்டி மந்தித்தோப்பு ரோடு சர்க்கஸ் மைதானம் அருகே மகாராஜபுரம் காலனியை சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் செல்வம் (28). இவர் ஆட்டோ டிரைவராக இருந்து வருகிறார். இவருக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்னர் திருமணமாகி முத்துமாரியம்மாள் (25) என்ற மனைவி உள்ளார். இவர் தற்போது சுமார் 7 மாத கர்ப்பிணியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து கோவில்பட்டி நகராட்சி சார்பில் வழங்கப்படும் கர்ப்பிணி மருத்துவ உதவிகளை பெற முத்துமாரியம்மாளும் சேர்ந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நகராட்சி சுகாதார செவிலியர் மூலம் கோவில்பட்டி வீரவாஞ்சிநகரில் இருந்து கர்ப்பிணிப் பெண்களுக்கு மருந்துகள் கொடுத்த போது, தனக்கு சோர்வாக இருப்பதாக தெரிவித்த முத்துமாரியம்மாளுக்கு சில ஓஆர்எஸ் உப்புக்கரைசல் பாக்கெட் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதை வாங்கியவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது மூன்றில் இரண்டு பாக்கெட்டுகள் காலாவதியானவை என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். அதில் தயாரிக்கப்பட்ட மாதக்குறிப்பாக கடந்த 2008ம் ஆண்டு ஜூன் மாதமென்றும், தயாரிக்கப்பட்ட தேதியில் இருந்து 18 மாதங்கள் பயன்படுத்தலாம் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, மருத்துவ மொத்தக் கிடங்கிலிருந்து சப்ளை செய்யப்பட்ட உப்புக்கரைசலில் இந்த பாக்கெட்டுகள் இருந்துள்ளது. அதை மாற்றித் தருவவதாகவும் தெரிவித்ததாக முத்துமாரியம்மாளின் கணவர் தெரிவித்தார். தொடர்ந்து நகராட்சி சுகாதார அலுவலர் ராஜசேகரனிடம் கேட்டபோது இதுபோன்று இனி நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுப்பதாகவும், வந்துள்ள அனைத்து பாக்கெட்டுகளும் சோதனை செய்யப்பட்டு வழங்கப்படும் என்றும் தெரிவித்தாக கூறப்படுகிறது. தொடர்ந்து நகராட்சி சேர்மன் மல்லிகா, சுகாதார அலுவலர் ராஜசேகரன் உள்பட நகராட்சி அதிகாரிகள் வீரவாஞ்சி நகருக்கு நேரில் சென்று முத்துமாரியம்மாளுக்கு உப்புக்கரைசல் பாக்கெட் வழங்கப்பட்ட அன் று அப்பகுதியில் வழங்கப்பட்ட உப்புக்கரைசல் பாக்கெட் அனைத்தையும் வாங்கி சோதித்தனர்.

இதில் வேறு யாருக்கும் இதுபோன்ற பாக்கெட் கிடைக்கவில்லை என்று ஆய்வு செய்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கர்ப்பிணிப் பெண்கள் நம்பிக்கையோடு வாங்கி உட்கொள்ளும் மருத்துவ பொருட்களை விநியோகம் செய்யும் முன்னர் நன்றாக சோதித்து பார்த்த பின்னர் பொதுமக்களுக்கு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Last Updated on Friday, 23 April 2010 07:14