Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கர்ப்பிணிக்கு காலாவதி மருந்து

Print PDF

தினமணி 23.04.2010

கர்ப்பிணிக்கு காலாவதி மருந்து

கோவில்பட்டி, ஏப். 22: கோவில்பட்டி நகராட்சி சுகாதார செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் கர்ப்பிணிக்கு காலாவதி மருந்தை வழங்கியதாக கோவில்பட்டி நகராட்சி ஆணையரிடம் வியாழக்கிழமை புகார் அளிக்கப்பட்டது.

கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலை மகாராஜபுரம் காலனியைச் சேர்ந்தவர் சுந்தரராஜ் மகன் செல்வம் (28) ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி முத்துமாரியம்மாள் (25), 7 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

கோவில்பட்டி நகராட்சி சுகாதார செவிலியர் மற்றும் உதவியாளர்கள் வீரவாஞ்சி நகரிலுள்ள ஆலய வளாகத்தில், அப் பகுதியிலுள்ள கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு தடுப்பூசி, மருந்துகளை வழங்கும் பணியில் புதன்கிழமை ஈடுபட்டனராம்.

அப்போது, முத்துமாரியம்மாளுக்கு உப்பு சர்க்கரை கரைசல் அடங்கிய 3 பாக்கெட்டுகளை அளித்தனராம். அதில், 2 பாக்கெட்டுகளில் தயாரிப்பு தேதி 06/2008 என்றும், காலாவதி தேதி தயாரிப்பிலிருந்து 18 மாதங்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த செல்வம், நகராட்சி ஆணையர் விஜயராகவனிடம் வியாழக்கிழமை புகார் அளித்தார்.

இதனையடுத்து, ஆணையர், சுகாதார அலுவலர் ராஜசேகரனை அழைத்து புதன்கிழமை எந்த பகுதியெல்லாம் சுகாதார ஊழியர்கள் முகாமிட்டார்களோ, அந்தப் பகுதிகளுக்குச் சென்று, காலாவதி மருந்து ஏதேனும் கொடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யும்படி உத்தரவிட்டார். அதன்பேரில், நகர்மன்றத் தலைவி மல்லிகா, சுகாதார அலுவலர் மற்றும் ஆய்வாளர்கள் சீனிவாசன், வெங்கடேஷன் உள்ளிட்டோர் ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர்.

பின்னர், சுகாதார அலுவலர் ராஜசேகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

புதன்கிழமை வழங்கப்பட்ட மருந்துகளை ஆய்வு செய்தோம். அதில், காலாவதியான மருந்துகள் விநியோகம் செய்யப்படவில்லை என்பது தெரியவந்தது. இருப்பினும், முத்துமாரியம்மாளுக்கு வழங்கிய உப்பு சர்க்கரை கரைசல் பாக்கெட் எவ்வாறு வழங்கப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இனி வரும் காலங்களில் மருந்துகள் வழங்கும்போது, காலாவதி தேதியை சரி பார்த்த பின் வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளோம் என்றார் அவர்.