Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கள்ளழகரைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு குடிநீர், மருத்துவ வசதி : மாநகராட்சி ஏற்பாடு

Print PDF

தினமணி 28.04.2010

கள்ளழகரைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு குடிநீர், மருத்துவ வசதி : மாநகராட்சி ஏற்பாடு

மதுரை, ஏப். 27: அருள்மிகு கள்ளழகர் வைகையாற்றில் புதன்கிழமை எழுந்தருளும் நிகழ்ச்சியைக் காண வரும் பக்தர்களுக்கு குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடுகள் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்குவதற்கு இந்தாண்டு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட முடியாத சூழல் ஏற்பட்டது.

இதனால் கள்ளழகர் இறங்கும் இடத்தில் மாநகராட்சி சார்பில் ரூ.10 லட்சம் செலவில் 2 போர்வெல் போடப்பட்டு, அதிலிருந்து தண்ணீர் எடுத்து, 6 அடி அகலத்தில், 200 அடி நீளத்தில், 1.25 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட தொட்டியில் சுமார் 10 ஆயிரம் லிட்டர் தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது.

இத்தொட்டியில் புதன்கிழமை அதிகாலை பல வண்ண மலர்கள் தூவுவதற்காக மலர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நகரில் பக்தர்களின் குடிநீர்த் தேவைக்காக 100}க்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் வசதியும், அண்ணா நகர், புதூர், மதிச்சியம் உள்ளிட்ட 25}க்கும் மேற்பட்ட இடங்களில் சிண்டெக்ஸ் தொட்டி வைத்தும் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் நகரில் பக்தர்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கழிப்பறை வசதிகளும், 5 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் வசதிகளையும் மாநகராட்சி நிர்வாகம் செய்துள்ளது. பக்தர்கள் வசதிக்காக 25}க்கும் மேற்பட்ட இடங்களில் குளியலறை வசதியும் செய்யப்பட்டுள்ளது.

கள்ளழகர் இறங்கும் வைகையாற்றுப் பகுதியில் இந்தாண்டு ஏராளமான தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. விழாவுக்குத் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.