Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தரமற்ற தேயிலைத் தூள் பரிசோதனை 828 இடங்களில் நடந்தது ஆய்வு! வாரிய செயல் இயக்குனர் பெருமிதம்

Print PDF

தினமலர் 04.05.2010

தரமற்ற தேயிலைத் தூள் பரிசோதனை 828 இடங்களில் நடந்தது ஆய்வு! வாரிய செயல் இயக்குனர் பெருமிதம்

குன்னூர்: ''கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும், மாநிலம் முழுவதும் 828 இடங்களில் கலப்பட, தரமற்ற தேயிலைத் தூள் விற்பனை குறித்த ஆய்வு, பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது,'' என, குன்னூர் தேயிலை வாரிய அதிகாரி கூறினார். நீலகிரி மாவட்ட பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிப்பது தேயிலை. கடந்த பல ஆண்டுகளுக்கு முன் கலப்பட தேயிலைத் தூள் வெளிச்சத்துக்கு வந்ததால், விலை வீழ்ச்சி ஏற்பட்டது. தேயிலை வாரியத்தின் அதிரடி நடவடிக்கையால், கலப்பட தேயிலைத் தூள் பிரச்னை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது; இருப்பினும், மாவட்டம் மட்டுமல்லாமல், மாநிலத்தின் பல பகுதிகளிலும் கலப்பட தேயிலைத் தூள் விற்பனை அதிகரித்துள்ளது. இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் 828 இடங்களில் ஆய்வு, சோதனை நடத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குன்னூர் தேயிலை வாரிய செயல் இயக்குனர் நசீம் கூறியதாவது: நீலகிரியில் தேயிலைத் தொழிலை மேம்படுத்த, தேயிலை தர மேம்பாட்டு திட்டம் கடந்த பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. பசுந்தேயிலை பறிப்பது முதல் தேயிலை தூள் தயாரித்து, அவற்றை விற்பனை செய்வது வரை, தரத்தை பேணி காப்பது அவசியமாக உள்ளது. தரத்தை முதன்மைப்படுத்த பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒரு கட்டமாக, கலப்பட, தரமற்ற தேயிலைத் தூள் விற்பனையை கட்டுப்படுத்த, தேயிலை வாரியம் முனைப்பு காட்டியது. கடந்த 5 ஆண்டுகளில், மாநிலம் முழுவதும் 828 இடங்களில் அதிரடி ரெய்டு, பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தேநீர் கடை, தேயிலை தூள் மொத்த விற்பனையாளர், குடோன், தொழிற்சாலை என பல மட்டத்திலும் ஆய்வு நடத்தப்பட்டது.

தரமற்ற 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிலோ தேயிலைத் தூள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. உணவு கலப்பட தடுப்புச் சட்டத்தின் கீழ் 73 தொழிற்சாலைகள், கலப்பட தேயிலைத் தூள் தயாரிப்பில் ஈடுபடுவது கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது; 50 தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளிடம் இருந்து தரமற்ற பசுந்தேயிலையை வாங்கி, உற்பத்திக்கு வழங்கிய ஏஜன்ட்கள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேயிலைத் தூளில் கலப்படம் செய்வதற்காக, அரிசி உமி, தேயிலைக் கழிவு உட்பட பொருட்களை ஏற்றி வந்த லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பல முறை எச்சரித்தும், கலப்பட தூள் தயாரிப்பை நிறுத்தாத இரு தொழிற்சாலைகள் மீது கிரிமினல் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது; 18 தொழிற்சாலைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சாயம் சேர்க்கப்பட்ட தூள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில், 19 மாவட்டங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. தேநீர் கடைகள், தேயிலைத் தூள் மொத்த வியாபாரிகள், மொத்தமாக வாங்கி பாக்கெட் செய்பவர்கள், தேயிலைத் தூள் விற்பனை செய்யப்படும் கடைகளில் இருந்த தூள் பரிசோதிக்கப்பட்டன. சாயம் கலந்த தூளை விற்ற பல வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, நசீம் கூறினார்.

'நீலகிரியில் பரவாயில்லை' தேயிலை வாரிய செயல் இயக்குனர் நசீம் கூறுகையில், ''சுற்றுலா ஸ்தலங்களில், தேயிலைத் தூளில் சாயம் கலந்து விற்கும் வியாபாரிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்ற புகாரை தொடர்ந்து, கோடை சீசன் களைகட்டியுள்ள நிலையில், ஊட்டி, குன்னூரில் உள்ள தேநீர் கடைகள், தேயிலைத் தூள் விற்பனை செய்யும் கடைகள், குடோன்களில் சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. 20 இடங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் 3 இடங்களில் மட்டுமே சாயம் கலந்த தேயிலைத் தூள் விற்பது தெரிய வந்துள்ளது; பறிமுதல் செய்யப்பட்ட தேயிலைத் தூள், ஆய்வுக் கூட பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது; முடிவு வந்த பின் தான், அந்த கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Last Updated on Tuesday, 04 May 2010 06:37