Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

உணவுக் கலப்பட தடைச் சட்ட விதி மீறல்: 3 பேர் மீது வழக்கு

Print PDF

தினமணி 04.05.2010

உணவுக் கலப்பட தடைச் சட்ட விதி மீறல்: 3 பேர் மீது வழக்கு

திருநெல்வேலி, மே 3: திருநெல்வேலியில் உணவுக் கலப்பட தடைச் சட்ட விதிமுறைகளை மீறி வாழைக்காய் சிப்ஸ் தயாரித்து விற்பனை செய்ததாக 3 பேர் மீது நீதிமன்றத்தில் வழக்குப் பதியப்பட்டது.

திருநெல்வேலி சந்திப்பு பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் மாநகர சுகாதார அலுவலர் கலு. சிவலங்கம் தலைமையில் உணவு ஆய்வாளர் அ.ரா. சங்கரலிங்கம் மற்றும் அதிகாரிகள் சில மாதங்களுக்கு முன்பு திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இச் சோதனையில் ஓர் இனிப்புக் கடையில் இருந்த வாழைக்காய் சிப்ஸில் தயாரிப்பு தேதி, வரிசை எண் உள்ளிட்ட விவரங்கள் அச்சிடப்படாமல் உணவுக் கலப்பட தடைச்சட்ட விதிமுறைகள் மீறப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த சிப்ஸ் தயாரிப்பாளர் அருண்குமார், அதை விற்பனை செய்த கடையின் உரிமையாளர் சரஸ்வதி, விற்பனையாளர் பாக்கியராஜ் ஆகியோர் மீது வழக்குத் தொடர தமிழக உணவுக் கலப்பட தடைச்சட்ட இணை இயக்குநருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இப் பரிந்துரைக்கு உணவுக் கலப்பட தடைச் சட்ட இயக்குநர் அனுமதி அளித்தார். அதன்பேரில், திருநெல்வேலி 4-வது நீதித் துறை நடுவர் மன்றத்தில் அருண்குமார், சரஸ்வதி, பாக்கியராஜ் ஆகியோர் மீது உணவு ஆய்வாளர் சங்கரலிங்கம் வழக்குத் தொடர்ந்தார்.