Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாட்டிறைச்சி பறிமுதல் செய்ய எதிர்ப்பு: அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம்

Print PDF

தினமணி 04.05.2010

மாட்டிறைச்சி பறிமுதல் செய்ய எதிர்ப்பு: அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம்

திருப்பூர், மே 3: திருப்பூரிலுள்ள மாட்டிறைச்சிக் கடைகளில் மாநகராட்சி சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் இறைச்சிகளை பறிமுதல் செய்யச் சென்றனர். இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இறைச்சி விற்பனையாளர்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூரில் 1,500-க்கு மேற்பட்ட இறைச்சிக் கடைகள் செயல்படுகின்றன. இந்த இறைச்சிக் கடைகளில் சுகாதரமற்ற முறையில் ஆடுகள் வெட்டி விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரை அடுத்து, மாநகராட்சி நிர்வாகம் அண்மையில் ஆடுவதைக் கூடம் ஒன்றைத் திறந்தது. ஆனால், அக்கூடத்தில் ஆடுகள் வெட்ட கூடுதல் கட்டணம் விதிக்கப்படுவதாகத் தெரிவித்து ஆட்டு இறைச்சி விற்பனையாளர்கள் ஆடுவதைக் கூடத்தை புறக்கணித்து வந்தனர்.

இதையடுத்து, மாநகராட்சி சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் கடந்த சில தினங்களாக திருப்பூரிலுள்ள இறைச்சிக்கடைகளில் சோதனை நடத்தி ஆடுவதைக் கூடத்தில் வெட்டப்படாத இறைச்சிகளை பறிமுதல் செய்தனர். அதன்படி, கடந்த சனிக்கிழமை 300 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.

அதன்தொடர்ச்சியாக, திங்கள்கிழமை காலை இறைச்சிக் கடைகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. திருப்பூர் பெரியகடைவீதி, நொய்யல் வீதி உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்த மாநகராட்சி அதிகாரிகள், அங்கு இருந்த மாட்டு இறைச்சிகளை பறிமுதல் செய்து லாரியின் ஏற்றினர்.

இதனால், ஆவேசமடைந்த விற்பனையாளர்கள், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி வாகனங்களை முற்றுகையிட்டனர். ஆட்டு இறைச்சிகளை மட்டுமே ஆடுவதைக் கூடத்தில் வெட்ட முடியும். மாட்டிறைச்சிகளை அங்கு வெட்ட முடியாது. அவ்வாறு இருக்கும் நிலையில் மாட்டிறைச்சிகளை பறிமுதல் செய்வதில் நியாயம் இல்லை என்று விற்பனையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதனால், அங்கு ஏற்பட்ட பரபரப்பை அடுத்து விரைந்து வந்த போலீஸôர், இப்பிரச்னை குறித்து மாநகராட்சி ஆணையரிடம் வலியுறுத்துமாறு விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தினர். இதையடுத்து, மாநகராட்சிஆணையர் ஆர்.ஜெயலட்சுமியை சந்தித்து இறைச்சி விற்பனையாளர்கள் முறையிட்டனர்.

அப்போது, சுகாதாரமான முறையில் மாட்டிறைச்சிகள் வெட்டி விற்பனை செய்ய வேண்டும் என்றும், சுகாதாரமில்லாமல் மாட்டிறைச்சி விற்பனை செய்யப்பட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சிஆணையர் தெரிவித்தார். அதன்பிறகு மாட்டிறைச்சி விற்பனையாளர்கள் கலைந்து சென்றனர்.