Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

யானைக்கால் நோய் தடுப்பு மாத்திரை வினியோகம் துவக்கம்

Print PDF

தினமலர் 01.03.2010

யானைக்கால் நோய் தடுப்பு மாத்திரை வினியோகம் துவக்கம்

சென்னை :தேசிய யானைக்கால் நோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ், சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத்துறை சார்பில், யானைக்கால் நோயைத் தடுப்பதற்கான மாத்திரைகள் சென்னையில் இரண்டு லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு வழங்கப்படுகின்றன.யானைக்கால் நோய் தடுப்பு மாத்திரைகள் வழங்கும் திட்டத்தை சைதாப்பேட்டையில் நடந்த நிகழ்ச்சியில், துவக்கி வைத்து, சென்னை மேயர் சுப்ரமணியன் பேசியதாவது:இந்தப் பணியில் 850 சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விடுபட்டவர்களுக்கு சுகாதாரத்துறை களப்பணியாளர் மூலம் நேரடியாக நாளையும், நாளை மறுநாளும் வீடு, வீடாகச் சென்று மாத்திரைகள் வழங்கப்படும்.இந்நோயால் பாதிக்கப்பட்ட 286 பேருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு சுப்ரமணியன் பேசினார்.

Last Updated on Monday, 01 March 2010 06:00
 

சுகாதார சீர்கேடு: நெல்லை புதிய பஸ் நிலையத்தில் 2 உணவகங்களை மூட உத்தரவு

Print PDF

தினமணி 26.02.2010

சுகாதார சீர்கேடு: நெல்லை புதிய பஸ் நிலையத்தில் 2 உணவகங்களை மூட உத்தரவு

திருநெல்வேலி, பிப்.25: திருநெல்வேலி புதிய பஸ் நிலையத்தில் சுகாதார சீர்கேட்டுடன் செயல்பட்ட 2 கடைகளை மூட மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

மேலும், அங்கு நடத்தப்பட்ட சோதனையில், சுகாதார சீர்கேட்டுடன் இருந்த உணவுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வேய்ந்தான்குளத்தில் உள்ள புதிய பஸ் நிலையத்தில் உணவகங்கள், டீகடைகள் மிகவும் சுகாதார சீர்கேட்டுடன் செயல்படுவதாக பயணிகள் புகார் கூறி வந்தனர். மேலும், இங்கு விற்கப்படும் உணவுப் பொருள்களும் சுகாதாரமற்று இருப்பதாகக் கூறப்பட்டு வந்தது.

இந் நிலையில், மாநகராட்சி ஆணையர் கா. பாஸ்கரன், செயற்பொறியாளர் நாராயணன் நாயர், மேலப்பாளையம் மண்டல உதவி ஆணையர் கருப்பசாமி ஆகியோர் புதிய பஸ் நிலையத்தில் வியாழக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அவர்கள் அங்கு செயல்படும் உணவகங்களில் ஆய்வு செய்தனர். இதில் நாகர்கோவில் பஸ்கள் நிற்கும் பகுதியில் இரு உணவகங்கள் சுகாதார சீர்கேட்டுடன் செயல்படுவதைக் கண்டறிந்த ஆணையர், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்பேரில் உணவு ஆய்வாளர் அ.ரா. சங்கரலிங்கம் மற்றும் அதிகாரிகள் அந்த 2 உணவகங்களையும் மூடினர். இதேபோல, அங்கு கடைகளில் சுகாதாரமின்றி விற்பனை செய்ய வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருள்களை பறிமுதல் செய்தனர்.

மேலும், பார்சல் செய்து வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருள்களில் சரியான முறையில் லேபிள் ஒட்டப்பட்டிருக்கிறதா என அவர்கள் சோதனை செய்தனர். சில கடைகளில் சரியான லேபிள் இல்லாமல் உணவுப் பொருள்களை விற்பனைக்கு வைத்திருப்பதை கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.

Last Updated on Friday, 26 February 2010 09:33
 

கலப்படம் அளவோடு இருக்க வேண்டும்

Print PDF

தினமணி 26.02.2010

கலப்படம் அளவோடு இருக்க வேண்டும்

கரூர், பிப். 25: கலப்படம் இல்லாமல் எந்தத் தொழிலும் இல்லை. ஆனால், அளவோடு இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார் கரூர் நகர்மன்றத் தலைவர் பி. சிவகாமசுந்தரி.

கரூர் நகரில் ஹோட்டல்கள், கடைகள் ஆகியவற்றில் ஏராளமான பொருள்கள் கலப்படம் செய்யப்பட்டு, விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து, உணவு கலப்பட தடைச் சட்டம், போலியான- தரக்குறைவான உணவு பொருள்கள் விற்பனையைத் தடுப்பது ஆகியன தொடர்பாக, வியாழக்கிழமை கரூர் நகராட்சி சார்பில் வியாபாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்து கரூர் நகர்மன்றத் தலைவர் பி. சிவகாமசுந்தரி பேசியது:

வியாபாரிகள் பொதுமக்களை தங்கள் குடும்ப உறுப்பினர்களாகக் கருதி, பொருள்களை விற்பனை செய்ய வேண்டும். கரூர் நகரில் உள்ள அனைவரையும் குடும்பமாகக் கருத வேண்டும். கலப்படம் இல்லாமல் எந்தத் தொழிலும் இல்லை. ஆனால், அளவோடு இருக்க வேண்டும்.

குறைந்த விலையில் தரமான பொருள்களை வழங்க அனைத்துச் சங்கங்களும் கூடி ஆலோசனை நடத்தி முடிவு எடுக்க வேண்டும். பொருள்களின் தரம், எடையளவு குறித்து பொதுமக்களிடமிருந்து ஏராளமான புகார்கள் வருகின்றன.

எனவே, வியாபாரிகள் தங்களது பொருள்களின் தரத்தை உயர்த்தி பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். குறிப்பாக, பிளாஸ்டிக் பொருள்களைத் தவிர்க்க வேண்டும். குப்பைகளை சாலையில் வீசாமல் குப்பைக் கூடையில் சேமித்து, நகராட்சி துப்புரவுப் பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றார் சிவகாமசுந்தரி.

சுகாதார ஆய்வாளர் செல்வம் பேசியது:

கலப்படும், தரமற்ற பொருள்கள் விற்பனை குறித்து பொதுமக்களிடமிருந்து ஏராளமான புகார்கள் தொடர்ந்து வந்துக் கொண்டே இருக்கின்றன. வியாபாரிகள் பொருள்களை வாங்கும் போது விற்பனைத் தேதி, அளவு, எடை, விலை ஆகியவற்றை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

முழு விவரங்களுடன் கொண்ட பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பொருள்களை மட்டுமே பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும்.

இதுதொடர்பாக நகராட்சி சுகாதாரத் துறை மூலம் 15 நாள்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். அப்போது, தரமில்லாத பொருள்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

கூட்டத்தில் மளிகை வியாபாரிகள், பால் வியாபாரிகள், உணவுக் கடை நடத்துவோர், இனிப்பு பலகாரம் விற்பனை செய்பவோர் உள்ளிட்ட பல்வேறு வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

நகராட்சி ஆணையர் (பொ) சி. ராஜா, நகர்நல அலுவலர் கே. சந்தோஷ்குமார், நுகர்வோர் அமைப்பின் மாநில நிர்வாகி கே. சொக்கலிங்கம் உள்ளிட்டோரும் பேசினர்.

Last Updated on Friday, 26 February 2010 09:24
 


Page 335 of 519