Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

கலப்பட டீ குடித்தால் புற்றுநோய், சிறுநீரக கோளாறு உதவி நகர்நல அலுவலர் எச்சரிக்கை

Print PDF

தினமலர் 26.02.2010

கலப்பட டீ குடித்தால் புற்றுநோய், சிறுநீரக கோளாறு உதவி நகர்நல அலுவலர் எச்சரிக்கை

கோவை : ""கோவை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சில ஓட்டல்கள், டீக்கடைகளில் கலப்படம் செய்த டீ விற்பனை செய்யப்படுகிறது. போலி சாயம் ஏற்றப்பட்டு தயாரிக்கப்படும் இவ்வகை கலப்பட டீயை குடித்தால் புற்றுநோய், கிட்னி கோளாறுகள் ஏற்படும்,'' என, மாநகராட்சி உதவி நகர்நல அலுவலர் சுமதி எச்சரித்துள்ளார். கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கலப்பட டீத்தூள் விற்பனை செய்யப்படுகிறது. சிறு டீக்கடைகள் முதல் பெரிய ஓட்டல்கள் வரை போலி டீத்தூளினால் தயாரிக்கப்பட்ட டீயை விற்று லாபம் பார்த்து வருகின்றன. நீண்ட நாட்களாக இந்த டீயை குடிப்ப வர்கள் வயிற்று உபாதை, சிறுநீரக கோளாறுகளால் அவதிப்படுகின்றனர். பெரிய பிராண்டுகளின் பெயரில் சிறு மாற்றங்கள் செய்து, அசல் "பேக்கிங்' போல் விற்பனை செய்வதால், மக்களால் இவற்றை கண்டுபிடிக்க முடிவதில்லை. ஒரு கிலோ டீத்தூளில் அதிக எண்ணிக்கையிலான டீ தயாரிக்க டீக்கடை, ஓட்டல் உரிமையாளர்கள் இவ்வகை டீத்தூளை குறைந்த விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர். இதைத் தடுக்க சுகாதாரத் துறையினர் சோதனையிடுகின்றனர். அடிக்கடி ரெய்டுகள் நடத்தப்படுகின்றன. கோவையில் சமீபத்தில் ஒப்பணக்கார வீதி, ஆர்.எஸ்.புரம், தடாகம் ரோடு, வேலாண்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 20 கடைகளில் ரெய்டு நடத்த பட்டது. கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த டீத்தூள் பாக் கெட்டுகள் சோதனைக்காக சேகரிக்கப் பட்டன. இவை, சேலத்தில் உள்ள உணவு கலப்பட பிரிவுக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளன.இது பற்றி மாநகராட்சி உதவி நகர் நல அலுவலர் சுமதி கூறியதாவது: டீத்தூளின் தரம் பற்றி பேக்கரியில் கேட்டபோது, இரு பிராண்டுகளை மிக்ஸ் செய்து வைத்திருப்பதாக கூறினர். அவற்றின் பில்களையும் காண்பித்தனர். இரு பிராண்டுகளையும் சுடுநீரில் தனியாக பரிசோதித்து பார்த்தபோது லேசாக கலர் இருந்தது. மிக்ஸ் செய்து பார்த்தபோது அடர் கலர் கிடைத்தது. இதில் இருந்து பிரபல பிராண்டுகளின் பெயரில் போலி டீத்தூள் விற்பனை நடப்பது உறுதியாகிறது. சிறு கடைகள் முதல் பெரிய ஓட்டல்கள் வரை இதே போன்ற டீத்தூளைதான் பயன்படுத்துகின்றனர். இதற்கு முன் நடந்த ரெய்டில் நடத்தப்பட்ட நான்கு சாம்பிள்களில், இரு சாம்பிள்கள் போலியானவை என அறிக்கை வந்துள்ளது. கலப்பட டீத்தூளினால் தயாரிக்கப்பட்ட டீயை நீண்ட நாள் குடிப்பவர்களுக்கு புற்றுநோய், சிறுநீர் கோளாறு ஏற்படுவது உறுதி. இதில் சேர்க்கப்படும் போலி நிறமிகள் பெட்ரோலியம் பொருட்களால் தயாரிக்கப்படுபவை. இவ்வாறு, மாநகராட்சி நகர் நல அலுவலர் சுமதி கூறினார்.

போலி டீத்தூள் கண்டுபிடிக்க... :""கடைகளில் சில்லறையாகவோ, மொத்தமாகவோ டீத்தூள் வாங்குபவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். குளிர்ந்த நீரில் டீத் தூளை போடும்போது சாயம் வந் தால், அது நிச்சயமாக கலப்பட டீத் தூள்தான். ஒரிஜினல் டீத்தூளை, சுடுநீரில் கலக்கினால் மட்டுமே நிறம் கிடைக்கும். பிரபல பிராண்டுகளை பேக்கிங் ஆக வாங்குபவர்களும் வீட்டில் இந்த சோதனையை செய்து பார்க்கலாம். மக்கள் விழிப்புணர்வு மூலம் மட்டுமே கலப்பட டீத்தூள் விற்பனையை தடுக்க முடியும். போலி டீத்தூள் என கண்டறிந்தால், 0422-2395156 என்ற எண்ணுக்கு தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார் சுமதி.

Last Updated on Friday, 26 February 2010 06:02
 

வீடு தேடி சென்று ரத்தம், சிறுநீர் பரிசோதனைகள் மாநகராட்சியில் புதிய திட்டம் துவக்கம்

Print PDF

தினமலர் 26.02.2010

வீடு தேடி சென்று ரத்தம், சிறுநீர் பரிசோதனைகள் மாநகராட்சியில் புதிய திட்டம் துவக்கம்

புளியந்தோப்பு :சென்னை மாநகராட்சி சார்பில், மக்கள் வசதிக்காக பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில்நாட்டிலேயே முதல் முறையாக, பொதுமக்கள் வீடுகளுக்கே சென்று ரத்தம், சிறுநீர் உள்ளிட்ட பரிசோதனைகளை மேற் கொண்டு ஆய்வு அறிக்கைகளை வழங்கும் முன்மாதிரி திட்டம் துவங்கப் பட்டுள்ளது.

பெரம்பூர், புரசைவாக்கம், எழும்பூர், நுங்கம்பாக்கம், சைதாப் பேட்டை, திருவான்மியூரில் இயங்கும் மாநகராட்சி மருத்துவ சோதனை கூடங்கள் மூலம் இத்திட்டம் குறைந்த கட்டணத்தில் செயல்படுத்தப் படவுள்ளது. இத்திட்டத்தை சென்னை புளியந் தோப்பில் நேற்று துவக்கி வைத்து மேயர் சுப்ரமணியம் பேசியதாவது: வீடு தேடி சென்று பொது மக்களுக்கு பல்வேறு உடல் பரிசோதனைகள் செய்யும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வேலைக்கு செல்பவர்கள், தனியார் லேப்களுக்கு சென்று பரிசோதனைகள் செய்ய, ஒரு நாள் விடுமுறை எடுக்க வேண்டும்.ஆனால், அவர்கள் வீட்டில் இருந்தபடி 1913 என்ற தொலைபேசி எண்ணில் அழைத்தால் மாநகராட்சி லேப் டெக்னீசியன்கள் அவர்கள் வீடுகளுக்கே சென்று பரிசோதனைகளை செய்வர்.ஆய்வறிக்கை முடிந்தவுடன் அதை வீட்டிற்கே எடுத்து வந்து வழங்குவர். ரத்த பரிசோதனை செய்வதற்கு 15 ரூபாயும், சிறுநீர் பரிசோதனை செய்ய 10 ரூபாயும் கட்டணம் செலுத்தினால் போதுமானது.இவ்வாறு மேயர் சுப்பிரமணியம் பேசினார்.விழாவில், துணை மேயர் சத்தியபாமா, மாநகராட்சி கமிஷனர் ராஜேஷ் லக்கானி, மாநகராட்சி சுகாதாரத் துறை துணை கமிஷனர் ஜோதி நிர்மலா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர

Last Updated on Friday, 26 February 2010 06:00
 

28.5 கிலோ கலப்பட டீ தூள் பறிமுதல்

Print PDF

தினமணி 25.02.2010

28.5 கிலோ கலப்பட டீ தூள் பறிமுதல்

தருமபுரி, பிப். 24: தருமபுரி மாவட்டத்தில் காரிமங்கலம், தீர்த்தமலை பகுதிகளில் உள்ள டீ கடைகளில் புதன்கிழமை பொது சுகாதாரத் துறையினர் மேற்கொண்ட ஆய்வில் 28.5 கிலோ கலப்பட டீ தூளை பறிமுதல் செய்துள்ளனர்.

தருமபுரி மாவட்ட பொதுசுகாதாரத் துறை துணை இயக்குநர் என்.அய்யனார் உத்தரவின் பேரில் காரிமங்கலம் பகுதிகளில் உள்ள டீ கடைகளில் வட்டார மருத்துவ அலுவலர் த.சரவணன், காரிமங்கலம் ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலர் எஸ்.ஜெகன்மோகன், உணவு ஆய்வாளர் பி.நாகராஜன் உள்ளிட்டோர் டீ தூளின் தரம் குறித்து ஆய்வு செய்தனர். இதில் 5 கடைகளில் பயன்படுத்தப்பட்ட 4 கிலோ கலப்பட டீ தூளை பறிமுதல் செய்தனர்.

அதேபோல தீர்த்தமலை பகுதிகளில் உள்ள டீ கடைகளில் பயன்படுத்திய 23.5 கிலோ கலப்பட டீ தூளை, தீர்த்தமலை வட்டார மருத்துவ அலுவலர் கே.எஸ்.ராஜா, உணவு ஆய்வாளர் ஏ.சேகர் உள்ளிட்டோர் பறிமுதல் செய்தனர்.

கலப்பட டீ தூளை பயன்படுத்தியவர்கள் மீது உணவு கலப்பட தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சுகாதாரத் துறை துணை இயக்குநர் என். அய்யனார் தெரிவித்துள்ளார்.

Last Updated on Thursday, 25 February 2010 11:12
 


Page 337 of 519