Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

மக்கள் முன்னிலையில் ஆடு அறுக்கக்கூடாது விதிமீறும் இறைச்சி கடைக்காரர்கள் மீது நடவடிக்கை

Print PDF

தினகரன் 05.02.2010

மக்கள் முன்னிலையில் ஆடு அறுக்கக்கூடாது விதிமீறும் இறைச்சி கடைக்காரர்கள் மீது நடவடிக்கை

தேனி : தேனி நகரில் மக்கள் முன்னிலையில் ஆடு அறுக்கக்கூடாது, நகராட்சிக்கு சொந்தமான தொட்டியில்தான் அறுக்க வேண்டும்; மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் மோனி எச்சரித்துள்ளார்.

தேனி அல்லிநகரம் நகராட்சியில் சுமார் 75க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகள் உள்ளன. இந்த கடைக்காரர்கள் ஆடுகளை அறுக்க வாரச்சந்தை வளாகத்தில் நகராட்சிக்கு சொந்தமான ஆடு அடிக்கும் தொட்டி உள்ளது. இங்குதான் ஆடுகளை அறுத்து கடைகளுக்கு கொண்டு செல்ல வேண்டும். மக்கள் மத்தியில் ஆடுகளை உயிரோடு அறுப்பதை தடுக்கவே இந்த முறையை தமிழகம் முழுவதும் அரசு கடைப்பிடித்து வருகிறது.

தேனி மற்றும் அல்லிநகரம் பகுதியை பொறுத்தவரையில், பெரும்பாலான இறைச்சி கடைகளில் அதிகாலை வேளைகளில் பொதுமக்கள் முன்னிலையில் உயிருடன் ஆடுகளை அறுப்பது வாடிக்கையாகியுள்ளது. பொதுமக்கள் வசிக்கும் இடங்கள் அல்லது இறைச்சி கடைகளில் ஆடுகளை உயிருடன் வெட்டக்கூடாது, ஆடு அடிக்கும் தொட்டியில்தான் அறுக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என தேனி நகராட்சிக்கு அறிவுறுத்தி கலெக்டர் முத்துவீரன் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார். இதன்பேரில், நகராட்சியும் பலமுறை அறிவுறுத்தியும், இறைச்சி கடைக்காரர்கள் கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில் நேற்று நகராட்சி ஊழியர்கள் முதல் கட்டமாக, நகராட்சி பகுதியில் உள்ள இறைச்சி கடைகளில் இறைச்சி வெட்டும் கட்டைகள், ஆக்கிரமிப்பு கூரைகளை அகற்றினர். இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் மோனி கூறுகையில், ‘பலமுறை அறிவுறுத்தியும் ஆடுகளை உயிருடன் அறுக்கும் இறைச்சி கடைகளில் உள்ள கட்டைகளை அகற்றம் செய்து வருகிறோம். விதி மீறுபவர்கள் மீது நகராட்சி சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்Õ என்றார்.

Last Updated on Friday, 05 February 2010 11:36
 

கெட்டுபோன உணவுகள் பறிமுதல் 5 ஓட்டல்களுக்கு நோட்டீஸ் வேலூரில் மாநகராட்சி அதிகாரி அதிரடி

Print PDF

தினகரன் 05.02.2010

கெட்டுபோன உணவுகள் பறிமுதல் 5 ஓட்டல்களுக்கு நோட்டீஸ் வேலூரில் மாநகராட்சி அதிகாரி அதிரடி

வேலூர் : வேலூரில் மாநகராட்சி அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் ஓட்டல்களில் சேமித்து வைத்திருந்த கெட்டுபோன உணவுகள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன. இது தொடர்பாக 5 ஓட்டல்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

ஓட்டல்களில் மீதியாகும் உணவு பொருட்களை குளிர்சாதன பெட்டிகளில் வைத்து விட்டு மீண்டும் அவற்றை விற்பனை செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் சோதனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும்படி அரசு உத்தரவிட்டது.

அதன்படி வேலூர் மாநகராட்சி நகர்நல அலுவலர் பிரியம்வதா தலைமையில் உணவு ஆய்வாளர் கவுரிசுந்தர், துப்புரவு ஆய்வாளர் முருகன் ஆகியோர் நேற்று பல்வேறு ஓட்டல்களுக்கு அதிரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது லேபிள் இல்லாத உணவு வகைகள் மற்றும் மீதியாகும் உணவுபொருட்களை குளிர்சாதன பெட்டிகளில் வைத்து அவற்றை மறுநாள் விற்பனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் சில உணவுபொருட்கள் மீது பூஞ்சை படர்ந்திருந்தது.கெட்டுபோன சட்னி வகைகள், ரொட்டிக்கு பயன்படுத்தும் சைடிஷ், ஊறுகாய் என அனைத்தையும் பறிமுதல் செய்து அழித்தனர்.

இதுகுறித்து நகரமைப்பு அலுவலர் பிரியம்வதா கூறியதாவது: கெட்டுப்போன உணவுகளை பாதுகாத்து வைத்திருந்த 5 ஓட்டல்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சமையல் செய்பவர்கள், பரிமாறுபவர்கள் கண்டிப்பாக கையுறை அணியும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமையல் செய்த உணவு வகைகளை குளிர்சாதன பெட்டியில் வைக்கக்கூடாது என்பது போன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் ஜோலார்பேட்டை நகராட்சி பகுதியில் உள்ள உணவகங்கள், டீக்கடைகள், இனிப்பகங்களில் திருப்பத்தூர் வட்டார உணவு ஆய்வாளர் நந்தகோபால், சுகாதார ஆய்வாளர் கனகராஜ் ஆகியோர் தலைமையில் சோதனை நடத்தினர்.

Last Updated on Friday, 05 February 2010 11:23
 

கெட்டுப்போன இறைச்சி, தரமற்ற உணவு வேலூரில் 3 உணவகங்களுக்கு விரைவில் நோட்டீஸ்!

Print PDF

தினமணி 05.02.2010

கெட்டுப்போன இறைச்சி, தரமற்ற உணவு வேலூரில் 3 உணவகங்களுக்கு விரைவில் நோட்டீஸ்!

வேலூர், பிப். 4: வேலூர் மாநகராட்சியில் தரமற்ற இறைச்சி மற்றும் உணவு வகைகளைப் பரிமாறியதாக 3 உணவகங்களுக்கு வெள்ளிக்கிழமை நோட்டீஸ் விநியோகிக்கப்பட உள்ளது என்று மாநகர சுகாதார அலுவலர் சி.ஆர்.பிரியம்வதா கூறினார்.

வேலூர் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், ஆபீசர்ஸ் லைன் பகுதிகளில் உள்ள உணவகங்களில் அவர் வியாழக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

சில உணவகங்களில் கோழி, ஆட்டிறைச்சிகள், காடைகள் உள்ளிட்டவை புழுப் பிடித்த நிலையில், குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்தன. இவற்றைப் பறிமுதல் செய்து, குப்பையில் கொட்ட அவர் உத்தரவிட்டார். காலை, மாலை என இரு வேளைகளில் மொத்தம் 8 உணவகங்களில் இந்த ஆய்வு மேட்கொள்ளப்பட்டது.

சமைக்கப்பட்ட உணவுகளை குளிர்சாதனப் பெட்டிகளில் நீண்ட நாள்கள் வைத்து பொதுமக்களுக்குப் பரிமாறக்கூடாது. அப்படிப் பறிமாறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவக உரிமையாளர்களை எச்சரித்தார். குளிர்சாதனப் பெட்டிகளில் உணவு வகைகளை நீண்ட நாள்கள் வைத்து பறிமாறுவதால் பொதுமக்களின் உடல் நலனில் பாதிப்பு ஏற்படுகிறது என்றும் கூறினார். 6

மாதங்களுக்கு ஒரு முறை சமையலறைகள் வெள்ளையடிக்கப்பட வேண்டும். சமையலர்கள் மற்றும் உணவு பரிமாறுபவர்களுக்கான தரச் சான்று பெற்றிருக்க வேண்டும். கையுறை அணிந்து உணவு பரிமாற வேண்டும். மசாலா பொருள்கள் திறந்த நிலையில் வைத்திருக்கக் கூடாது என்பன போன்ற கட்டுப்பாடுகளை உணவகங்கள் கடைப்பிடிக்க வேண்டும். தவறினால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பின்னர் தினமணி செய்தியாளரிடம் அவர் கூறியதாவது:

சாப்பிடத் தகுதியற்ற உணவு வகைகளை வைத்திருந்த 3 உணவகங்களுக்கு வரும் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் விநியோகிக்கப்படும். அவற்றில் உணவகங்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து விளக்கப்படும். மாநகராட்சியால் கூறப்படும் நடைமுறைகளைப் பின்பற்றாத உணவகங்களில் அடுத்த 10 நாள்களில் மீண்டும் சோதனை நடத்தப்பட்டு 2-வது முறையாக நோட்டீஸ் வழங்கப்படும். பின்னர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.

தரமற்ற உணவு வகைகள் பரிமாறப்படுவதாகப் பொதுமக்களிடம் இருந்தும், சுகாதார நலத்துறை இயக்குநரகத்திலிருந்தும் வந்த புகாரையொட்டி இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது மேலும் தொடரும் என்றார் பிரியம்வதா.

 


Page 368 of 519