Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

ஓட்டல், டீக்கடைகளில் சுகாதாரம் கேள்விக்குறி : தேவை அதிகாரிகளின் நடவடிக்கை

Print PDF

தினமலர் 01.02.2010

ஓட்டல், டீக்கடைகளில் சுகாதாரம் கேள்விக்குறி : தேவை அதிகாரிகளின் நடவடிக்கை

சிவகங்கை : சுகாதாரமற்ற முறையில் செயல்படும் ஓட்டல்கள் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கிராமப்புறங்களை அதிகம் கொண்ட சிவகங்கையில் தொழில் வளர்ச்சி இல்லாத நிலையில் பெரும்பாலானோருக்கு தெரிந்த தொழில் வடை கடை அல்லது இட்லி கடை நடத்துவது தான். சந்து, சாக்கடை, குப்பைமேடு என்று எதையும் பார்க்காமல் கூட்டம் அதிகம் நிறைந்த பகுதிகளில் ஒரு டேபிளை வைத்து இட்லி, வடைபோன்றவைகளை சுட்டு விற்பனை செய்கின்றனர். இதற்கு வாடகை, லைசென்ஸ், கட்டடம், பெரிய அளவில் முதலீடு எதுவும் தேவையில்லை. அதனால் இந்த தொழிலை பலரும் எளிதாக துவக்கி விடுகின்றனர்.

நகராட்சி சட்டப்படி கடைகளில் விற்கப்படும் உணவு பொருட்கள், சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்டு இருக்க வேண்டும். கலப்படம் செய்யப்பட்டு இருக்க கூடாது. சுற்றுச்சூழல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கழிவு நீரை முறைப்படி வெளியேற்றி, பொது சுகாதாரத்தை மாசுபடுத்த கூடாது.

சிவகங்கை மாவட்டம் முழுவதும் உள்ள பெரும்பாலான ஓட்டல் கள், டீக்கடைகளில் இந்த நடைமுறையை கடைப்பிடிப்பதில்லை. சுகாதாரமற்ற சூழ்நிலையில் விற்கப்படும் பொருட்கள் அமோகமாக விற்பனை செய்யப்படுகிறது. சமையலுக்கு பெயர் போன காரைக்குடி போன்ற பகுதியை சேர்ந்த மக்களும் இவற்றை ருசித்து சாப்பிடுகின்றனர். சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டிய நகராட்சியும் கொள்வதில்லை.

லைசென்ஸ்: ஓட்டல் அல்லது டீக்கடை துவங்க வேண்டுமானால் மாநகராட்சியில் "டி அண்டு ஓ லைசென்ஸ்' என அழைக்கப்படும் அபாயகரமானதும், ஆட்சேபகராமான தொழிலுக்கான உரிமம் பெறப்பட வேண்டும். இதில் லைசென்ஸ்சிற்கு 100 ரூபாயும், உணவு கலப்பட தடை சட்ட பிரிவிற்கு 25 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும்.
தொழிலைப் பொறுத்து நகராட்சி, பேரூராட்சிகளில் கட்டணம் மாறுபடும். ஒவ்வொரு வருடமும் லைசென்ஸை புதுப்பிக்க வேண்டும். சுகாதாரமற்ற ஓட்டல்கள், டீக்கடைகளின் லைசென்சை நகராட்சி ரத்து செய்யலாம். அல்லது அபராதம் விதிக்கலாம். மாவட்டத்தில் ஆய்வாளர்கள், பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல காரணங்களை கூறி ஓட்டல்களில் சோதனை செய்வதில்லை.

நகராட்சி அதிகாரி கூறியதாவது: மாவட்டத்தில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் இருக்கிறது. இதில் 200 க்கும் மேற்பட்ட கடைகள் லைசென்ஸ் இல்லாமல் நடத்தப்படுகிறது. லைசென்ஸ் பெறாத கடைகள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த ஆண்டுக்கு பிப்.28க்குள் புதுப்பித்து, புதிய லைசென்சிற்கு விண்ணப்பிப்பவர்களுக்கு அபராதம் கிடையாது. அடுத்த மாதம் முதல் லைசென்ஸ் பெறாத கடைகள் மீது உணவு கலப்பட தடை சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

டாக்டர் அன்புவேல் கூறியதாவது: நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களில் அதிகமாக எண்ணெய் கலந்த பொருட்களை உண்பதை தவிர்க்க வேண்டும். ஒரு முறை சுடவைத்த எண்ணெயை மீண்டும் சுடவைப்பதால் அது கார்சினோசென் எனும் வேதப்பொருளாக மாறி உடல் நலத்திற்கு கேடுவிளைவிக்கிறது. எண்ணெய் கலந்த பொருட்களை அதிகம் உட்கொள்வதால் அல்சர், ஒவ்வாமை, ரத்த அழுத்தம் போன்ற நோய்களும் அதனை தொடர்ந்து குடல் கேன்சர், பக்கவாதம், இருதய நோய், கல்லீரல் புற்று நோய்களும் வர அதிக வாய்ப்பு உள்ளது, என்றார்.பொது மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க ஓட்டல், டீக்கடைகளில் அடிக்கடி சோதனை செய்ய நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Last Updated on Monday, 01 February 2010 06:29
 

சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவ முகாம்

Print PDF

தினகரன் 31.01.2010

சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவ முகாம்

சென்னை : சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவ முகாம், சென்னையில் 30 இடங்களில் மாநகராட்சி நடத்தியது. இதில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து சர்க்கரை நோய்க்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம்களை, சென்னையில் 30 இடங்களில் மாநகராட்சி நடத்தியது. திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடந்த முகாமை, மேயர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார்.

பின்னர், மேயர் பேசியதாவது:

சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை, பொது மருத்துவ முகாம்களை அவ்வப்போது நடத்தி வருகிறது. ஆனால், சர்க்கரை நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, சிகிச்சை அளிப்பதற்கான சிறப்பு மருத்துவ முகாம், இப்போதுதான் முதன் முறையாக நடத்தப்படுகிறது

இந்தியாவிலுள்ள வேறு எந்த மாநகராட்சியிலும் இதுபோன்ற சிறப்பு முகாம் நடத்தவில்லை. மாநகராட்சி மருத்துவமனை, அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை ஆகியவற்றின் 300க்கும் அதிகமான டாக்டர்கள், இந்த முகாம்களில் பங்கேற்று, நோயாளிகளை பரிசோதித்து ஆலோசனை மற்றும் சிகிச்சை அளிக்கின்றனர்.

சென்னையில் சுமார் 3 லட்சம் பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த முகாமில், சர்க்கரை இருப்பது கண்டறிந்தால் தேவையான மருந்து, மாத்திரைகளும் இலவசமாக வழங்கப்படுகிறது. தொடர் சிகிச்சைக்கும் பரிந்துரைக்கப்படுகிறது. சர்க்கரை நோயால் பாதித்தவர்களின் கண், கால், இதயம் ஆகியவையும் பரிசோதிக்கப்படுகிறது.

சர்க்கரை நோயாளிகளுக்கு மாநகராட்சி மருத்துவமனைகளில் மாதம் இருமுறை இலவசமாக மருந்துகள் வழங்கப்படுகிறது. சர்க்கரை நோய் கண்டறிய 300 குளுகோ மீட்டர்களும், 12 செமி ஆட்டோ அனலைசர்களும் மாநகராட்சி மருத்துவமனைகளில் வாங்கி வைக்கப்பட்டுள்ளன. அடிப்படை வசதிகளுக்கு மட்டும் அல்லாமல், மக்களின் சுகாதாரத்தை பேணிக் காக்கவும் மாநகராட்சி தொடர்ந்து நடவடிக்கை எடுக்கிறது. இவ்வாறு மேயர் பேசினார்.

துணைமேயர் ஆர்.சத்யபாமா மன்ற ஆளுங்கட்சி தலைவர் ராமலிங்கம், மன்ற எதிர்க்கட்சி தலைவர் சைதை ரவி, துணை ஆணையர் (சுகாதாரம்) ஜோதி நிர்மலா, சுகாதாரக்குழு தலைவர் மணிவேலன், கவுன்சிலர் வனஜா ஆகியோர் பங்கேற்றனர்.

முகாமில் மேயர், மன்ற எதிர்க்கட்சித் தலைவரும் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர். முகாமில், மொத்தம் 16,700 பேர் பரிசோதனை செய்து கொண்டனர். இதில், ஏற்கனவே நோய் கண்டறியப்பட்டவர்கள் 3,620 பேர். புதிதாக 2,840 பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

Last Updated on Sunday, 31 January 2010 06:55
 

மாநகராட்சி சார்பில் 'மெகா' மருத்துவ முகாம்

Print PDF

தினமலர் 31.01.2010

மாநகராட்சி சார்பில் 'மெகா' மருத்துவ முகாம்

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில், தனியார் டாக்டர்களின் உதவியுடன் நீரிழிவு நோய்க்கான சிறப்பு, "மெகா' மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத் துறை சார்பில், நீரிழிவு நோய்க்கான 30 சிறப்பு, "மெகா மருத்துவ முகாம்கள் நடத்தப்பட் டன. திருவல்லிக்கேணி நெடுஞ் சாலை மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடத்தப்பட்ட மருத் துவ முகாமை மேயர் சுப்ரமணியன் நேற்று காலை துவக்கி வைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது: நீரிழிவு நோய்க்கான சிறப்பு மருத்துவ முகாம், சென்னை நகரில் 30 இடங்களில் நடத்தப்படுகிறது. நீரிழிவு நோய் வந்தால் முழுவதும் குணம் அடையாது. அதற்கு முறையான சிகிச்சை மட்டுமே பெற வேண்டும். உணவுப்பழக்க வழக்கங்களை முறையாக கையாள்வதோடு, தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். சென்னை நகரில் மூன்று லட்சம் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே, இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க, சென்னையில் இருக்கும் தனியார் நீரிழிவு நோய்க்கான சிகிச்சை அளிக்கும் டாக்டர்களை அழைத்து, அவர்களின் ஒத்துழைப்புடன் மாநகராட்சி டாக்டர்களும் இணைந்து, மொத்தம் 300 பேர் 30 முகாம்களில் சிகிச்சை அளிக்கின்றனர்.

நீரிழிவு நோய்க்காக தனிப் பட்ட முறையில் 30 மருத்துவ முகாம்கள் நடத்தப்படுவது, இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னை மாநகராட்சியில் தான், இந்த முகாமில் நீரிழிவு நோயை கண்டறிய 12 "செமி ஆட்டோ அனலைசர்' மற்றும் 90 "குளுக்கோ மீட்டர்கள்' பயன் படுத்தப்பட்டன. இந்த முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு நீரிழிவு நோய் கண்டறியப்பட்டால், அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படும். ஏற்கனவே, சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு, இந்த நோயின் கட்டுப்பாடு நிலை தெரியப் படுத்தப்படும். இந்தநோய் கண்டறிந்தவர்களின் இதயம், சிறுநீரகம், கண் கள், பாதங்கள் ஆகியவற்றின் பாதிப்புகளை நிபுணர்களை கொண்டு பரிசோதித்து, சிகிச்சை அளிக்கப்படும். முறையான உணவு முறைகள், எளிய உடற்பயிற்சிகள் குறித்தும் ஆலோசனைகள் வழங் கப்படும். சென்னை மாநகராட்சியில் 97 ஆரம்ப சுகாதார நிலையங்களும், 74 மகப்பேறு மருத்துவமனைகளும் உள்ளன. இந்த 173 மருத்துவமனைகளிலும், பொதுமக்களுக்கு இலவசமாக சர்க்கரை நோயை கண்டறிய, மாநகராட்சி சார்பில், 300 "குளுக்கோ மீட்டர்கள்' வாங்கி கொடுக்கப்பட்டுள்ளன. சர்க்கரை நோய்க்கான மருந்து மாத்திரைகள் மாநகராட்சியின் அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களிலும் தொடர்ந்து மாதம் இருமுறை வழங்கப்படுகிறது. இவ்வாறு மேயர் கூறினார்.

இந்த முகாமில் 16 ஆயிரத்து 700 பேர் கலந்துகொண்டனர். இதில் 3,795 பேர் ஏற்கனவே நீரிழிவு நோயினால் பாதிக்கப் பட்டிருந்தனர். அவர்களுக்கு மருத்துவ சிகிச்சையுடன் அறிவுரையும் வழங்கப்பட்டது. 2,568 பேர் புதிதாக நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருப் பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களுக்கு தொடர் சிகிச்சைக் கும் அனுமதி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், மன்ற ஆளுங் கட்சித் தலைவர் ராமலிங்கம், எதிர்க்கட்சித் தலைவர் சைதை ரவி, சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

Last Updated on Sunday, 31 January 2010 06:38
 


Page 376 of 519