Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

ராசிபுரம் பகுதியில் தீவிர கொசு ஒழிப்பு பணி துவக்கம்

Print PDF

தினமணி 28.01.2010

ராசிபுரம் பகுதியில் தீவிர கொசு ஒழிப்பு பணி துவக்கம்

ராசிபுரம், ஜன.27: நாமக்கல் மாவட்ட சுகாதாரத் துறை சார்பில் ராசிபுரம் ஒன்றியத்தை கொசுக்கள் இல்லா வட்டாரமாக நடைமுறைப்படுத்த திட்டமிட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் முதல் நடவடிக்கையாக 40 சுகாதார ஆய்வாளர்களைக் கொண்டு வீடுவீடாகச் சென்று கொசு உற்பத்தியாகும் இடங்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. இப்பணி தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு செயல்படுத்தப்பட உள்ளது.

இதன்படி ஒவ்வொரு பஞ்சாயத்திலும் கிராம நல துப்புரவுக் குழுவில் உள்ள 26 பெண் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்கள் கொசு உற்பத்தியாகும் இடங்களான தண்ணீர்த் தொட்டி, பானை, மேல்நிலைத் தொட்டி, கிணறு ஆகியவற்றில் அபேட் என்ற கொசு மருந்து ஊற்றுவார்கள். மேலும் தற்காலிகமாக உள்ள டயர், உடைந்த பானை, தேங்காய் ஓடு, ஆகியவற்றை அகற்றிவிட்டு நீர் தேங்காவண்ணம் செய்வார்கள். இப்பணி முதல்கட்டமாக சிங்களாந்தபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் துவங்கப்பட்டது.

ராசிபுரம் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.ராமசுவாமி மற்றும் ஒன்றிய குழுத் தலைவர் விஜயலதா பாலச்சந்திரன் ஆகியோர் தலைமை தாங்கி இப்பணியை துவக்கி வைத்தனர். ஊராட்சி தலைவர் ராஜு முன்னிலை வகித்தார். மருத்துவ அலுவலர் செந்தில்குமார் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட பூச்சியியல் வல்லுனர் கல்யாணசுந்தரம், மாவட்ட தாய் சேய் அலுவலர் ஜெயலட்சுமி உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் பங்கேற்றனர். முடிவில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பி.மகுடீஸ்வரன் நன்றி கூறினார்.

Last Updated on Thursday, 28 January 2010 10:16
 

மதுரை ஓட்டல்கள், டீக்கடைகளில் சுகாதாரம் எங்கே? சென்னையைப் போல நடவடிக்கை வருமா?

Print PDF

தினமலர் 28.01.2010

மதுரை ஓட்டல்கள், டீக்கடைகளில் சுகாதாரம் எங்கே? சென்னையைப் போல நடவடிக்கை வருமா?

மதுரை : சுகாதாரமற்ற முறையில் இயங்கும் ஓட்டல்கள் மீது, சென்னை மாநகராட்சியைப் போல மதுரை மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழில் வளர்ச்சி இல்லாத மதுரையில் பெரும்பாலானோருக்கு தெரிந்த தொழில் வடை கடை அல்லது இட்லி கடை நடத்துவது தான். சந்து, சாக்கடை, குப்பைமேடு என எதையும் பார்க்காமல், எங்கு திறந்தவெளி இருந்தாலும் அங்கு ஒரு டேபிளை வைத்து, அடுப்பு மூட்டி, சட்டியை சூடாக்கி எதையாவது சமைத்து விடுவர். இந்த இடத்திற்கு வாடகை கிடையாது, லைசென்ஸ் கிடையாது, கட்டடம் கிடையாது என்பதால் இத்தொழிலை எளிதாக துவக்கி விடுகின்றனர்மாநகராட்சி சட்டப்படி, கடைகளில் விற்கப்படும் உணவு பொருட்கள், சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்டு இருக்க வேண்டும். கலப்படம் செய்யப்பட்டிருக்கக் கூடாது. சுற்றுச்சூழல் சுத்தமாக இருக்க வேண்டும்.

கழிவு நீரை, முறைப்படி வெளியேற்ற வேண்டும். பொது சுகாதாரத்தை மாசுபடுத்தக் கூடாது.ஆனால் மதுரையில் இருக்கும் பெரும்பாலான ஓட்டல்கள் இதை கடைப்பிடிப்பதில்லை. சுகாதாரமற்ற சூழ்நிலையில் தயாராகும் உணவு பொருட்கள் அமோகமாக விற்கப்படுகிறது. "இது தான் மதுரை ஸ்பெஷல்' என சிலாகித்தபடி பலர், ருசித்து சாப்பிடுகின்றனர். சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டிய மாநகராட்சி அதிகாரிகளும் இதை கண்டுகொள்வதில்லை.லைசென்ஸ்: ஒரு ஓட்டல் அல்லது டீக்கடை துவக்க வேண்டுமானால், மாநகராட்சியில் "டி அண்ட் ஓ (டேஞ்சரஸ் அண்ட் அபன்சிவ்) லைசென்ஸ்" என அழைக்கப்படும் அபாயகரமானதும், ஆட்சேபகரமானதுமான தொழிலுக்கு உரிமம் பெறப்பட வேண்டும். தொழிலைப் பொறுத்து இதற்கான கட்டணம் மாறுபடும். ஆண்டுக்கு ஆண்டு இதை புதுப்பிக்க வேண்டும்.சுகாதாரமற்ற ஓட்டல்கள், டீக்கடைகளின் லைசென்சை, மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் ரத்து செய்யலாம். அல்லது அபராதம் விதிக்கலாம். ஆனால், சுகாதார அலுவலர்களுக்கு, மதுரையில் குப்பை அள்ளுவதை கண்காணிக்கவே நேரம் சரியாக இருப்பதால், ஓட்டல்களில் சோதனை செய்வதில்லை. சில வார்டுகளில் ஓட்டல்களின் "கவனிப்பால்', சுகாதார கேடுகளை கண்டுகொள்வதில்லை. சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்த ஓட்டல்கள் மீது, நேற்று முன் தினம் சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இது போன்ற நடவடிக்கை, மதுரை மாநகராட்சியில் எப்போதாவது பெயரளவில் மட்டுமே எடுக்கப்படுகிறது. இனியாவது, பொதுமக்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க, சுகாதாரமற்ற ஓட்டல்களில் மாநகராட்சி அதிகாரிகள் அடிக்கடி சோதனை செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான், மதுரை மக்கள், ஆரோக்கியமாக வாழ முடியும்.

வார்டுக்கு "போட்டா போட்டி':மதுரை மாநகராட்சி வார்டுகளில், சுகாதார அலுவலர்களால் அதிகம் விரும்பப்படுவது, பெத்தானியாபுரம் (71வது வார்டு). ஓட்டல்கள், டீக்கடைகள், ஒர்க்ஷாப்புகள் என 900 கடைகள் இருக்கின்றன. இவற்றில் பாதி தான், "டி அண்ட் ஓ" லைசென்ஸ் பெற்றுள்ளன. மீதி கடைகளுக்கு, இப்படி ஒரு லைசென்ஸ் எடுக்க வேண்டும் என்பதே தெரியாது. சோதனைக்கு வரும் போதோ அல்லது லைசென்சை புதுப்பிக்க வேண்டிய காலத்திலோ சுகாதார அலுவலரை "கவனித்தால்' போதும். ஏராளமான கடைகள் இருப்பதால், இங்கு பணிபுரிபவர் காட்டில் "பண மழை' தான். இதற்காகவே இந்த வார்டில் பணிபுரிய, அலுவலர்களுக் குள் "போட்டா போட்டி'யே நிலவுகிறது.

Last Updated on Thursday, 28 January 2010 06:22
 

சுகாதாரமற்ற தண்ணீர் விற்றால் நடவடிக்கை

Print PDF

தினகரன் 27.01.2010

சுகாதாரமற்ற தண்ணீர் விற்றால் நடவடிக்கை

சென்னை : சென்னை அரசு பொது மருத்துவமனையில் உள்ள குடல் இரைப்பை அறுவை சிகிச்சை துறை சார்பில், ‘உணவு பழக்க வழக்கங்களும் ஜீரண மண்டல உபாதைகளும்என்ற தலைப்பில் கட்டுரை போட்டி நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி அரசு மருத்துவ கல்லூரியில் நேற்று நடந்தது. குடல் இரைப்பை அறுவை சிகிச்சை தலைவர் டாக்டர் சந்திரமோகன் தலைமை வகித்தார்.

இதில்அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசுகையில், ‘‘அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.1,232 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது. புதிய கட்டிடங்கள் கட்டப்படும். நவீன மருத்துவ கருவிகள் வாங்கப்படும்ÕÕ என்றார்.

சுகாதாரத் துறை செயலர் சுப்புராஜ் பேசுகையில், ‘‘தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடிநீர் தயாரிக்கும் நிறுவனங்கள் போலி ஐஎஸ்ஐ முத்திரையை போட்டு தரமற்ற தண்ணீர் விற்கின்றன. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்என்றார்.

Last Updated on Wednesday, 27 January 2010 11:34
 


Page 378 of 519