Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

92 கிலோ ஆடு, கோழி இறைச்சி சுடுகாட்டில் குழிதோண்டி புதைப்பு!

Print PDF

தினமலர் 16.01.2010

92 கிலோ ஆடு, கோழி இறைச்சி சுடுகாட்டில் குழிதோண்டி புதைப்பு!

கோவை: வள்ளுவர் தினத்தன்று, விதிமுறை மீறி விற்பனை செய்யப்பட்ட 92 கிலோ இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன. தமிழகத்தில் திருவள்ளுவர் தினம், வள்ளலார் நினைவு நாள், மகாவீர் ஜெயந்தி, மகாவீர் நிர்வாண் தினம், காந்தி ஜெயந்தி ஆகிய ஐந்து நாட்களில் உயிர் வதை செய்வதற்கு, அரசாணை எண்.122 ன் படி தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை பற்றி குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு வாரம் முன்பிருந்தே மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்படுவது வழக்கம். இந்நிலையில் நேற்று, திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த தினத்தில் இறைச்சி விற்பனை செய்த கடைகளில், மாநகராட்சி மிருககாட்சி சாலை இயக்குனர் பெருமாள்சாமி தலைமையிலான சுகாதாரப் பிரிவினர் அதிரடி ரெய்டு நடத்தினர். இதில், கணபதி, மணியகாரம்பாளையம், செல்வபுரம் ஆகிய பகுதிகளில் இறைச்சி விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. விற்பனைக்காக கடைகளில் வைக்கப்பட்டிருந்த 92 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு 20 ஆயிரம் ரூபாய். பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சி, சொக்கம்புதூர் சுடுகாட்டில் குழி தோண்டி புதைக்கப்பட்டது.

 

போடி பகுதியில் சுகாதாரத் துறை இயக்குநர் ஆய்வு

Print PDF

தினமணி 13.01.2010

போடி பகுதியில் சுகாதாரத் துறை இயக்குநர் ஆய்வு

போடி, ஜன. 12: தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் எஸ். இளங்கோ போடிப் பகுதியில் செவ்வாய்க்கிழமை வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்தார்.

போடியில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் சிறுவன் நவீன்குமார் திங்கள்கிழமை இறந்தான். இதனையடுத்து, சிறுவன் இறந்தது குறித்து ஆய்வு செய்ய, தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மற்றும் போடி சட்டப்பேரவை உறுப்பினர் ஆகியோர் கேட்டுக்கொண்டதன் பேரில், தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் எஸ். இளங்கோ செவ்வாய்க்கிழமை போடி வந்தார்.

இறந்த சிறுவனின் தந்தை வெங்கிடசாமியிடம் சிறுவன் இறந்தது குறித்தும், அவனுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது குறித்தும் கேட்டறிந்தார்.

பின்னர், அப் பகுதியில் உள்ள வீடுகளுக்குச் சென்று தண்ணீர்த் தொட்டிகள், சாக்கடைகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார். ஒரு வீட்டின் தண்ணீர்த் தொட்டியில் கொசுக்களின் லார்வா பருவ புழுக்கள் அதிகமாக இருந்ததை மாதிரிக்காக பாட்டிலில் சேகரித்துக் கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழகத்தின் பல பகுதிகளில் காய்ச்சல் அதிகமாகக் காணப்படுவதற்கு தற்போதுள்ள பருவநிலையும் காரணம். போடியில் சிறுவன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்திருக்கலாம் என செய்தி வெளியானதால் இந்த ஆய்வுக்கு வந்துள்ளேன்.

சிறுவன் இறந்தது குறித்து விசாரித்ததில், தனியார் மருத்துவமனையில் பரிசோதிக்கப்பட்டு, பின்னர் மதுரை அரசு மருத்துவமனையில் 3 நாள் சிகிச்சையில் இருந்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து மருத்துவமனையில் விசாரித்தபோது, மலேரியா, டைபாய்டு போன்ற காய்ச்சல் இருந்ததற்கான அறிகுறி இல்லை என்றும், வைரஸினால் ஏற்படக் கூடிய டெங்கு காய்ச்சல் இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், சிறுவனின் ரத்த மாதிரிகளை எடுத்து அனுப்பியுள்ளதால், அது வந்த பின்னர்தான் தெரியும் எனக் கூறியுள்ளனர்.

மேலும் இதுகுறித்து பூச்சியியல் துறை வல்லுநர்களைக் கொண்டு ஆய்வு செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இப் பகுதியில் இன்று சுற்றிப் பார்த்தபோது, குப்பைகள், சாக்கடை தேக்கம் இல்லை. ஆனால், வீடுகளில் சென்று பார்த்தபோது, தண்ணீர் பிடித்து வைத்து 10 நாள்களுக்கும் மேலாகி விட்டதால், தண்ணீர் தூசி படிந்து, கொசுக்களின் புழுக்கள் அதிகமாக காணப்பட்டன.

23 சதவீத வீடுகளில் தண்ணீரைச் சுத்தம் செய்யாமல் மீண்டும் மீண்டும் தண்ணீர் பிடித்து வைத்துப் பயன்படுத்துவதால் கொசுக்கள் அதிகம் உள்ளன. அவற்றை வாரம் ஒருமுறை சுத்தம் செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், நகராட்சி மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாணவர்கள், பொதுமக்கள் மத்தியில் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

அவருடன், போடி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். லட்சுமணன், மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் டாக்டர் எஸ். செல்லதுரை, நகராட்சி ஆணையாளர் கே.சரவணக்குமார், சுகாதார் ஆய்வாளர்கள் மெர்லின் வர்கீஸ், பழனிச்சாமி, சென்றாயன் உள்ளிட்டோர் சென்றனர். முன்னதாக, நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் இப் பகுதியில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு கொசு மருந்து அடித்தனர்.

Last Updated on Wednesday, 13 January 2010 09:31
 

விழுப்புரம் அருகே விக்கிரவாண்டியில் போலிடீதூள்தயாரித்த ரைஸ்மில்லுக்குசீல் அதிகாரிகள் அதிரடி

Print PDF
தினகரன் 13.01.2010

விழுப்புரம் அருகே விக்கிரவாண்டியில் போலிடீதூள்தயாரித்த ரைஸ்மில்லுக்குசீல் அதிகாரிகள் அதிரடி

Swine Flu

 

 

 

 

 

 

விழுப்புரம் : விழுப்புரம் அருகே விக்கிரவாண்டியில் போலி டீ தூள் தயாரித்த ரைஸ்மில்லுக்கு சீல் வைக்கப்பட்டது. சுகாதாரத்துறை அதிகாரி இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் கலப்படத்தை ஒழிப்பதற்கு சுகாதாரத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில் சுகாதாரத்துறையினர் தினமும் ஒவ்வொரு கடைகளிலும் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று விழுப்புரம் அருகே விக்கிரவாண்டியில் உள்ள ரைஸ்மில்லில் போலி டீ தூள் தயாரிப்பதாக தகவல் வந்தது. பின்னர் அங்கு சென்ற சுகாதார துறையினர் சோதனை நடத்தினர். அங்கு முந்திரிக்கொட்டை தோல், புளியங்கொட்டை ஆகியவற்றை அரைத்து டீ தூளில் கலப்படம் செய்ய வைத்திருந்தது தெரியவந்தது. அங்கிருந்த புளியங்கொட்டை தூள் 104 மூட்டை கள், விற்பனைக்கு கொண்டு செல்ல வைத்திருந்த போலி டீத்தூள் 14 மூட்டைகள் ஆகியவற்றை சுகாதாரத் துறையினர் கைப்பற்றினர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை இணை இயக்குநர் கிருஷ்ணராஜ் கூறியதாவது. விக்கிரவாண்டியில் செயல்படாத ரைஸ்மில்லில் போலீ டீதூள் தயாரிப்பதாக தகவல் வந்தது. அதனடிப்படையில் சோதனை செய்ததில் டீதூளில் கலப்பதற்காக புளியங்கொட்டை மற்றும் முந்திரிக்கொட்டை தோலை அரைத்து வைக்கப்பட்டிருந்தது. இதன் மதிப்பு லட்சக்கணக்கில் இருக்கும். நாங்கள் வருவது தெரிந்து அவர்கள் தலைமறைவாகி விட்டனர். பாமர மக்கள் முதல் வசதி படைத்தவர்கள் வரை இது பாதித்திருக்கும்.

இதனால் வாய் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், சிறுநீர் புற்றுநோய் வரக்கூடும். இங்குள்ள பொருட்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரைஸ்மில்லுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த தூளை சென்னையில் உள்ள கிண்டிக்கு சோதனைக்காக அனுப்பிவைக்கப்படுகிறது.

பொதுமக்களும் நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள இது போன்ற சம்பவங்கள் நடந்தால் உடனே தெரிவிக்க வேண்டும். தலைமறைவாக உள்ளவர்களை போலீசார் தேடிவருகின்றனர். இன்னும் ஓரிரு நாட்களில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரைஸ்மில்களும் கணக்கெடுக்கப்பட்டு சோதனை நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.சோதனையின் போது வட்டார மருத்துவ அலுவலர் ரவிக்குமார், மேற்பார்வையாளர் கலியபெருமாள். சுகாதார ஆய்வாளர்கள் உதயசூரியன், பக்ரி, பாலு, ரமணி, கதிரவன் ஆகியோர் இருந்தனர்.

Last Updated on Wednesday, 13 January 2010 07:09
 


Page 390 of 519