Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

ஆரல்வாய்மொழி பகுதியில் கொசு ஒழிப்பு நடவடிக்கை

Print PDF

தினமணி 06.01.2010

ஆரல்வாய்மொழி பகுதியில் கொசு ஒழிப்பு நடவடிக்கை

நாகர்கோவில், ஜன.5: ஆரல்வாய்மொழி பகுதிகளில் சுகாதாரத்துறை சார்பில் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆரல்வாய்மொழி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உள்பட்ட ஆரல்வாய்மொழி வடக்கூர், மீனாட்சிபுரம், வடக்கு பெருமாள்புரம், மிஷன் காம்பவுண்ட், குருசடி, கோட்டைகரை ஆகிய பகுதிகளில் கொசு உற்பத்தி தடுப்புப் பணிகள், மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மதுசூதனன் உத்தரவின்பேரில் மேற்கொள்ளப்பட்டன.

சுகாதார ஆய்வாளர்கள், கிராமநல செவிலியர்கள் உள்ளிட்டோர் 6 பிரிவுகளாக வீடுவீடாகச் சென்று காய்ச்சல்நோய் கண்காணிப்பு செய்து, காய்ச்சல் தாக்கியவர்களின் ரத்த மாதிரிகளை சேகரித்தனர். குடியிருப்புப் பகுதிகளில் கொசு உற்பத்தியாகும் இடங்கள் கண்டறியப்பட்டு அப் பகுதிகளில் மருந்து தெளிக்கப்பட்டது. புகை மருந்தும் அடிக்கப்பட்டது.

தோவாளை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஆர். நம்பிராஜன், சுகாதார ஆய்வாளர்கள் என். ஐயாக்குட்டி, நெல்லையப்பன், ஆறுமுகம்பிள்ளை, வேலம்மாள், பிச்சையா, கிருஷ்ணன் உள்ளிட்டோர் இப் பணியில் ஈடுபட்டனர்.

Last Updated on Wednesday, 06 January 2010 10:10
 

புதைச் சாக்கடைத் திட்டப் பணிக்கு பூமி பூஜை

Print PDF

தினமணி 06.01.2010

புதைச் சாக்கடைத் திட்டப் பணிக்கு பூமி பூஜை

பெரம்பலூர், ஜன. 5: பெரம்பலூர், துறைமங்கலம் பகுதிகளில் அமையவுள்ள புதைச் சாக்கடைத் திட்டப் பணிக்கான நீரேற்று நிலைய பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூர் நகராட்சியில் உள்ள 21 வார்டு பகுதிகளிலும் ரூ.23.8 கோடி மதிப்பிலான புதைச் சாக்கடைத் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து, பெரம்பலூர், துறைமங்கலம் பகுதிகளில், இந்தத் திட்டத்துக்கான பிரதான நீரேற்று நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

பெரம்பலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் மா. ராஜ்குமார் தலைமை வகித்து, பணியை தொடங்கி வைத்தார். முன்னதாக, பெரம்பலூர் நகராட்சியில் உள்ள 4 மற்றும் 9-ம் வார்டுகளில் முழுநேர நியாய விலைக் கடை களை சட்டப்பேரவை உறுப்பினர் ராஜ்குமார் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சிகளில், பெரம்பலூர் நகராட்சித் தலைவர் எம்.என். ராஜா, நகராட்சி ஆணையர் பி. அசோக்குமார், துணைத் தலைவர் கி. முகுந்தன், உறுப்பினர்கள் கண்ணகி, அப்துல்பாரூக், ரஹமத்துல்லா, ஜெயக்குமார், கே.ஜி. மாரிக்கண்ணன், சரவணன், பொற்கொடி ஞானசேகரன், நகராட்சிப் பொறியாளர் மணிமாறன், பணி மேற்பார்வையாளர் கார்த்தி, திமுக பிரதிநிதிகள் ஜெய்சங்கர், .கே.வி. மோகன்ராஜ், ஆசிரியர் ஆனந்தராஜ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றியச் செயலர் பூ. சீனிவாசன், ஒப்பந்ததாரர் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Last Updated on Wednesday, 06 January 2010 10:01
 

கொசு ஒழிப்புக்கு முன்னுரிமை: அமைச்சர் வலியுறுத்தல்

Print PDF

தினமணி 06.01.2010

கொசு ஒழிப்புக்கு முன்னுரிமை: அமைச்சர் வலியுறுத்தல்

சென்னை, ஜன. 5: கொசு ஒழிப்புக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.சிறப்பு காய்ச்சல் குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட வாரியாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறித்து கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.
தமிழகம் முழுவதும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறித்துச் செய்தி ஆய்வில் 2007, 2008-ம் ஆண்டைவிட 2009-ம் ஆண்டில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.
ஆய்வுக் கூட்டத்தில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மேலும் பேசியதாவது:

தமிழகத்தில் பருவமழை மற்றும் குளிர் காலங்களில் காய்ச்சல் அறிகுறிகளால் பாதிக்கப்படுவோர் அதிகரிப்பது வழக்கமான ஒன்றாகும்.நோய்கள் வாரியாக ஆய்வு செய்யும்போது மலேரியா, லெப்டோஸ்பைரோசிஸ் எனப்படும் எலிக் காய்ச்சல், டெங்கு மற்றும் சிக்குன் குனியா நோய்களும் கட்டுப்பாட்டுக்குள் உள்ளன.காய்ச்சல் என்பது ஒரு நோய்த் தொற்றின் அறிகுறியே. காய்ச்சலுக்கான காரணத்தைக் கண்டறிய அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களில் இலவச பரிசோதனை செய்யப்படும்.

இதைத் தொடர்ந்து தேவைப்படும் நிலையில், புதுச்சேரி, மதுரை, ஒசூர் ஆகிய இடங்களில் உள்ள ஆராய்ச்சி மையங்களில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றார் அமைச்சர் பன்னீர்செல்வம்.

Last Updated on Wednesday, 06 January 2010 09:59
 


Page 401 of 519