Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

கடையநல்லூரில் பூச்சியியல் வல்லுநர்கள் ஆய்வு: ரத்தம் பரிசோதனைக்காக ஓசூருக்கு அனுப்ப ஏற்பாடு

Print PDF

தினமலர் 05.01.2010

கடையநல்லூரில் பூச்சியியல் வல்லுநர்கள் ஆய்வு: ரத்தம் பரிசோதனைக்காக ஓசூருக்கு அனுப்ப ஏற்பாடு

கடையநல்லூர்: கடையநல்லூரில் காய்ச்சல் பரவுவதையடுத்து பூச்சியியல் வல்லுநர்கள் கொசுக்களை பிடித்து பரிசோதனைக்கு அனுப்பியதுடன், காய்ச்சல் பாதித்த நோயாளிகளின் ரத்தம் பரிசோதனைக்காக ஓசூருக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது.

கடையநல்லூர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பரவலாக காணப்பட்டு வரும் மர்மக் காய்ச்சலுக்கு ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். காய்ச்சல் மட்டுமின்றி கை, கால் வலி, உடல் வலி, மூட்டு வலிகளால் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து ஏற்பாடு செய்து வரும் போதிலும் நாளுக்கு நாள் காய்சலால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கடையநல்லூர் பகுதியில் காணப்பட்டு வரும் காய்ச்சல் எந்த வகையானது, எதனால் ஏற்படுகிறது என்பது குறித்து பூச்சியியல் வல்லுநர்கள் குழு நேற்று கடையநல்லூரில் சர்வே மேற்கொண்டனர். மாநில பூச்சியியல் வல்லுநர் கதிரேசன், ஓசூர் பூச்சியியல் ஆய்வு மைய முதுநிலை பூச்சியியல் வல்லுநர் அப்துல்காதர், நெல்லை மண்டல பூச்சியியல் வல்லுநர் செல்வராஜ், மாவட்ட மலேரியா அலுவலர் மோகன் மற்றும் உதவியாளர்கள் கடையநல்லூர் நகராட்சி பகுதிகளில் நேற்று சர்வே பணிகளை மேற்கொண்டனர்.

கிருஷ்ணாபுரம் 5வது வார்டு, பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காய்ச்சல் பாதித்த தெருக்களில் சர்வே பணிகளை மேற்கொண்ட வல்லுநர் குழுவினர் அப்பகுதிகளில் காணப்படக்கூடிய கொசுக்களையும் பிடித்தனர். பிடிக்கப்பட்ட கொசுக்களை சோதனை செய்வதற்காக அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. தொடர்ந்து அதிகமாக காய்ச்சல் காணப்பட்ட நோயாளிகள் 11 பேரின் ரத்தம் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டது. அவை ஓசூருக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

வல்லுநர் குழுவினருடன் கடையநல்லூர் நகராட்சி கமிஷனர் அப்துல் அஜீஸ், சுகாதார ஆய்வாளர்கள் பாஸ்கர், கைலாசம், மேற்பார்வையாளர்கள் மாரிமுத்து, அர்ச்சுனன் மற்றும் அதிகாரிகள் வருகை தந்தனர். ஓசூருக்கு அனுப்பட்டுள்ள ரத்தம் மற்றும் கொசுக்களின் பரிசோதனையை அடுத்து கடையநல்லூர் பகுதி மற்றும் பரவலாக பரவிவரும் காய்ச்சல் எந்த வகையானது என்பது தெரியவரக்கூடும் என வல்லுநர்கள் குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Last Updated on Tuesday, 05 January 2010 06:59
 

குளோரின் மாத்திரைகள் கலந்த குடிநீர் விநியோகம்

Print PDF

தினமணி 04.01.2010

குளோரின் மாத்திரைகள் கலந்த குடிநீர் விநியோகம்

அரூர், ஜன. 3: தருமபுரி மாவட்டத்தில் அனைத்துக் கிராமங்களிலும் குளோரின் மாத்திரைகள் (படம்) கலந்த குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

குடிநீரில் கிரிமிநாசிகள் (பிளிச்சிங் பவுடர்) கலந்து விநியோகம் செய்யப்பட்டது. இவை சில நேரங்களில் குடிநீரில் முழுமையாக கரையாது. இந்நிலையில் சுகாதாரத் துறையின் மூலம் தற்போது குளோரின் மாத்திரைகள் விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிலோ எடை கொண்ட மாத்திரையின் விலை ரூ.1200.

10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர்த் தொட்டியில் ஒரு மாத்திரை வீதம் கலந்து குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்.

குடிநீர்த் தொட்டிகளை வாரம் ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும், நாள்தோறும் குளோரின் மாத்திரைகள் கலந்து பாதுகாக்கப்பட்ட குடிநீரை பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும் என ஊராட்சித் தலைவர்கள் மற்றும் மேநீர்த் தேக்கத் தொட்டி பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Last Updated on Monday, 04 January 2010 09:14
 

கிரிவலப் பாதையில் கழிவுநீர் வடிகால் சீரமைப்பு பணி

Print PDF

தினமணி 04.01.2010

கிரிவலப் பாதையில் கழிவுநீர் வடிகால் சீரமைப்பு பணி

திருவண்ணாமலை, ஜன.3: திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் நடைபெற்று வரும் கழிவுநீர் வடிகால் சீரமைப்புப் பணிகளை கு.பிச்சாண்டி எம்எல்ஏ ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை அரசு மருத்துவமனை அருகே உள்ள அய்யாக்கண்ணு முதலியார் தெரு, சமுத்திரம் காலனி, திருமஞ்சன கோபுரத் தெரு, குமரக்கோயில் தெரு,

மார்க்கெட் பகுதியில் உள்ள பெரியகடைத் தெரு, மண்டித் தெருக்களில் நகராட்சி சார்பில் சீரமைப்புப் பணிகள் நடந்து வருகின்றன.

திருமஞ்சன கோபுரத் தெருவில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர் கால்வாயை சீரமைக்க உடனே நடவடிக்கை எடுக்கவும் பிச்சாண்டி உத்தரவிட்டார்.

அப்போது வர்த்தகர் சங்க நிர்வாகிகள் கேஓஎஸ்.ஆறுமுகம், செந்தில்மாறன் ஆகியோர் அளித்த கோரிக்கை மனுவில் மண்டித் தெருவில் உள்ள கால்வாய்களை அகலப்படுத்தி, சிறிய பாலங்கள் கட்ட வேண்டும் எனக் கோரினர்.

எம்எல்ஏ தொகுதி நிதியில் இருந்து ரூ.5 லட்சம், நகராட்சி நிதியில் இருந்து ரூ.10 லட்சம் செலவில் அப்பணிகள் மேற்கொள்ளப்படும் என எம்எல்ஏ கு. பிச்சாண்டியும், நகராட்சித் தலைவர் இரா. ஸ்ரீதரனும் உறுதி கூறினர்.

மண்டித் தெருவில் நடைபெறும் புதைசாக்கடைப் பணிகளையும் விரைந்து முடிக்க குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. நகராட்சி துணைத் தலைவர் ஆர்.செல்வம், ஆணையர் சேகர், பொறியாளர் சந்திரன் உள்பட பலர் உடன் சென்றனர்.

Last Updated on Monday, 04 January 2010 09:10
 


Page 405 of 519