Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

மெகா துப்புரவு பணி

Print PDF

தினமலர் 31.12.2009

மெகா துப்புரவு பணி

திருநெல்வேலி: மேலப்பாளையத்தில் காய்ச்சல் பரவுவதை தடுக்க "மெகா' துப்புரவுப்பணி மாநகராட்சி சார்பில் துவக்கப்பட்டது.நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் காய்ச்சல் பரவியுள்ளது. நெல்லையில் குறிப்பாக மேலப்பாளையத்தில் பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு தரப்பினர் காய்ச்சலுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மேலப்பாளையத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவன் நவாஸ்கான் இறந்தான்.மேலப்பாளையத்தில் நிலவும் சுகாதாரக்கேடு பிரச்னைகளால் தான் காய்ச்சல் பரவிவருவதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டுகின்றனர்.

தெருக்கள், ரோடுகளில் கழிவுத்தண்ணீர் தேங்குவது, குப்பைகள் குவிந்து கிடப்பது காய்ச்சலுக்கு மூலக்காரணம் என பலரும் கூறுகின்றனர்.இதையடுத்து மேலப்பாளையம் மண்டலத்திற்குட்பட்ட 28 முதல் 38ம்வார்டு முடிய 11 வார்டுகளில் சுகாதாரச்சீர்கேடுகளை சரிசெய்ய ஒருங்கிணைந்த "மெகா' கூட்டுத்துப்புரவுப்பணியை 2 நாட்கள் மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.மேலப்பாளையம் ஜின்னா திடலில் ஒருங்கிணைந்த கூட்டுத்துப்புரவுப்பணி நேற்று துவங்கப்பட்டது.

சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான் தலைமை வகித்தார். மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன் துவக்கிவைத்தார்.துணை மேயர் முத்துராமலிங்கம், கமிஷனர் பாஸ்கரன், மண்டல சேர்மன் முகமதுமைதீன், மாநகர பொறியாளர் ஜெய்சேவியர், செயற்பொறியாளர் நாராயண நாயர், உதவி கமிஷனர் சுல்தானா, கவுன்சிலர்கள், கவுன்சிலர்கள் சுப்பையா பாண்டியன், தியாகராஜன், முகைதீன் அப்துல்காதர், தவ்லத்பீவி, சரிபுன்னிசா, ஷைபுன்னிசா, சுலைகாபீவி, அலுவலர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

733 துப்புரவுப்பணியாளர்கள், 28 துப்புரவுப்பணி மேற்பார்வையாளர்கள், 13 துப்புரவு ஆய்வாளர்கள் கூட்டுத்துப்புரவுப்பணியில் ஈடுபட்டுள்ளனர். 23 வாகனங்கள் துப்புரவுப்பணிக்கு பயன்படுத்தப்படுகிறது. ஒரு துப்புரவு ஆய்வாளரின் கீழ் 2 துப்புரவுப்பணி மேற்பார்வையாளர்கள் கண்காணிப்பில் துப்புரவுப்பணியாளர்கள் தெருக்களில் சுகாதாரப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அனைத்து தெருக்களிலும் குப்பைக்கூளங்களை அற்றி, கழிவுநீரோடையை சுத்தப்படுத்தி, மண் மேடுகளை அகற்றி, கொசுமருந்து அடிக்கும் பணியில் 17 குழுக்கள் ஈடுபட்டுள்ளன. இன்றும் பணி தொடர்ந்து நடக்கிறது.

புத்தாண்டில் புதுப்பொலிவு : மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன் கூறும்போது, ""மாநகராட்சியில் மேலப்பாளையத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. 19, 26, 27 வார்டு மக்கள் பயன்பெறும் வகையில் 17 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய குடிநீர்த்திட்டத்திற்கு துணை முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டியுள்ளார். குடிநீர் பற்றாக்குறையை போக்க புதிய குழாய்கள் பதிக்க 3 கோடி ரூபாய் மானியத்தை அனுமதித்து துணை முதல்வர் உத்தரவிட்டுள்ளார். புதிய குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி விரைவில் துவங்கும். மண்டல அலுவலக வளாகத்தில் புதிய குடிநீர்த்தொட்டி கட்டும் பணி நடக்கிறது. பணி நிறைவு பெற்றதும் குடிநீர்த்தொட்டியில் இருந்து குடிநீர் விநியோகம் பெறும் பகுதிகள் குறித்து தெரிவிக்கப்படும். பாபநாசம் அணையில் இருந்து குழாய்கள் மூலம் நெல்லைக்கு குடிநீர் வசதி அளிக்கும் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர்த்திட்டத்திற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முதற்கட்ட ஆய்வுப்பணிகள் நடக்கவுள்ளது. இப்பணிகள் நிறைவு பெற்றதும் குடிநீர் தட்டுப்பாடு பிரச்னை நீங்கும். மேலப்பாளையத்தில் சிக்கன்குன்யா காய்ச்சல் பரவவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. 11 வார்டுகளிலும் சேர்த்து 850 அலுவலர்கள், துப்புரவுப்பணியாளர்கள் துப்புரவுப்பணியில் ஈடுபடுகின்றனர். 2 நாட்கள் துப்புரவுப்பணிக்கு பின் புத்தாண்டு நாளில் மேலப்பாளையம் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும்'' என்றார்.

எனக்கும் காய்ச்சல் தான்'... மாநகராட்சி மேயர் ஆதங்கம் :
மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறும் போது, ""நெல்லையில் காய்ச்சல் பரவியுள்ளது. 2 எம்.எல்..,க்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனக்கும் 4 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் இருந்தது. மேலப்பாளையத்தில் காய்ச்சல் பரவுவதை தடுக்க மாநகராட்சி சார்பில் மருத்துவ முகாம் நடந்தது. 2 ஆயிரம் பேர் பரிசோதனை செய்துகொண்டனர். 60 பேருக்கு சிக்கன்குன்யா காய்ச்சல் உள்ளது. காய்ச்சல் பரவுவது கட்டுக்குள் உள்ளது. தேவைப்பட்டால் அடுத்த வாரம் மேலும் ஒரு மருத்துவ முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.'' என்றார்.

Last Updated on Thursday, 31 December 2009 06:53
 

போலியோ சொட்டு மருந்து முகாமிற்கு 1062 சிறப்பு மையங்கள் : கலெக்டர் தகவல்

Print PDF

தினமலர் 31.12.2009

போலியோ சொட்டு மருந்து முகாமிற்கு 1062 சிறப்பு மையங்கள் : கலெக்டர் தகவல்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் 5 வயதிற்குட்பட்ட ஒரு லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகளுக்கு இலவசமாக போலியோ சொட்டு மருந்து முகாம் வரும் ஜன.10 மற்றும் பிப்.7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக வழங்கப்பட உள்ளது. இதற்காக மாவட்டம் முழுவதும் ஆயிரத்து 62 சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டதாக கலெக்டர் தெரிவித்தார்.

தமிழகத்தில் இளம்பிள்ளைவாத நோய் (போலியோ) ஒழிப்பதற்காக தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்த நோயினை முற்றிலும் ஒழிக்கும் விதமாக ஆண்டுதோறும் போலியோ சொட்டு மருந்து முகாம் அமைக்கப்பட்டு அவற்றின் மூலம் சொட்டு மருந்து கொடுக்கப்பட்டு வருகின்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் ஆண்டில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ எனப்படும் மருந்து இரண்டு கட்டமாக கொடுக்கப்பட உள்ளது. இம்மாவட்டத்தில் போலியோ நோயினை ஒழிக்கும் பொருட்டு மாவட்டம் முழுவதும் போலியோ மருந்து கொடுப்பது குறித்து மாவட்ட கலெக்டர் பிரகாஷ் தலைமையிலான அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நேற்று கலெக்டர் ஆபிஸில் நடந்தது. இதில் தூத்துக்குடி சுகாதார பணிகள் துணை இயக்குநர் உமா, கோவில்பட்டி சுகாதார பணிகள் துணை இயக்குநர் ரால்ப்செல்வின், நெல்லைமண்டல நகராட்சி நிர்வாக இயக்குநர் மோகன், தூத்துக்குடி மாநகர ஆணையர் குபேந்திரன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் பன்னீர்வேலு, நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் உட்பட மாவட்டத்தின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலெக்டர் பிரகாஷ் கூறியதாவது, தமிழகம் முழுவதும் போலியோ நோயினை ஒழிக்கும் பொருட்டு மாவட்டம் முழுவதிலும் போலியோ சொட்டுமருந்து முகாம் அமைக்கப்படுகிறது. இதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயிரத்து 62 சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

வரும் ஜன.10ம் மற்றும் பிப் 7 ஆகிய தேதிகளில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து இலவசமாக கொடுக்கப்படுகிறது. இம்மாவட்டத்தில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்காக மாவட்டத்தில் உள்ள நகரங்களிலும், கிராமங்களிலும் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது. துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தனியார் ஆஸ்பத்திரி, பள்ளிக்கூடங்கள், சத்துணவு மையங்கள், சமுதாய நலக்கூடம் உள்ளிட்ட ஆயிரத்து 62 மையங்களில் போலியோ சொட்டுமருந்து கொடுக்கும் மையங்களாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் பல்வேறு துறையைச் சேர்ந்த அலுவலகங்கள் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்படவுள்ளது. முகாமில் சுகாதாரத்துறை பணியாளர்கள், மருத்துவத்துறை பணியாளர்கள், சமூகநலத்துறை, சத்துணவு பணியாளர்கள், வருவாய்துறை, கல்விதுறை ரோட்டரி லயன்ஸ் கிளப், தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியர்கள், சுயஉதவிக் குழுக்கள் ஆகியோர்களையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தப்பட உள்ளனர். மேலும் பொதுமக்கள் கூடும் இடமாகிய பஸ்ஸ்டாண்டுகள், ரயில்வே ஸ்டேஷன் திருச்செந்தூர் கோயில் ஆகிய இடங்களில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு அவற்றின் மூலமாக போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது.இரண்டு கட்டமாக போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது. இதற்கு முன் எத்தனை முறை போலியோ சொட்டு மருந்து கொடுத்தாலும் வரும் இரண்டு முகாமில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாயமாக போலியோ சொட்டுமருந்து கொடுக்க வேண்டும்.

மேலும் சிறுநோயிகளான காய்ச்சல், சளி, இருமல், வயிற்றுப்போக்கு இருந்தாலும் கூட இந்த சொட்டு மருந்து கொடுக்கலாம். எக்காரணம் கொண்டும் சொட்டு மருந்து கொடுக்காமல் இருக்க கூடாது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார். மேயர் கஸ்தூரிதங்கம், திருச்செந்தூர் ஒன்றிய சேர்மன் உமாதேவி, கருங்குளம் ஒன்றிய சேர்மன் கோசல்ராம் உட்பட பஞ்., பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Last Updated on Thursday, 31 December 2009 06:50
 

நாசரேத் பகுதியில் சுகாதார அதிகாரிகள் அதிரடி சோதனை

Print PDF

தினமலர் 31.12.2009

நாசரேத் பகுதியில் சுகாதார அதிகாரிகள் அதிரடி சோதனை

நாசரேத், : நாசரேத் பகுதியில் 30 கடைகளில் சுகாதார அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.தென்திருப்பேரை உள்ளூர் நல அலுவலர் டாக்டர் மதன் தலைமையில் உணவு ஆய்வாளர் மாரியப்பன் நாசரேத் மற்றும் சுற்றுவட்டாரங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது கடைகளில் கலப்படமான, காலாவதியான மிளகாய் பொடி, வத்தல் பொடி மற்றும் மஞ்சள்தூள் பாக்கெட்டுகளை ஆய்வு செய்தனர். மொத்தம் 30 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டன. இதில் 6 கடைகளில் உணவு மாதிரி எடுக்கப்பட்டு பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. காலாவதியான பாக்கெட்டுகள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன.கடைகளில் உரிய உரிமம் பெறாமல் கடை நடத்துபவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.உரிமம் இல்லாமல் உணவுப் பொருளை விற்பனை செய்தால் 3 மாதம் ஜெயில் தண்டனையும், அபராதம் ரூ.2000/- வழங்கப்படும் என அறிவுறுத்தப்பட்டன. இதில் சுகாதார ஆய்வாளர்கள் பால்ஆபிரகாம், சுப்பிரமணியன், ஹரிஹரசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Last Updated on Thursday, 31 December 2009 06:54
 


Page 407 of 519