Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

இன்று முதல் நாய்களுக்கு தடுப்பூசி

Print PDF

தினமணி               02.09.2013

இன்று முதல் நாய்களுக்கு தடுப்பூசி

மதுரையில் செப்டம்பர் 2 ஆம் தேதி முதல், இங்கிலாந்து மருத்துவர் தலைமையிலான குழுவினர், நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போட உள்ளனர்.

   மதுரை மாவட்டத்தில் ரேபிஸ் என்ற வெறிநாய்க்கடி நோயைத் தடுக்க, தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் எல். சுப்பிரமணியன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

   இந்தக் கூட்டத்தில், அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் இங்கிலாந்தில் இருந்து வரவழைக்கப்பட்ட டாக்டர் அப்புபிள்ளை முருகன் மற்றும் வெளிநாட்டு தொணடு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.

   செப்டம்பர் 2ஆம் தேதி முதல் 13ஆம் தேதி முடிய, மதுரை மாநாகராட்சிக்கு உள்பட்ட அனைத்து வார்டுகளிலும் தெரு நாய்கள் மற்றும் வீட்டு நாய்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படும் என இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

   இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, பொதுமக்கள் தங்களது நாய்களுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு, மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.

   மாநகராட்சியிலும் இது தொடர்பான கூட்டம், ஆணையர் ஆர். நந்தகோபால் தலைமையில் நடைபெற்றது. மருத்துவக் குழுவினர் 4 குழுக்களாகப் பிரிந்து தடுப்பூசிகளை போடுவர் என்றும், தடுப்பூசி போடப்பட்ட நாய்களுக்கு அடையாளமாகக் கழுத்தில் பட்டை அணிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

 

திருச்சி மாவட்டத்தில் டெங்கு கொசு உற்பத்தியை அழிக்க 3 நாட்கள் தூய்மைப்படுத்தும் பணி கலெக்டர் தகவல்

Print PDF

தினத்தந்தி              02.09.2013

திருச்சி மாவட்டத்தில் டெங்கு கொசு உற்பத்தியை அழிக்க 3 நாட்கள் தூய்மைப்படுத்தும் பணி கலெக்டர் தகவல்

 

 

 

 

 

திருச்சி மாவட்டத்தில் டெங்கு கொசு உற்பத்தியை அழிக்க 3 நாட்கள் தூய்மைப்படுத்தும் பணி நடைபெறதாக கலெக்டர் அறிவித்துள்ளார்.

ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் டெங்கு கொசு உற்பத்தி ஆகாமல் அழிப்பது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது பற்றிய மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமை தாங்கி பேசியதாவது:–

மழைக்காலம் தொடங்க உள்ளதால் கொசு உற்பத்தி ஆகாமல் கட்டுப்படுத்த வேண்டியது நம் அனைவரின் கடமையாகும். அந்தவகையில், வருகிற 3–ந் தேதி முதல் 5–ந் தேதி வரை மாவட்டம் முழுவதும், உள்ளாட்சி பிரதிநிதிகள் தலைமையில் குக்கிராமங்கள் முதல் மாநகராட்சி வரை அனைத்து பகுதிகளிலும் தூய்மைப்படுத்தும் பணி செய்யப்பட உள்ளது.

கொசு அழிக்கும் பணி

இப்பணியின் போது குப்பை, டயர், பிளாஸ்டிக் கப், பூந்தொட்டி, ஆட்டுக்கல், தேங்காய் ஓடு, முட்டை ஓடு போன்றவற்றில் தண்ணீர் தேங்காமல் இருக்க அப்புறப்படுத்தப்படும். மேலும், அனைத்து மேல்நிலை குடிநீர் தொட்டி மற்றும் தரைதள தொட்டிகள் சுத்தப்படுத்தப்பட உள்ளது. இப்பணியில் பொதுமக்கள் மற்றும் அனைத்து அரசு அலுவலர்களும் முழுமையாக ஈடுபட்டு கொசு உற்பத்தி ஆகாமல் இருக்க அதனை அழிக்கும் பணியில் முழுமையாக ஈடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், இணை இயக்குநர் (சுகாதார பணிகள்) டாக்டர் மனோகர், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர் சேரன், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் வள்ளிநாயகம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) தெய்வசிகாமணி, அரசு மருத்துவக்கல்லூரி நோய் தடுப்புத்துறை தலைவர் டாக்டர் பரிமளா தேவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது கடைபிடிக்க வேண்டியவை நகரசபை ஆணையாளர் விளக்கம்

Print PDF

தினத்தந்தி            27.08.2013

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது கடைபிடிக்க வேண்டியவை நகரசபை ஆணையாளர் விளக்கம்

 

 

 

 

 

கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து கோவில்பட்டி நகரசபை ஆணையாளர் வரதராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

ஆலோசனை கூட்டம்

கோவில்பட்டி நகரசபை அலுவலகம் சார்பில், கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று காலையில் கோவில்பட்டியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. நகரசபை ஆணையாளர் வரதராஜன் தலைமை தாங்கினார். சுகாதார அதிகாரி ராஜசேகரன், என்ஜினீயர் கோவிந்தராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தனியார் நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், மருத்துவமனைகள், தியேட்டர்கள், பள்ளி, கல்லூரிகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நகரசபை ஆணையாளர் வரதராஜன் பேசும்போது கூறியதாவது:–

கடைபிடிக்க வேண்டியவை

சென்னை ஐகோர்ட்டு மற்றும் தமிழக அரசின் உத்தரவுப்படி, எந்தவித கழிவுநீர் தொட்டியையும் மனிதர்களைக் கொண்டு சுத்தம் செய்ய கூடாது. தனியார் நிறுவனங்கள், கட்டிடங்களில் கழிவுநீர் அகற்றும் போது நகரசபை அலுவலகத்துக்கு கட்டாயம் தகவல் தெரிவிக்க வேண்டும். கழிவுநீர் அகற்றுவதற்காக வடிவமைக்கப்பட்ட டேங்கர் லாரிகளில் மோட்டார் மூலம் கழிவுநீரை உறிஞ்சி மட்டுமே அப்புறப்படுத்த வேண்டும். கழிவு நீர் அகற்றும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் அனைவரும் கட்டாயம் பாதுகாப்பு கவசங்களை அணிய வேண்டும். கழிவுநீர் அகற்றும்போது ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் நிறுவனங்கள், கட்டிடத்தின் உரிமையாளரே பொறுப்பு ஆவார்கள். இவ்வாறு நகரசபை ஆணையாளர் வரதராஜன் பேசினார்.
 


Page 42 of 519