Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

தரமற்ற உணவுப் பொருள்களை பயன்படுத்தக் கூடாது

Print PDF

தினமணி 19.12.2009

தரமற்ற உணவுப் பொருள்களை பயன்படுத்தக் கூடாது

 

அரவக்குறிச்சி, டிச. 18: கரூர் மாவட்டத்துக்குள்பட்ட அரவக்குறிச்சி, பள்ளபட்டி பேரூராட்சிப் பகுதிகளில், மாவட்ட சுகாதாரத் துறையினர் வியாழக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் இளங்கோ உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் உள்ள மளிகைக் கடைகள், அரைவை ஆலைகள், உணவகங்கள் உள்ளிட்ட இடங்களில் உணவுக்குப் பயன்படுத்தப்படும் மல்லித் தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், மசாலா பொடி வகைகள் உள்ளிட்டவைகளில் கலப்படம் உள்ளதா என்பதை கண்டறியும் வகையில் சோதனை நடத்தப் பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, கரூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சதாசிவம் உத்தரவின் பேரில் அரவக்குறிச்சி, பள்ளபட்டி, அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் உள்ள உணவு விடுதிகள், மளிகைக் கடைகளில், வட்டார மருத்துவ அலுவலர் சாந்திகண்ணன், மருத்துவ அலுவலர் கௌதமன், சூரிய பிரபா ஆகியோர் மேற்பார்வையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

சுகாதார மேற்பார்வையாளர் தங்கவேல், உணவு ஆய்வாளர் வீரப்பன், ஆய்வாளர்கள் டைட்டஸ், கருப்புசாமி, சிவலிங்கம் ஆகியோர் அடங்கிய குழுவினர் வியாழக்கிழமை இந்த ஆய்வை மேற்க்கொண்டனர்.

கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த மசாலா பொடிகளின் தரம், தயாரிப்பு விவரம், காலாவதி தேதி போன்றவற்றை அவர்கள் ஆய்வு செய்தனர்.

சந்தேகத்துக்குரிய வகையில் இருந்த மசாலா பொடிகளின் மாதிரிகள் எடுக்கப்பட்டு, ஆய்வுக்கு அனுப்பப்பட்டன.

மேலும், காலாவதியான மசாலா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.

கலப்படம் செய்யப்பட்ட, தரமற்ற பொருள்களை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம் என சுகாதாரத் துறையினர் கேட்டுக் கொண்டனர்.

 

பழனியில் துப்புரவுப் பணி

Print PDF

தினமணி 19.12.2009

பழனியில் துப்புரவுப் பணி

பழனி டிச.18: பழனி அடிவாரம் பகுதியில் நகராட்சி சார்பில் 100 பணியாளர்கள் முழு சுகாதாரப் பணியில் ஈடுபட்டனர்.

பழனியில் தற்போது கார்த்திகை மாதம் துவங்கியது முதல் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து வருவதால் அடிவாரம், கிரி வீதி பகுதிகளில் எங்கும் குப்பைகள் குவிந்து உள்ளன.

இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் வள்ளலார் இப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு குப்பை கொட்டினால் அபராதம், ஆக்கிரமிப்பு அகற்றம், கூடுதல் துப்புரவுப் பணியாளர்கள் நியமனம் என ஏராளமான உத்தரவுகள் பிறப்பித்ததைத் தொடர்ந்து, தற்போது ஆக்கிரமிப்பு மற்றும் குப்பைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

பழனி நகராட்சி சார்பில் வியாழக்கிழமை முதல் ஆக்கிரமிப்பு அகற்றம் நடைபெற்று வருகிறது. வெள்ளிக்கிழமை அடிவாரம் ஆண்டவன் பூங்கா சாலை, இடும்பன் இட்டேரி ரோடு, அய்யம் புள்ளி வீதி, அருள்ஜோதி வீதி உள்ளிட்ட பல இடங்களில் ஒட்டுமொத்த துப்புரவுப் பணி மேற்கொள்ளப்பட்டது.

நகராட்சியின் 6 டிவிசன்களில் உள்ள 150 பணியாளர்களும் இந்தப் பகுதிகளில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து நகர்மன்றத் தலைவர் ராஜமாணிக்கம் கூறியதாவது:

பழனியில் தற்போது அடிவாரம் பகுதியில் 41 பணியாளர்களுடன் கூடுதலாக 10 பேர் இணைந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வரும் ஞாயிறு முதல் மாவட்ட ஆட்சியர் அறிவித்தபடி கூடுதலாக 50 பணியாளர்கள் என மொத்தம் 100 பேர் துப்புரவுப் பணியில் தை மாதம் வரை ஈடுபடுகின்றனர்.

மேலும் இரண்டு டம்பர் பிளேசர், இரண்டு டிராக்டர்கள் என 4 வாகனங்கள் சேரும் குப்பைகளை உடனடியாக எடுத்து உரக் கிடங்குக்குக் கொண்டு செல்லும் பணியில் ஈடுபடுத்தப்படும்.

மேலும், வரும் 23-ம் தேதி பழனி பகுதியில் உள்ள உணவு விடுதிகள், ஹோட்டல் உரிமையாளர்கள், டீக்கடைக்காரர்களை அழைத்து கூட்டம் நடத்தப்படவுள்ளது என அவர் தெரிவித்தார்.

துப்புரவுப் பணியில் நகராட்சி ஆய்வாளர்கள் மணிகண்டன், மதுரைவீரன், அனீபா, நெடுமாறன் மற்றும் சையது அபுதாகீர், மேற்பார்வையாளர் மாரிமுத்து உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Last Updated on Saturday, 19 December 2009 07:58
 

கும்மிடிப்பூண்டி கடைகளில் பொருள்கள் தரம் ஆய்வு

Print PDF

தினமணி 19.12.2009

கும்மிடிப்பூண்டி கடைகளில் பொருள்கள் தரம் ஆய்வு

கும்மிடிப்பூண்டி, டிச.18: கும்மிடிப்பூண்டியில் மளிகைக் கடைகளில் பொருள்களின் தரம், கலப்படம் குறித்து வட்டார சுகாதார ஆய்வாளர்கள் வியாழக்கிழமை திடீர் ஆய்வு செய்தனர்.

திருவள்ளூர் சுகாதார இணை இயக்குநர் டாக்டர் சம்பத்தின் உத்தரவின் பேரில், கும்மிடிப்பூண்டி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சர்தார்கான் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் சம்பந்தம், தயாநிதி, சுகுமார், தங்கவேலு, ஹரிநாராயணன், முரளிகிருஷ்ணன் ஆகியோர் கும்மிடிப்பூண்டி பஜார் மற்றும் காட்டுக் கொல்லை தெரு போன்றவற்றில் உள்ள 25-க்கும் மேற்பட்ட மளிகைக் கடைகளில் திடீர் ஆய்வு நடத்தினர். இந்த சோதனையில் தரக்கட்டுப்பாடு குறியீடு இல்லாமலும், சுகாதாரமற்ற முறையிலும் தயாரிக்கப்படாமலும் இருந்த பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டன.

 


Page 416 of 519