Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

குமரி மாவட்டத்தில் பிற மாநில குழந்தைகள் 343 பேருக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து

Print PDF

தினமணி 16.11.2009

குமரி மாவட்டத்தில் பிற மாநில குழந்தைகள் 343 பேருக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து

நாகர்கோவில், நவ. 15: கன்னியாகுமரி மாவட்டத்தில் பிற மாநிலங்களில் இருந்கு வசிக்கும் குடும்பங்களைச் சேர்ந்த 343 குழந்தைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வசிக்கும் இக் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க சுகாதாரத் துறை உத்தரவிட்டது. இதையடுத்து, இரு கட்டமாக நவம்பர் 15, டிசம்பர் 13 இரு தேதிகளில் சொட்டுமருந்து கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது.

மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் ஆய்வு செய்யப்பட்டதில் 724 குடும்பங்களைச் சேர்ந்த 343 குழந்தைகள் 5 வயதிற்கு உட்பட்டவர்கள் என தெரிய வந்தது. இதையடுத்து, அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

நாகர்கோவில் நகராட்சி சுகாதார அலுவலர் போஸ்கோ ராஜா வடசேரி பகுதியிலும், மாவட்ட சுகாதாரப் பணிகள் உதவி இயக்குநர் சுந்தரவல்லி, மாவட்ட தாய்சேய் நல அலுவலர் சுப்புலட்சுமி செண்பகராமன்புதூர், ஆரல்வாய்மொழி பகுதியிலும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினர். டிசம்பர் 13-ம் தேதி இரண்டாம் கட்டமாக வழங்கப்படுகிறது.

Last Updated on Monday, 16 November 2009 06:40
 

திருச்சியில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்

Print PDF

தினமணி 16.11.2009

திருச்சியில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்

திருச்சி, நவ. 15: திருச்சி மாநகரில் கொசுக்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நவீன இயந்திரங்களைக் கொண்டு புகை மருந்து அடிக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை முதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தொடக்கத்தில், கோ-அபிஷேகபுரம் கோட்டத்தைச் சேர்ந்த 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60 ஆகிய 9 வார்டுகளிலும் புகை மருந்து அடிக்கப்பட்டது.

மண்டல பூச்சியியல் வல்லுநர் குழு அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட நவீன தொழில்நுட்பம் கொண்ட இயந்திரங்கள் மூலம் புகை மருந்து அடிக்கப்படுகிறது. மேலும், தண்ணீர்த் தொட்டிகள் உள்ளிட்ட கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களில் "அபேட்' மருந்துக் கலவை தெளிக்கப்படுகிறது. 6 நாள்களுக்கு ஒரு முறை வார்டுக்கு இரு துப்புரவுப் பணியாளர்கள் சுழற்சி முறையில் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

ஆய்வுக் கூட்டம்

கொசுக்களைக் கட்டுப்படுத்துதல் மற்றும் சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துதல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாநகராட்சி ஆணையர் த.தி. பால்சாமி தலைமை வகித்தார். சுகாதார அலுவலர் டாக்டர் கே.சி. சேரன் உள்ளிட்ட மருத்துவ அலுவலர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள், பல்நோக்கு சுகாதாரப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். கொசுப் புழுக்களை ஆரம்ப நிலையிலேயே அழித்தல், புகை மருந்து அடித்தல், மழைநீர் வடிகால்களை தூர் வாருதல், சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்துதல் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

கூட்டத்தில் ஆணையர் த.தி. பால்சாமி பேசியது:

""மாநகராட்சி மருத்துவ அலுவலர்கள், பகுதி சுகாதார பார்வையாளர்கள், பல்நோக்கு சுகாதாரப் பார்வையாளர்கள் தங்களின் நகர்நல மையத்துக்குள்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்து காய்ச்சல் போன்ற நோய் அறிகுறி கொண்டவர்களுக்கு சிறப்பான மருந்துகளும், சீரிய மருத்துவ ஆலோசனைகளும் அளிக்க வேண்டும்.

அனைத்து வார்டுகளிலும் சுழற்சி முறையில் கொசு மருந்து அடித்தலை தீவிரப்படுத்த வேண்டும். பள்ளிகளில் சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும். பொதுமக்களிடம் பல்வேறு முறைகளில் சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்'' என்றார் பால்சாமி.பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்

மாநகராட்சிக்குள்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் எங்கு மழை நீர் தேங்கியிருந்தாலும், பொது மக்களுக்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தாலும் மாநகராட்சி நகர் நல அலுவலர் தொலைபேசி எண்: 2410520-ல் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

Last Updated on Monday, 16 November 2009 06:38
 

வீடுகளுக்குள் மழைநீர் புகாத வகையில் தடுப்பு நடவடிக்கை

Print PDF

தினமணி 16.11.2009

வீடுகளுக்குள் மழைநீர் புகாத வகையில் தடுப்பு நடவடிக்கை

அரியலூர், நவ. 15: அரியலூர் பகுதியில் சனிக்கிழமை பெய்த பரவலான மழையால் செட்டி ஏரி, குறிஞ்சான் குள ஏரி, ஐயப்பன் ஏரி, சித்தேரி, பள்ளேரி உள்ளிட்ட 5 ஏரிகள் நிரம்பின. இதனால், ஏரிகளுக்குச் செல்லும் வாய்க்கால்கள் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் திருப்பிவிடப்பட்டு வருகின்றன. தாழ்வான பகுதிகளிலுள்ள வீடுகளில் மழைநீர் புகாத வகையில் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறன.

அரியலூர் நகராட்சியிலுள்ள செட்டி ஏரி நிரம்பியதைத் தொடர்ந்து, ஏரிக்கு வரும் மழைநீரை கல்லங்குறிச்சி வழியாகச் செல்லும் வாய்க்கால்கள் மூலம் ஐயப்பன் ஏரிக்கும், சித்தேரிக்கும் திருப்பிவிட நகராட்சியின் நிர்வாக அதிகாரி த. சமயச்சந்திரன், சுகாதாரப் பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து மழைநீர் வேறு வழியாக திருப்பிவிடப்பட்டது. இதனால் எம்.ஜி.ஆர். நகர், அரசு குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் தேங்காத நிலை ஏற்பட்டது.

இதேபோல, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வழியாக வருகிற கால்வாய், ஐயப்பன் ஏரி அருகே தேங்கியதால், பெரியத் தெரு, கோ.சி. நகர், தெற்கு தெரு, சடையப்பர் தெருக்களில் தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து நகராட்சி ஊழியர்கள், கால்வாயில் இருந்த அடைப்புகளை சரி செய்தும் மணல் மூட்டைகளை தண்ணீர் வெளியேறாத வகையில் அடைத்ததால், தண்ணீர் தேங்காமல் தற்போது சித்தேரி வழியாக வெளியேறிச் செல்கிறது.

கடந்தாண்டில் பெய்த மழையில் 30-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது. இதனால், நகராட்சி ஊழியர்கள் நடப்பாண்டில் தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கைகள் மேற்கொண்டதால், நகராட்சி முழுவதும் மழைநீர் தேங்காத நிலை ஏற்பட்டுள்ளது.

நகராட்சியில் ஏரிகள், வாய்க்கால்களில் உடைப்பு ஏற்பட்டால் சரிசெய்யும் விதத்தில் தயார் நிலையில் மணல் மூட்டைகள் வைக்கப்பட்டு, நகராட்சியின் சுகாதார ஆய்வாளர் ரவீந்தரன் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாக நகராட்சியின் நிர்வாக அதிகாரி த. சமயச்சந்திரன், தலைமை அலுவலர் என். குமரன் உள்ளிட்டோர் தெரிவித்தனர்.

வெள்ள நிவாரணப் பணியில், நகராட்சியின் சுகாதாரப் பணியாளர்களும், வருவாய்த் துறை பணியாளர்களும் சேர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். வெள்ள நிவாரணப் பணிகளை நகராட்சித் துணைத் தலைவர் வி. சுப்பிரமணியன், நிர்வாக அதிகாரி த. சமயச்சந்திரன், தலைமை அலுவலர் என். குமரன் உள்ளிட்டோர் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனர்.

Last Updated on Monday, 16 November 2009 06:37
 


Page 442 of 519