Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

நகராட்சி சார்பில் போடியில் 20 ஆயிரம் பேருக்கு நிலவேம்பு கசாயம்

Print PDF

தினமணி             12.07.2013

நகராட்சி சார்பில் போடியில் 20 ஆயிரம் பேருக்கு நிலவேம்பு கசாயம்

போடியில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில், 20 ஆயிரம் பேருக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

   போடி பகுதியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக தெரியவந்ததை அடுத்து, கடந்த 2 வாரமாக டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கொசு ஒழிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

  இதையொட்டி, வீடு வீடாகச் சென்று தொட்டிகளில் தண்ணீர் தேங்காத வகையில் பயன்படுத்த வலியுறுத்தப்பட்டது. பல தெருக்களில் தண்ணீர் தேக்கி வைக்க பயன்படுத்திய சிமென்ட் தொட்டிகளை உடைத்து அப்புறப்படுத்தினர். இதனால், பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாயினர்.

  இதனிடையே, போடியில் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கும் வகையில், நிலவேம்பு கசாயம் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் இயங்கி வரும் சத்துணவு மையங்கள் மற்றும் பள்ளிகளில் பயிலும் 12 ஆயிரம் மாணவர்கள், போடி நகராட்சியின் கீழ் இயங்கும் 32 அங்கன்வாடி மையங்கள் மூலம் 8 ஆயிரம் பேருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, புதன், வியாழக்கிழமைகளிலும் வழங்கப்பட்டது. வெள்ளிக்கிழமையும் வழங்கப்படுகிறது.

  நிலவேம்பு கசாயம் பிற்பகல் 3 முதல் மாலை 5 மணி வரை வழங்கப்படுவதாக, நகராட்சி ஆணையர் தெரிவித்தார். நிலவேம்பு குடிநீர் வழங்குவதற்கான ஏற்பாடுகளை, நகராட்சி சுகாதாரத் துறையினர் செய்து வருகின்றனர்.

 

பிளாஸ்டிக் குப்பை சேகரிக்கும்துப்புரவு பணியாளருக்கு "பரிசு'

Print PDF
தினமலர்      11.07.2013

பிளாஸ்டிக் குப்பை சேகரிக்கும்துப்புரவு பணியாளருக்கு "பரிசு'


திருச்சி: "மக்காத பிளாஸ்டிக் குப்பைகளை அதிகளவில் சேகரிக்கும் துப்புரவுப் பணியாளருக்கு பரிசுகள் வழங்கப்படும்' என்று மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி தெரிவித்துள்ளார்.திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட, 2,500 தெருக்களிலிருந்து, 2,000 துப்புரவுப்பணியாளர் மூலம், நாள்தோறும், 410 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இக்குப்பைகள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக பிரித்து, மக்கும் குப்பைகளை உரம் தயாரிக்கவும், மக்காத குப்பைகளை விற்பனைப் பொருளாக மாற்றிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஆரம்ப நிலையிலேயே மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை மக்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்களிடமிருந்து பெற மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடுகளை செய்கிறது.

இதற்காக, துப்புரவுப்பணியாளருக்கான சிறப்பு பயிற்சி முகாம் திருச்சி தேவர் ஹாலில் நடந்தது.கூட்டத்தில் கமிஷனர் தண்டபாணி தெரிவித்ததாவது:

மக்காத பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளை தரம் பிரித்து, அரியமங்கலம் கோட்டத்தில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவிலும், கோ.அபிஷேகபுரம் கோட்டத்தில் வாமடம் பகுதியிலும், பொன்மலை கோட்டத்தில் பறவைகள் சாலையிலும், ஸ்ரீரங்கம் கோட்டத்தில் அம்பேத்கர் நகரிலும் உலர் வளமையத்தில் சேகரிக்கப்படுகிறது.

சேகரிப்படும் மக்காத பிளாஸ்டிக் குப்பைகள் விற்பனை செய்யப்பட்டு, அதிகளவில் மக்காத குப்பைகள் சேகரித்த துப்புரவுப் பணியாளருக்கு பரிசு வழங்கப்படும். சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகளான காய்கறி கழிவு முழுமையாக உரம் தயாரிக்க பயன்படுத்தப்படும்.

தூய்மையான தெரு, தூய்மையான நகரம் என்ற புதுமொழிக்கேற்ப, மாநகராட்சிப்பகுதியில் உள்ள, 160 பகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அப்பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு, 200 லிட்டர் கொள்ளவு கொண்ட பிளாஸ்டிக் குப்பைத்தொட்டி வழங்கப்பட உள்ளன.இந்த குப்பைத்தொட்டிகளில் சேகரிக்கப்படும் உலர் கழிவுகள் மற்றும் மக்கும் குப்பைகள் ஆரம்ப நிலையிலேயே பிரிக்கப்பட்டு, தனித்தனியாக மாநகராட்சி துப்புரவுப்பணியாளர்களால் லாரி மூலம் எடுத்துச் செல்லப்படும்.மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை ஆரம்ப நிலையிலேயே பிரிப்பதற்கு மக்கள், அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் துப்புரவுப்பணியாளருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.கூட்டத்தில், நகர் நல அலுவலர் (பொ) அல்லி, ஏ.சி.க்கள் தயாநிதி, தனபாலன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

வெறிநாய்க்கடி சம்பவங்கள் குறைவு

Print PDF

தினமணி              10.07.2013

வெறிநாய்க்கடி சம்பவங்கள் குறைவு

மதுரை மாநகராட்சியில் வெறி நாய்க்கடி சம்பவங்கள் குறைந்து விட்டதாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மாநகராட்சி ஆணையர் ஆர்.நந்தகோபால் தகவல் தெரிவித்துள்ளார்.

 வழக்குரைஞர் சி.எழிலரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.ராஜேஸ்வரன், டி.மதிவாணன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வெறிநாய்களை ஒழிக்க ஏற்கெனவே உத்தரவிட்டு இருந்தது. மேலும் மாநகராட்சி ஆணையர் பதில் மனு தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.

 இதன்படி ஆணையர் ஆர்.நந்தகோபால் தாக்கல் செய்துள்ள பதில் மனு:

 நாய்களை பிடிப்பது, கருத்தடை செய்வது, ரேபிஸ் தாக்காமல் தடுக்க தடுப்பூசி போடுவது போன்றவற்றை, மாநகராட்சி நிர்வாகம் முறையாகச் செயல்படுத்தி வருகிறது. இதற்கென பயிற்சி பெற்ற ஊழியர்கள், மருத்துவர்கள் பணியாற்றுகின்றனர். நாய்களை வலை போட்டு பிடிக்கிறோம்.

 அவற்றை பன்முக சிகிச்சை மையங்களுக்குக் கொண்டு சென்று கருத்தடை செய்து விடுகிறோம். இதற்காக பிரத்யேக அறுவைச் சிகிச்சைக் கூட வசதியும் உள்ளது. மேலும் நாய்களை அடைத்து வைத்திருக்க தனித் தனி கூண்டுகளும் உள்ளன.

 கருத்தடை செய்தபிறகு, ஆண் நாய்களை 3 நாள்களும், பெண் நாய்களை 7 நாள்கள் வரையிலும் அடைத்து வைத்து பராமரிக்கிறோம்.

   இந்தக் காலத்தில் அவற்றுக்கு போதிய உணவளிக்கும் பணியில் சுயஉதவிக் குழுவினர் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

  பிறகு அவற்றை பிடித்த இடத்துக்கு கொண்டு சென்று விட்டு விடுகிறோம். மக்கள் அச்சத்தை போக்கவே, இந்த திட்டத்தை மாநகராட்சி செயல்படுத்தி வருகிறது.  

  இதன் காரணமாக, மதுரை மாநகராட்சி பகுதிகளில் வெறிநாய்க்கடி சம்பவங்கள் குறைந்து விட்டன. 2007, 2008, 2009 ஆகிய 3 ஆண்டுகளில் வெறிநாய்க் கடியால் உயிரிழப்பு ஏற்படவில்லை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 விசாரணை வருகி 18 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 


Page 48 of 519