Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

தனியார் மருத்துவ மணைகளில் கோவை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை

Print PDF

தினமலர் 18.09.2009

 

ஆற்றிலேயே குப்பை கொட்டும் பேரூராட்சி

Print PDF

தினமணி 18.09.2009

ஆற்றிலேயே குப்பை கொட்டும் பேரூராட்சி

திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றில் உயர்ந்து நிற்கும் குப்பை மேடு.

கே. சத்தியமூர்த்தி

திருக்கோவிலூர், செப். 17: திருக்கோவிலூர் நகரத்தில் சேகரமாகும் கழிவுகளை தென்பெண்ணை ஆற்றில் கொட்டி பாழ்படுத்தி வருகிறது பேரூராட்சி நிர்வாகம்.

இந் நகரத்தில் புகழ்பெற்று விளங்கும் உலகளந்த பெருமாள் கோயில், வீரட்டானேஸ்வரர் கோயில், கபிலர் குன்று, ஸ்ரீரகூத்ம சுவாமிகள் பிருந்தாவனம் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு மத்தியில் பெருமை சேர்க்கின்ற வகையில் தென்பெண்ணை ஆறு உள்ளது.

கோயில்கள் அதிகம் கொண்டுள்ள இந் நகரத்துக்கு நாள்தோறும் தமிழகத்தில் இருந்தும், கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் திருக்கோவிலூர் நகரத்தில் சேரும் குப்பைகளை நகரத்தையொட்டி உள்ள தென்பெண்ணை ஆற்றில் காலம் காலமாக பேரூராட்சி நிர்வாகம் கொட்டி வருகிறது.

நாளுக்குநாள் அதிகரிக்கும் வகையில் விண்ணை முட்டுகிற அளவுக்கு தென்பெண்ணை ஆற்றில் இந்த குப்பை மேடு காட்சியளிக்கிறது. லேசான காற்று வீசினால் குப்பையில் உள்ள கழிவுப் பொருள்கள் காற்றில் பறக்கும் நிலை ஏற்படுகிறது.

இந்நிலையில் அந்த குப்பைகளுக்கு அடிக்கடி தீ வைக்கப்படுகிறது. இதனால் ஏற்படும் புகை மூட்டத்தால் அருகாமையில் உள்ள பஸ் நிலையம், பாரத ஸ்டேட் வங்கி, எல்..சி. அலுவலகம், நெடுஞ்சாலைத் துறை அலுவலகம், வித்யாமந்திர் குழந்தைகள் பள்ளி, அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் உள்ளவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதைத் தடுக்க குப்பைகளை தென்பெண்ணை ஆற்றில் கொட்டுவதை தவிர்த்து, நகரத்துக்கு அப்பால் குடியிருப்புகள் இல்லாத இடத்தில் கொட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து திருக்கோவிலூரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள கனகனந்தல் ஊராட்சிக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதிகள் இல்லாத இடத்தில் குப்பைகளை கொட்டுவதற்கு பேரூராட்சி நிர்வாகம் கடந்த 2 ஆண்டுக்கு முன் இடத்தை வாங்கியது. ஆனால், குப்பைகளை இங்கு கொட்டுவதற்கு பதிலாக தொடர்ந்து தென்பெண்ணை ஆற்றிலேயே குப்பைகளை பேரூராட்சி நிர்வாகத்தினர் கொட்டி வருகின்றனர். பன்றிகளின் கூடாரமாக இந்த இடம் இருப்பதால் இப்பகுதி மக்கள் பல்வேறு நோய்த் தாக்குதலுக்கு ஆளாகும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் கலியமூர்த்தி கூறுகையில், ""குப்பை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் போதிய அளவுக்கு இல்லாததையடுத்து தற்போது தென்பெண்ணை ஆற்றில் குப்பைகளை கொட்டி வருகிறோம்.

இன்னும் ஒருவாரத்துக்குள் குப்பை ஏற்றிச் செல்லும் வகையில் புதிய வாகனம் வாங்கப்படும். வரும் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இருந்து நகரத்துக்கு அப்பால் உள்ள இடத்தில் குப்பைகள் கொட்டப்படும்'' என்றார்.

Last Updated on Friday, 18 September 2009 07:14
 

ராமேசுவரத்தில் நாளை குப்பைகள் அகற்றப்படும்

Print PDF

தினமணி 18.09.2009

ராமேசுவரத்தில் நாளை குப்பைகள் அகற்றப்படும்

ராமநாதபுரம், செப். 17: சர்வதேசக் கடலோரத் தூய்மை தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, சனிக்கிழமை ராமேசுவரத்தில் குப்பைகளை சேகரித்து அகற்ற முடிவு செய்திருப்பதாக, மாவட்ட வருவாய் அலுவலர் கே. பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரத்தில் சர்வதேசக் கடலோரத் தூய்மை தினம் கொண்டாடப்படுவது குறித்த முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்துக்கு, மாவட்ட வருவாய் அதிகாரி கே. பாலசுப்பிரமணியம் தலைமை வகித்துப் பேசியதாவது:

ஒவ்வொரு ஆண்டும் சர்வதேசக் கடலோரத் தூய்மை தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. எனவே, ராமேசுவரம், அரியமான் கடற்கரைப் பகுதிகளில் சுற்றுலாவினரால் கொட்டப்பட்ட ஈரத்துணிகள், பாலித்தீன் உள்ளிட்ட குப்பைகளை, சனிக்கிழமை நடைபெறும் இந்த நிகழ்ச்சியின் போது அகற்றப்படும்.

மேலும், சுற்றுப்புறத் தூய்மை குறித்து பொதுமக்கள், பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படும்.

இப்பணிகள், ராமேசுவரம் மற்றும் அரியமான் கடற்கரையில் சனிக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி 9.30 மணிக்கு முடிவடைகிறது. இதில், என்.எஸ்.எஸ்., என்.சி.சி., சாரணர்படை மாணவர்கள், கடற்படை மற்றும் ஊர்க்காவல் படையினர், மீனவர் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுவினர் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

துப்புரவுப் பணியில் ஈடுபடுவோருக்கு கையுறைகள், குடிநீர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடலோரப் பகுதிகளைச் சுத்தம் செய்யும் பணியில் அரசுத்துறை அலுவலர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என, அவர் கேட்டுக் கொண்டார்.

கூட்டத்துக்கு, கடலோரக் காவல்படை கமாண்டர்கள் ஜி. வேணுமாதவ், .கே. முட்கல், மீன்வளத்துறை உதவி இயக்குநர் ஆர். தினகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) . ஜெயராமன், உதவி வனப் பாதுகாவலர் பி. வீரபத்திரன், உச்சிப்புளி கடற்படை விமான நிலைய அலுவலர் ஆர். ரவிக்குமார் உள்பட அனைத்துத் துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

Last Updated on Friday, 18 September 2009 06:31
 


Page 478 of 519