Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

போடியில் துப்புரவுப் பணிகள் தனியார்மயம்

Print PDF
தினமணி               04.07.2013

போடியில் துப்புரவுப் பணிகள் தனியார்மயம்

போடியில் துப்புரவுப் பணிகள் தனியார் நிறுவனம் மூலம் செயல்படுத்தும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

 போடி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இவற்றில், தற்போது நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போதுள்ள மக்கள் தொகை வளர்ச்சிக்கேற்பவும், நகரின் வளர்ச்சிக்கேற்பவும் போதிய துப்புரவுப் பணியாளர்கள் இல்லை. இதனால், பல வார்டுகளில் துப்புரவுப் பணிகள் நடைபெறாமல் தேங்கியுள்ளன. எனவே, போடி பகுதியில் டெங்கு உள்ளிட்ட மர்மக் காய்ச்சல் வேகமாக பரவும் சூழல் உள்ளது. இது குறித்து, நகர்மன்ற உறுப்பினர்களும் தொடர்ந்து நகர்மன்றக் கூட்டங்களில் புகார் தெரிவித்து வந்தனர். இருப்பினும், தற்போதுள்ள நகராட்சி வருவாயின் அடிப்படையில் கூடுதலாக துப்புரவுப் பணியாளர்களை நியமிக்க முடியாத நிலை இருந்து வந்தது.

 இதைடுத்து, போடி நகராட்சியில் துப்புரவுப் பணிகளை படிப்படியாக தனியார் நிறுவனங்கள் மூலம் ஒப்பந்த அடிப்படையில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதற்கான தீர்மானம் நகர்மன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, முதல் கட்டமாக போடி நகராட்சியில் மேற்கு பகுதியில் 28 முதல் 33 வரையிலான 6 வார்டுகள் தனியார் நிறுவனம் மூலம் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ள தேர்வு செய்யப்பட்டன.

 இதற்கான ஒப்பந்தம், அவர் லேண்ட் இன்ஜினீயரிங் என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிறுவனம் 6 வார்டுகளுக்கு 54 துப்புரவுப் பணியாளர்களை நியமித்துள்ளது. இவர்கள் மூலம் நகராட்சி நிர்வாகம் பணிகளை மேற்கொள்ளும். இதற்காக, ஆண்டு ஒன்றுக்கு ரூ. 49 லட்சத்து 80 ஆயிரம் செலவாகும்.

 தனியார் நிறுவனம் மூலம் துப்புரவுப் பணிகள், புதன்கிழமை சுப்புராஜ் நகர் சிட்னி விளையாட்டு மைதானம் அருகே தொடங்கப்பட்டது. ஆணையர் எஸ். சசிகலா தலைமை வகித்தார். நகர்மன்றத் தலைவர் வி.ஆர். பழனிராஜ் துப்புரவு உபகரணங்களை வழங்கி, துப்புரவுப் பணியை தொடங்கி வைத்தார்.

 நிகழ்ச்சியில், நகர்மன்ற உறுப்பினர்கள் ஜெயராம் பாண்டியன், சித்திரன், முரசு பாலு மற்றும் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள், மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

ஆவடி நகராட்சியில் சிறப்பு சுகாதாரப் பணி தொடக்கம்

Print PDF

தினமணி              02.07.2013

ஆவடி நகராட்சியில் சிறப்பு சுகாதாரப் பணி தொடக்கம்

ஆவடி நகராட்சியில், சிறப்பு சுகாதாரப் பணிகளை அமைச்சர்கள் வி.மூர்த்தி, எஸ்.அப்துல் ரஹீம் சனிக்கிழமை தொடங்கி வைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், திருத்தணி, ஆவடி, பூந்தமல்லி மற்றும் மாதவரம் ஆகிய 5 நகராட்சிகளிலும் தீவிர சிறப்பு சுகாதார பணிகளை மேற்கொள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு இருந்தார். இதன்படி, கடந்த 15-ஆம் தேதி திருவள்ளூரில் சுகாதார பணிகளை தொடங்கப்பட்டது. தொடர்ந்து, திருத்தணியிலும் சிறப்பு சுகாதார பணிகள் நடைபெற்றன.

இந்நிலையில், ஆவடி நகராட்சியில் தீவிர சிறப்பு சுகாதாரப் பணிகள் தொடக்க விழா ஆட்சியர் கோ.வீரராகவராவ் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. நகர கமிஷனர் மோகன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக பால்வளத்துறை அமைச்சர் வி.மூர்த்தி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் எஸ்.அப்துல் ரஹீம் கலந்து கொண்டு சுகாதார பணிகளை, ஆவடி ரயில் நிலையம் அருகில் தொடங்கி வைத்தனர். மக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

நகரப் பொறியாளர் பாலசுப்பிரமணியம், சுகாதார ஆய்வாளர் பழனிச்சாமி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். 5 நாட்கள் நடைபெறவுள்ள இந்த சுகாதார பணியில் 50 சிறப்பு பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

 

டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுக்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் மாநகராட்சி ஆணையாளர் பேச்சு

Print PDF

தினத்தந்தி             30.06.2013

டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுக்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் மாநகராட்சி ஆணையாளர் பேச்சு

டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுக்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் லதா கூறினார்.

ஆலோசனைக் கூட்டம்

டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்கள் குறித்தும் அவற்றை கட்டுப்படுத்தும் முறைகள் பற்றியும் மாநகரா£ட்சி ஆணையாளர் லதா பேசியதாவது:–

டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுவானது பெரும்பாலும் வீடுகளை சுற்றியுள்ள பழைய சிமெண்ட் தொட்டிகள், டிரம்கள், பழைய டயர்கள், உபயோகமற்ற மண்பாண்டங்கள், ஆட்டுக்கல், பூந்தொட்டிகள், மேல்நிலை நீர்தேக்க தொட்டி, தேங்காய் ஓடுகள், குளிர்காற்றுப் பெட்டி உபயோகமற்ற பிளாஸ்டிக் கப்புகள் போன்றவற்றில் தேங்கும் தண்ணீரில் தான் உற்பத்தியாகிறது. எனவே வீட்டை சுற்றியுள்ள தேவையற்ற பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். இந்த வகை கொசுக்கள் பெரும்பாலும் பகலில் கடிக்க கூடியவை. அவை வீடுகளில் உள்ள இருட்டான பகுதிகளான மேஜை மற்றும் நாற்காலியின் அடிப்பகுதி, கதவு மற்றும் ஜன்னல்களின் திரைச்சீலைகளின் பின்னால் பதுங்கியிருக்கும். எனவே வீட்டினுள் சூரிய வெளிச்சம்படும்படி கதவு ஜன்னல்களை திறந்து வைக்க வேண்டும்.

ஒத்துழைப்பு

பாத்திரங்களில் நீண்டநாட்கள் நீர் சேமித்து வைப்பதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு நீர் சேமித்துவைக்கும் பாத்திரங்கள் மற்றும் தொட்டிகளை காற்று புகாவண்ணம் நன்கு மூடி வைக்க வேண்டும். பிளிச்சிங் பவுடர் கொண்டு நன்கு தேய்த்து வாரம் ஒரு முறை கழுவ வேண்டும். உபயோகமில்லாத தொட்டிகள் மற்றும் ஆட்டுக்கல் ஆகியவற்றை தலைகீழாக கவிழ்த்து வைக்க வேண்டும். பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் தங்கள் இருப்பிடங்களில் வைத்திருக்கும் பழைய டயர்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். அவ்வாறு அப்புறப்படுத்தாவிட்டால் அவை அனைத்தும் மாநகராட்சியால் பறிமுதல் செய்யப்படும். எனவே பொது மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் சுகாதார ஆய்வாளர்களை கொசு புகை மருந்தடிக்கும் பணிகளை துரிதப்படுத்தவும், ஒலி பெருக்கி மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கேட்டுக்கொண்டார். கூட்டத்தில் துணை ஆணையாளர் சிவராசு, நகர் நல அலுவலர், நகர் நல மைய மருத்துவ அலுவலர்கள், அனைத்து சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

Last Updated on Monday, 01 July 2013 07:59
 


Page 49 of 519