Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

உடுமலை நகராட்சிப்பகுதிகளில் இனி இல்லை இலவசம்! பாலித்தீன் பைகளுக்கும் கட்டணம் உண்டு

Print PDF

தினமலர்             17.06.2013

உடுமலை நகராட்சிப்பகுதிகளில் இனி இல்லை இலவசம்! பாலித்தீன் பைகளுக்கும் கட்டணம் உண்டு
 

உடுமலை:உடுமலை நகராட்சிப்பகுதிகளில், பாலித்தீன் பைகள் 40 மைக்ரானுக்கு மேலாக இருந்தாலும், உபயோகிப்பாளர்களுக்கு இலவசமாக வழங்கக்கூடாது; தனியாக கட்டணம் வசூலிக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. இதன் பயன்பாட்டினை தடுக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக

அதிகாரிகள் தெரிவித்தனர். உடுமலை நகராட்சியில், கடந்தாண்டு ஜூலை மாதம் 40 மைக்ரானுக்கு குறைவாக உள்ள பாலித்தீன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு, அபராதம் விதிக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்தாண்டு செப்டம்பர் மாதம் முதல் தடை அமலுக்கு வந்தது. இவற்றை பயன்படுத்த வேண்டாம் என அறிவுரைகளும் வழங்கப்பட்டன.
நகராட்சி அதிகாரிகள் மூலம் அவ்வப்போது சோதனை நடத்தப்பட்டு இவை பறிமுதல் செய்யப்படுகின்றன. தடை செய்யப்பட்ட இவற்றை பயன்படுத்தும் வர்த்தக நிறுவனங்கள், உபயோகிப்பாளரான பொதுமக்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த நகராட்சி சாதாரணக்கூட்டத்தில், "பாலித்தீன் கழிவுகள் மேலாண்மை மற்றும் கையாளுதல் விதிகள் 2011ன்படி, எந்தவொரு பாலித்தீன் பைகளும், 40 மைக்ரானுக்கு மேற்பட்டதாக இருந்தாலும் உபயோகிப்பாளர்களுக்கு இலவசமாக வழங்கக்கூடாது என கூறப்பட்டுள்ளது. எனவே, வியாபாரிகள், வணிக நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு (பொதுமக்கள்) வழங்கும் 40 மைக்ரானுக்கு மேற்பட்ட பாலித்தீன் பைகளாக இருந்தாலும் தனியாக கட்டணம் வசூலிக்க வேண்டும்.

இதனால் பொதுமக்களிடம் இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், மறு சுழற்சி, மறுவினியோகம், உபயோகத்தினை குறைத்தல் என பழக்கப்படுத்தும் வகையில், உள்ளாட்சி நிறுவனங்கள் தொகை நிர்ணயம் செய்திட வேண்டும். 40 மைக்ரானுக்கு மேற்பட்ட சிறிய ரக பை ஐந்து ரூபாய், பெரிய ரக பை 10 ரூபாய் என நிர்ணயம் செய்து வழங்கிட வேண்டும்,' எனத்தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், "சுற்றுப்புறச்சூழல் மாசுபடுவதை தடுக்கும் வகையிலும், பொதுமக்களிடம் படிப்படியாக பாலித்தீன் பயன்பாட்டினை குறைக்கவும் இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு வணிக நிறுவனங்கள், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

ஏற்கனவே, பாலித்தீன் பயன்படுத்த தடை, மீறினால் அபராதம் போன்றவை நடைமுறையில் உள்ளதால், இத்திட்டம் செயல்படுத்தினால் கட்டுப்படுத்த முடியும் என நம்புகிறோம்,' என்றனர்.

சாத்தியமாகுமா?

நகரப்பகுதியில் பாலித்தீன் பொருட்களுக்கு தடை விதித்தாலும், பயன்பாடு குறைந்தபாடில்லை. பல இடங்களிலும் இவற்றிலேயே பொருட்கள் வாங்கிச் செல்லும் நிலை காணப்படுகிறது.

இந்நிலையில், கடைகளில் இலவசமாக வழங்காமல் கட்டணம் நிர்ணயிக்க சொல்லி வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடைகளில் பாலித்தீன் பைகளுக்கு தனியாக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்றும், இதை தடையை மீறி பயன்படுத்துபவர்களுக்கு அபராதம் மற்றும் கண்காணிப்பு பணிகளை தொடர்ந்தால், பாலித்தீன் இல்லா நகரமாக உடுமலையை மாற்ற முடியும்.

 

சென்னையில் 2,500 கிலோ மாட்டிறைச்சி பறிமுதல்

Print PDF

தினமணி             17.06.2013

சென்னையில் 2,500 கிலோ மாட்டிறைச்சி பறிமுதல்

ஆம்னி பஸ்களில் கொண்டு வரப்பட்ட தரமற்ற மாட்டு இறைச்சியை பெரியமேடு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றிய  மாநகராட்சியின் சுகாதாரத்துறை அதிகாரிகள்.
ஆம்னி பஸ்களில் கொண்டு வரப்பட்ட தரமற்ற மாட்டு இறைச்சியை பெரியமேடு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றிய  மாநகராட்சியின் சுகாதாரத்துறை அதிகாரிகள்.

சென்னையில் 2,500 கிலோ மாட்டிறைச்சியை பறிமுதல் செய்து அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை அழித்தனர்.

வெளிமாநிலங்களில் இருந்து தரமற்ற மாட்டிறைச்சி சென்னைக்கு கொண்டுவரப்படுவது தொடர் கதையாக உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு ரயில்களில் தரமற்ற இறைச்சி கொண்டுவரப்பட்டன. ரயில்களில் கொண்டுவரப்படும் இறைச்சிகள் அவ்வப்போது பறிமுதல் செய்து அழிக்கப்பட்டு வந்தன.

இதனையடுத்து சாலை வழியாக இறைச்சி கொண்டு வரப்படுவது அதிகரித்தது. இந்ந நிலையில் 2,500 கிலோ மாட்டிறைச்சியை உணவுப் பாதுகாப்புத் துறை மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து அழித்துள்ளனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறியது: சென்னைக்கு தனியார் பஸ்கள் மூலம் தரமற்ற மாட்டு இறைச்சி கொண்டு வரப்படுவதாக தகவல் கிடைத்தது. இதனை கண்டுபிடிக்க பலமுறை முயற்சி செய்யப்பட்டது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை வேப்பேரி பகுதியில் வந்து கொண்டிருந்த இரண்டு ஆம்னி பஸ்களை நிறுத்தி சோதனை செய்ததில், மூட்டைகளில் கட்டப்பட்ட சுமார் 2,500 கிலோ மாட்டிறைச்சி இருந்தது. இதனை பரிசோதனை செய்ததில் அவை கெட்டுப்போனவை என்று தெரியவந்தது.

இதனையடுத்து அந்த இறைச்சி கொடுங்கையூர் குப்பைக் கொட்டும் வளாகத்தில் அழிக்கப்பட்டது. இறைச்சியை கடத்தி வந்த இரண்டு பஸ்களும் கர்நாடக மாநில பதிவு எண் கொண்டவை. அதன் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் எச்சரிக்கப்பட்டனர். இந்த இறைச்சி வாணியம்பாடியில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் இந்த இறைச்சி சென்னையில் உள்ள இறைச்சிக் கடைகளில், ஆட்டிறைச்சியுடன் கலந்து விற்கப்படுவதாக தெரிகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

4 வார்டு துப்புரவுப் பணிகள் தனியார் வசம் அளிப்பு

Print PDF

தினமணி               15.06.2013 

4 வார்டு துப்புரவுப் பணிகள் தனியார் வசம் அளிப்பு

கரூர் நகராட்சியில் சோதனை அடிப்படையில் 4 வார்டுகளின் துப்புரவுப் பணிகள் தனியார் வசம் அளிக்கப்பட்டுள்ளது.

கரூர் நகராட்சி பகுதியில் துப்புரவு பணிகள் தனியார் நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது. சோதனை அடிப்படையில் 3,4,5,18 ஆகிய வார்டுகள் சோதனை அடிப்படையில் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ள வெள்ளிக்கிழமை தனியார் வசம் அளிக்கப்பட்டது.

இதை பார்வையிட்ட நகர்மன்றத் தலைவர் எம். செல்வராஜ் கூறியது: முதல் கட்டமாக தனியார் வசம் அளிக்கப்பட்டுள்ள இந்த 4 வார்டுகளிலும், வீடு, வீடாகச் சென்று குப்பைகள் சேகரிக்கப்பட்டு, தரம் பிரிக்கப்படும். இந்தப் பணியில் 50 பேர் ஈடுபட உள்ளனர். இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 20 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்படும். கரூர் நகராட்சி முழுவதும் நாள் ஒன்றுக்கு 130 மெட்ரிக் டன் குப்பை சேகரிக்கப்படுகிறது.  சோதனை அடிப்படையில் முதலில் 4 வார்டுகளுக்கு இந்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதன் பின்னர் மற்ற வார்டுகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றார்.

நிகழ்ச்சியில் கரூர் நகராட்சி ஆணையர் (பொ) எல். கோபாலகிருஷ்ணன், பொறியாளர் புண்ணியமூர்த்தி, நகர் நல அலுவலர் ஹேமசந்த் காந்தி மற்றும் வார்டு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

 


Page 53 of 519