Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

நகராட்சிகளை தூய்மையாக்கும் திட்டம்:திருவள்ளூரில் இன்று தொடக்கம்

Print PDF

தினமணி               15.06.2013

நகராட்சிகளை தூய்மையாக்கும் திட்டம்:திருவள்ளூரில் இன்று தொடக்கம்

திருவள்ளூர் மாவட்டத்தை தூய்மையான மாவட்டமாக மாற்றும் நோக்கில் முதல் கட்டமாக நகராட்சிகளை தூய்மையாக்கும் திட்டத்தை திருவள்ளூர் நகராட்சியில் சனிக்கிழமை அமைச்சர் பி.வி.ரமணா தொடங்கி வைக்கிறார்.

 இதுகுறித்து திருவள்ளூர் நகராட்சி சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இம்மாவட்டத்தை தூய்மையான மாவட்டமாக மாற்ற மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் அனைத்து நகராட்சிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

 அதன்படி இம்மாவட்டத்தில் முதல் கட்டமாக திருவள்ளூர், திருத்தணி, ஆவடி, திருவேற்காடு, பூந்தமல்லி ஆகிய நகராட்சிகளில் துப்புரவுப் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. திருவள்ளூர் நகராட்சியில் நேதாஜி சாலையில் உள்ள ராஜம்மாள் தேவி பூங்காவில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.வி.ரமணா இத்திட்டத்தை தொடங்கிவைக்கின்றார்.

 இதில் 5 லாரிகள், 50 துப்புரவுப் பணியாளர்களுடன் 5 லாரிகள் மூலம் குப்பை அகற்றுதல், கால்வாய் மண் அகற்றுதல், செடி கொடிகளை அப்புறப்படுதுதல், சந்துகளை சுத்தப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

நகராட்சியில் சுகாதாரப் பணிகள்ஆலோசனைக் கூட்டம்

Print PDF

தினமணி              14.06.2013

நகராட்சியில் சுகாதாரப் பணிகள்ஆலோசனைக் கூட்டம்

விழுப்புரம் நகராட்சியில் சுகாதாரப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு நகர்மன்றத் தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார். ஆணையர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.

அனைத்து வார்டுகளிலும் வாரத்தில் இரண்டு நாள்கள் துப்புரவுப் பணிகள் மேற்கொள்வது, நகராட்சி பகுதிகள் விரிவடைவதால் நகரின் முக்கியப் பகுதிகளை தனியார் மயமாக்குவது உள்ளிட்டவை குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் சுகாதார ஆய்வாளர்கள் சுகவனம், சீனுவாசன், வருவாய் ஆய்வாளர் காமராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Last Updated on Friday, 14 June 2013 06:15
 

நீர்வழித்தடங்களில் வசிப்பவர்களுக்கு விரைவில் இலவச கொசு வலை

Print PDF

தினமணி              14.06.2013

நீர்வழித்தடங்களில் வசிப்பவர்களுக்கு விரைவில் இலவச கொசு வலை

கூவம் உள்பட சென்னை நகரில் உள்ள நீர்வழித் தடங்களில் வசிக்கும் ஏழை மக்களுக்கு இலவச கொசுவலை வழங்கப்பட உள்ளது.

இதற்கான பணிகள் மாநகராட்சியில் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 15 மண்டலங்களிலும் உள்ள பயனாளிகளுக்கு விரைவில் கொசுவலைகள் வழங்க உள்ளதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சுமார் 5 லட்சம் கொசு வலைகள் வழங்கத் திட்டமிடப்பட்டு, அதற்கான டெண்டர் ஏற்கனவே விடப்பட்டுள்ளது. சென்னையில், கொசு ஒழிப்புக்காக, ஆண்டுக்கு ரூ.5 கோடி வரை செலவு செய்தும் போதிய பலன் கிடைக்கவில்லை.

இந்நிலையில், கால்வாய் ஓரம் மற்றும் சாலையோரங்களில் வசிப்போருக்கு சிக்குன் குனியா, டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் தாக்க அதிக வாய்ப்புள்ளதால், அவர்களுக்கு இலவசமாக கொசு வலைகள் வழங்கப்படும் என்று மாநகராட்சி அறிவித்திருந்தது.

ஆறுக்கு ஆறடி கொண்ட பாலி எத்தினால் ஒற்றை இழையால் செய்யப்பட்ட கொசு வலைகள் அவர்களுக்கு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதற்காக நீர்வழி கரையோர குடிசை வாசிகளைக் கணக்கெடுக்கும் பணி நடத்தப்பட்டது.

தற்போது பருவமழைக் காலம் தொடங்கிவிட்டதால் மாநிலம் முழுவதும் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. சென்னையில் வெப்பச் சலனம் காரணமாக இம்மாத இறுதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

கொசுக்களின் இனப்பெருக்கம் அதிகரிக்கும் காலம் என்பதால் கொசுவலைகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விரைவில் டெண்டர் திறக்கப்பட்டு கொசுவலைகள் கொள்முதல் செய்யப்படும் எனவும், முதல்கட்டமாக எத்தனை பயனாளிகளுக்கு வழங்குவது என்பது குறித்து திட்டமிட்டு வருவதாகவும் அவர்கள் கூறினர்.

 


Page 54 of 519