Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

தருமபுரி-கிருஷ்ணகிரி சாலையில் சாக்கடை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF
தினமணி        06.04.2013

தருமபுரி-கிருஷ்ணகிரி சாலையில் சாக்கடை ஆக்கிரமிப்புகள் அகற்றம்


தருமபுரி- கிருஷ்ணகிரி சாலையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு சாக்கடை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு கழிவுநீர் வழிந்தோட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தருமபுரி நகராட்சிக்குள்பட்ட 9-ஆவது வார்டுக்குள்பட்டது வட்டார வளர்ச்சி காலனி. இந்த காலனிப் பகுதி மக்களுக்கு உரிய அடிப்படை வசதிகள் செய்துதருமாறு நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் பயனில்லை. மேலும், இந்த வார்டுக்குள்பட்ட பிரதான பகுதியாக உள்ள உழவர் சந்தை, தருமபுரி- கிருஷ்ணகிரி சாலைகளில் தேங்கும் குப்பைகளை அகற்றவும், சாக்கடை கால்வாயை தூர்வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என இந்தப் பகுதி மக்களும், வார்டு உறுப்பினர் எம். சந்திரா முருகன் ஆகியோர் நகராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இதையடுத்து, நகராட்சி சார்பில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வெள்ளிக்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதல்கட்டமாக தருமபுரி- கிருஷ்ணகிரி சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

சாலையோரத்தில் சாக்கடை கால்வாயை ஆக்கிரமித்து கட்டுப்பட்டிருந்த கட்டுமானங்கள் அனைத்தும் ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து அப்புறப்படுத்தப்பட்டன. பின்னர், பொக்ளின் மூலம் சாக்கடையை தூர்வாரி அதிலிருந்த கழிவுகள், குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்றது. சாலையின் இருபுறமும் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதுதொடர்பாக, நகராட்சி வார்டு உறுப்பினர் எம். சந்திரா முருகன் கூறியது:

9-வது வார்டுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்துதருமாறு நகராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து வலியுறுத்தியும், நகர்மன்றத்தில் வெளிநடப்பு செய்து எதிர்ப்புத் தெரிவித்து வந்தோம். இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ 5 ஆண்டுகளுக்குப் பிறகு தருமபுரி-கிருஷ்ணகிரி சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன.

சாக்கடையும் தூர்வாரப்பட்டுள்ளது. இதேபோல, அவ்வப்போது சாக்கடையை சுத்தம் செய்து, குப்பைகள், கழிவுகள் தேங்காமல் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
 

ஒப்பந்த அடிப்படையில் மகளிர் சுய உதவிக்குழு மூலம் துப்புரவு பணி மேற்கொள்ளுதல் புன்செய் தோட்டக்குறிச்சி பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்

Print PDF
தினத்தந்தி        05.04.2013

ஒப்பந்த அடிப்படையில் மகளிர் சுய உதவிக்குழு மூலம் துப்புரவு பணி மேற்கொள்ளுதல் புன்செய் தோட்டக்குறிச்சி பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்


ஒப்பந்த அடிப்படையில் மகளிர் சுய உதவிக்குழு மூலம் துப்பரவு பணி மேற்கொள்ளுவது என்று புன்செய் தோட்டக் குறிச்சி பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பேரூராட்சி கூட்டம்

புன்செய் தோட்டக்குறிச்சி பேரூராட்சியின் சாதாரணக் கூட்டம், பேரூராட்சி மன்றத்தில் நடந்தது. கூட்டத் திற்கு பேரூராட்சி தலைவர் பெரியண்ணன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ராஜேந்திரன், செயல் அலுவலர் ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

திடக்கழிவு மேலாண்மை

* 20132014ம் ஆண்டிற்கு தெருவிளக்கு, குடிநீர் திட்டம், பொது சுகாதாரம், மின் மோட்டார் பழுதுபார்த்தல் மற்றும் ஆழ்குழாய் கைப்பம்புகள் பழுதுபார்த்தல், உதிரி சாமான்கள் சப்ளை செய்தல் தொடர்பான ஒப்பந்தப் புள்ளிகள் கடந்த 27.3.2013ந் தேதி பெறப்பட்டது.

* 20132014ம் ஆண்டிற்கு ஒப்பந்த அடிப்படையில் மகளிர் சுய உதவிக்குழு மூலம் துப்புரவு பணி மேற் கொள்ளவும் மற்றும் பொது சுகாதார வாகனம், டிராக்டர் இயக்கும் பணிக்கும், பேரூராட்சி பகுதிகளில் குடிநீர் விநியோகப்பணிக்கும் ஒப்பந்தப் புள்ளி அடிப் படையில் வருடாந்திர ஒப்பந்தப்புள்ளி 27.2.2013ந் தேதி மனு பெறப்பட்டது.

தென்னை மரங்கள்

*பேரூராட்சிக்கு சொந்தமான தென்னை மரங்கள் மற்றும் பொதுப் பணித்துறையினரிடம் இருந்து குத்தகைக்கு பெறப்பட்ட தென்னை மரங்கள் 20132014ம் ஆண்டிற்கு 8.3.2013ந் தேதி பொது ஏலம் விடப்பட்டது ஆகிய தீர்மா னங்கள் நிறைவேற்றப் பட்டன.

கலந்து கொண்டவர்கள்


கூட்டத்தில் உறுப்பினர்கள் குரு, செல்வராணி, அருண், செல்வி, கருப்பண்ணன், ரஞ்சித்குமார், பரமேசுவரி, சீனிவாசன், செல்வராஜ், விஜயகுமார், ஜாகீர்உசேன், சரோஜா, ஜெகதீசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
 

பேரூராட்சியில் சுற்றித்திரியும் நாய்களுக்கு கருத்தடை வனவிலங்கு அமைப்பினர் அதிரடி நடவடிக்கை

Print PDF
தினமலர்            04.04.2013

பேரூராட்சியில் சுற்றித்திரியும் நாய்களுக்கு கருத்தடை வனவிலங்கு அமைப்பினர் அதிரடி நடவடிக்கை


ஊத்துக்கோட்டை:பேரூராட்சி தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை, சென்னை விலங்குகள் அமைப்பினர் பிடித்து, கருத்தடை செய்து வருகின்றனர்.ஊத்துக்கோட்டை பேரூராட்சியில், மொத்தம் உள்ள, 15 வார்டுகளில், 5,000 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள, 40க்கும் மேற்பட்ட தெருக்களில், அதிகளவில் நாய்கள் சுற்றித் திரிகின்றன.

கோரிக்கை

மேலும், சொறி நாய்களும், தெருவில் சுற்றி வருவதால், நோய் பரவும் அபாயம் உள்ளது. சாலை மற்றும் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களால், வாகன ஓட்டிகள் அடிக்கடி விழுந்து படுகாயம் அடைக்கின்றனர். மேலும், சில நாய்கள் நடந்து செல்லும் மக்களை விரட்டி கடிக்கிறது.

இதையடுத்து, பேரூராட்சியில் சுற்றித் திரியும் நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர்.

தொடர்ந்து பேரூராட்சி நிர்வாகம், சென்னை விலங்கு அமைப்பு (புளூ கிராஸ்) நிறுவனத்திற்கு நாய்கள் பிடிக்க வேண்டும் என, பரிந்துரை கடிதம் எழுதினர்.

உறுதி

இதையடுத்து, நேற்று காலை, பேரூராட்சி ஊழியர்கள் மற்றும் சென்னை விலங்கு அமைப்பு ஊழியர்கள் ஆகியோர் இணைந்து, ஊத்துக்கோட்டை பகுதியில் சுற்றித் திரிந்த, 22 ஆண், 28 பெண் என, 50 நாய்களை விரட்டி பிடித்தனர்.

பிடிபட்ட நாய்களை வேனில் ஏற்றிக் கொண்டு, சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் அங்கு நாய்களுக்கு கருத்தடை செய்து, மீண்டும் நாய்களை ஊத்துக்கோட்டை பேரூராட்சியில், வேன் மூலம் கொண்டு வந்து விடுவர்.

இதே போல், மீதமுள்ள நாய்களையும் பிடித்து அவற்றிற்கும் கருத்தடை செய்யப்படும் என, பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 


Page 68 of 519