Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

செயல்பாடு நாளை நிறுத்தம் கழிவுநீர் அகற்றுவதற்கு போன் செய்யலாம்

Print PDF
தினகரன்                  28.03.2013

செயல்பாடு நாளை நிறுத்தம் கழிவுநீர் அகற்றுவதற்கு போன் செய்யலாம்


சென்னை: குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் சந்திர மோகன் வெளியிட்டுள்ள அறிக்கை:

சென்னை குடிநீர் வாரியம் பகுதி 4ல் உள்ள எருக்கஞ்சேரி கழிவு நீரேற்று நிலைய திறனை அதிகரிக்கும் வகையில், புதிய நீர்மூழ்கி மின் மோட்டார் உந்து குழாய் உள் இணைப்பு பொருத் தும் பணி நடக்கிறது.

எனவே, இது தொடர்புடைய பகுதி - 4ல் உள்ள மேல்பட்டடை, வியாசர்பாடி, மகாகவி பாரதிநகர், தாமோதர் நகர் மற்றும் பகுதி - 5ல் உள்ள நேப்பியர் பூங்கா, வால்டாக்ஸ் ரோடு, சைடன் ஹாம்ஸ் ரோடு, பகுதி- 6ல் பெரம்பூர், ஏகாங்கிபுரம், செம்பியம், பெரியார் நகர், ஜவஹர் நகர், திம்மசாமி தர்கா, புரசைவாக்கம், பகுதி-8ல் அயனாவரம் ஆகிய கழிவு நீரேற்று நிலையங்களின் செயல்பாடு நாளை நிறுத்தி வைக்கப்படுகிறது.  

இந்த பணி நாளை இரவு 10 முதல் அடுத்த நாள் நண்பகல் 12 மணி வரை நடக்கிறது. அந்த சமயத்தில் ஆள் நுழைவாயில்களில் இருந்து வழிந்தோடும் கழிவுநீரை, கழிவுநீர் லாரிகள் மூலம் தற்காலிகமாக அகற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அவசர உதவிக்கு பகுதி பொறியாளர் 4- 81449 30904, பகுதி பொறியாளர் 5- 81449 30905, பகுதி பொறி யாளர்  6-    81449 30906, பகுதி பொறியாளர்  8-  81449 30908 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
 

பிளாஸ்டிக் ஒழிப்பு: தீவிரப்படுத்த திட்டம்

Print PDF
தினமணி     28.03.2013

பிளாஸ்டிக் ஒழிப்பு: தீவிரப்படுத்த திட்டம்


திருநெல்வேலி மாநகராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகள் நிகழாண்டில் தீவிரப்படுத்தப்படும் என்று 2013-14-ம் நிதியாண்டுக்கான மாநகராட்சி பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சிறப்புத் திட்டங்களில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இம் மாநகராட்சியில் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகள் 2011-ன்படி 40 மைக்ரான் அளவுக்கு கீழுள்ள பிளாஸ்டிக் பொருள்களை உபயோகிப்பது தவிர்க்கப்பட வேண்டும்.

அதன்படி மாநகரில் கடந்த ஆண்டு ஜூன் முதல் பிளாஸ்டிக் உபயோகிப்பது தடை செய்யப்பட்டது. அதை மீறுவோருக்கு அபராதம் விதிக்கவும் திட்டமிடப்பட்டது.

இந்த நிதியாண்டில் இது நடைமுறைப்படுத்தப்படும். விநியோகிப்பாளர்கள் நுகர்வோருக்கு பொருள்களை இலவச பிளாஸ்டிக் பைகள் மூலம் வழங்கக் கூடாது என்பதாலும், நுகர்வோர் விநியோகம் செய்து பெறப்படும் பொருள்களின் கொள்ளளவு மற்றும் அதன் தன்மைக்கு ஏற்ப பிளாஸ்டிக் அல்லாத தரம் வாய்ந்த பைகளை வழங்கவும் விநியோகிப்பாளர்கள் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். இந்த விதிகள் தீவிரப்படுத்தப்படும்.

பேருந்து நிலையங்களை மேம்படுத்துதல்: திருநெல்வேலி வேய்ந்தான்குளம் புதிய பேருந்து நிலையத்துக்கு வரும் பேருந்துகள் மற்றும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் புதிய பேருந்துகள் நிறுத்துமிடம், பயணிகள் கூடம், கூடுதலாக கழிப்பறை கட்டடம் கட்டுவதற்கு பட்ஜெட்டில் ரூ.75 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. சந்திப்பு பேருந்து நிலையத்தில் பழுதடைந்துள்ள மேற்கூரைகளை நீக்கி புதுப்பிக்கவும், மேலும் விரிவாக்கம் செய்யவும் ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இப் பேருந்து நிலையத்தில் ரூ.6.25 கோடியில் அடுக்குமாடி வாகன காப்பகம் மற்றும் பேருந்து நிறுத்துமிடம் கட்டுவதற்கு நிகழாண்டில் கலந்தாலோசகர் நியமிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.

பாளையங்கோட்டை பேருந்து நிலையப் பகுதிகளை விரிவாக்கம் செய்யவும், அதிலுள்ள இடங்களில் வணிக வளாகம் கட்டவும், பாளையங்கோட்டை மனகாவலம்பிள்ளை மருத்துவமனை வளாகத்தில் காலிமனையில் வணிக வளாகம் கட்டவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

குப்பையிலிருந்து மின்சாரம்: திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் நாளொன்றுக்கு சேகரமாகும் 150 மெட்ரிக் டன் குப்பைகள் ராமையன்பட்டி உரக்கிடங்கில் கொட்டப்படுகிறது. இங்கு ரூ.55 கோடியில் குப்பையிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம் செயல்படுத்தப்படும். தாமிரவருணி ஆற்றுப்படுகைகளிலும், மாநகராட்சி பூங்காக்களிலும், பொது இடங்களிலும், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி வளாகங்களிலும், மாநகராட்சிப் பள்ளிகளிலும் 65 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குடிநீர் இணைப்புகள்: மாநகராட்சியில் அனைத்து வார்டுகளிலும் உள்ள அனைத்து வீடுகளுக்கும் விதிமுறைகளுக்கு உள்பட்டு குடிநீர் இணைப்புகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பாளையங்கோட்டை, திருநெல்வேலி, மேலப்பாளையம் மண்டலங்களில் அமைந்துள்ள தினசரி சந்தைகள் மேம்படுத்தப்படும். ஸ்ரீபுரம் பகுதியில் பயணியர் தங்கும் விடுதி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ராமையன்பட்டி பகுதியில் நாய்கள் கருத்தடை அறுவைச் சிகிச்சை மையம் அமைக்கப்படவுள்ளது. குடும்பநல அறுவைச் சிகிச்சைக்காக மீனாட்சிபுரம் நகர்நல மையத்தை அறுவைச் சிகிச்சை மையமாக நவீன முறையில் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கழிவுகளில் இருந்து மின்சாரம்: பழைய பேட்டை மற்றும் மேலப்பாளையம் பகுதியில் சேகரிக்கப்பட்டுவரும் மட்கும் கழிவுகளைப் பயன்படுத்தி பயோ மீதேனேஷன் முறையில் ரூ.1 கோடியில் மின்சாரம் தயார் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.1 கோடியில் திடக்கழிவு மேலாண்மைக்கான உபகரணங்கள் வாங்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசின் அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலையை குறுக்குத்துறை சாலையுடன் இணைக்கும் திட்டம் அரசாணை பெறும் நிலையில் உள்ளது. வேய்ந்தான்குளம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள ராஜராஜேஸ்வரி நகர் அருகில் சாலையோர பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து பூங்காக்கள், மாநகராட்சிக்குச் சொந்தமான இடங்களை பாதுகாக்கும் வகையில் வேலி அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

பாளையங்கோட்டை சீவலப்பேரி சாலையில் மீன்வளத்துறையின் பங்களிப்புடன் நவீன வசதிகளுடன் மீன் சந்தை அமைக்கப்படும். மாநகராட்சிப் பகுதியில் தெருவிளக்குகளிலும் மின்சார சிக்கன பல்புகள் அமைக்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

மாநகராட்சியில் துப்புரவு பணியாளர்களை அதிகரிக்க வேண்டும்

Print PDF
தினகரன்     27.03.2013

மாநகராட்சியில் துப்புரவு பணியாளர்களை அதிகரிக்க வேண்டும்


திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியின் மக்கள்தொகைக்க்கேற்ப துப்பரவு பணியாளர்களின் எண்ணிக்கையைஉயர்த்தவேண்டும் என  திருப்பூர் மாவட்ட சுகாதார தொழிலாளர் சங்கம் (ஏஐடியுசி) சார்பில் மாநகராட்சி ஆணையாளரிடத்தில் மனு அளிக்கபட்டது.

அம்மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:  திருப்பூர் மாநகராட்சியில் மக்கள்தொகை 8.50 லட்சம் பேரும், மாநகராட்சிக்குள் வந்துசெல்கிற 1.50 லட்சம் பேரும் என ஒட்டுமொத்த 10 லட்சம் மக்கள்தொகை கொண்ட மாநகராட்சியில் அரசு உத்தரவுப்படி 1000 பேருக்கு 3 துப்புரவு தொழிலாளி வீதம் 3000 பேர் இருக்கவேண்டும்.

ஆனால் தற்போது சுய உதவிக்குழு மூலம் 1000 தொழிலாளர்களும், நிரந்தர தொழிலாளர்கள் 750 பேரும் ஆகமொத்தம் 1750 தொழிலாளர்கள் தான் உள்ளனர். எனவே கூடுதல் தொழிலாளர்களை நியமித்தால்தான் திருப்பூர் மாநகரை தூய்மையாக வைத்துகொள்ளமுடியும்.

அதேபோல் திருப்பூர் மாநகராட்சியில் சுய உதவிக்குழு மூலம் ஒப்பந்தமுறையில் துப்புரவு பணி மேற்கொண்டுவருவதால் தொழிலாளர்களுக்கு கிடைக்கவேண்டிய சம்பளம் மற்றும் சட்ட உரிமைகள் மறுக்கப்படுகிறது.

எனவே ஒப்பந்தமுறையை ரத்துசெய்யவேண்டும். தற்போதுள்ள 800 துப்புரவு பணியாளர்களில் 117 பேருக்குதான் மாநகராட்சி குடியிருப்பு இருக்கிறது. எனவே வீடில்லாத நிரந்தர துப்புரவு பணியாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டித் தர வேண்டும். திருப்பூர் மாநகராட்சியுடன் இணைக்கபட்ட பகுதிகளிலுள்ள துப்பரவு தொழிலாளர்களை நிரந்தரபடுத்த வேண்டும், மாநகராட்சி பணியாளர்களுக்கு வழங்கவேண்டிய சிட்டி அலவன்ஸ் தொகையை நிலுவையுடன் சேர்த்து வழங்கவேண்டும். மலேரியா பிரிவிற்கு கூடுதல் பணியாளர்களை நியமிக்கவேண்டும் துப்புரவு தொழிலாளர்கள் வேலை செய்ய கருவிகள், காலணிகள் வழங்கபடவேண்டும்.

சீருடைக்கான தையல்கூலி வழங்கபடவேண்டும் அதேபோல் துப்பரவு பணியாளர்களுக்கு வழங்கவேண்டிய பணப்பயன் மற்றும் சம்பள உயர்வை காலதாமதமில்லாமல் வழங்கவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கபட்டுள்ளது.
 


Page 73 of 519