Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

களியக்காவிளையில் பூட்டிக் கிடந்த கட்டணக் கழிவறைகள்

Print PDF
தினமணி         11.03.2013

களியக்காவிளையில் பூட்டிக் கிடந்த கட்டணக் கழிவறைகள்


களியக்காவிளை பேருந்து நிலையத்தில், தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ள பேரூராட்சி நிர்வாகத்துக்குச் சொந்தமான இரு கட்டணக் கழிவறைகள் சனி, ஞாயிற்றுக்கிழமை என இரு நாள்களாக பூட்டிக் கிடந்ததால் பயணிகள் அவதிக்குள்ளாயினர்.

களியக்காவிளை பேருந்து நிலையத்தில் புதிய கழிவறை மற்றும் வாம்பே கழிவறை என இரு கட்டணக் கழிவறைகள் உள்ளன. அருகருகே அமைந்துள்ள இக்கழிவறைகளுக்கான கட்டணம் வசூலிக்கும் உரிமம், தனியாருக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. இக்கட்டண கழிவறையில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் கூறப்பட்டு வந்த நிலையில், வார நாள்களில் அடிக்கடி செயல்படாமல் பூட்டிக் கிடப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இக்கழிவறைகள் சனி, ஞாயிற்றுக்கிழமை என தொடர்ந்து இருநாள்கள் செயல்படாமல் பூட்டிக் கிடந்தது.

இப்போது மண்டைக்காடு கோவில் திருவிழா மற்றும் சிவராத்திரியையொட்டி கேரளத்திலிருந்து  நூற்றுக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் களியக்காவிளைக்கு வந்து செல்லும் நிலையில், இந்த கட்டணக் கழிவறைகள் திறக்காமல் மூடிக்கிடப்பதால் பலரும் அவதிப்பட்டனர்.

எனவே பூட்டிக்கிடக்கும் இக்கட்டண கழிவறை குத்தகை உரிமத்தை பேரூராட்சி நிர்வாகம் ரத்து செய்வதுடன், பேரூராட்சி நிர்வாகம் மூலம் கட்டணம் வசூலிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பலதரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

சாத்தான்குளம் பேரூராட்சியில் குப்பை கொட்ட கூடுதல் இடம் கலெக்டர் உத்தரவு

Print PDF
தினகரன்         09.03.2013

சாத்தான்குளம் பேரூராட்சியில் குப்பை கொட்ட கூடுதல் இடம் கலெக்டர் உத்தரவு


சாத்தான்குளம்: தினகரன் செய்தி எதிரொலியாக சாத்தான்குளம் பேரூராட்சியில் குப்பைகளை கொட்ட கூடுதலாக இடமளிக்கும்படி கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

சாத்தான்குளம் பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கருமேனி ஆற்றின் கரையோரம் கொட்டப்படுகிறது. இதில் அழுகிய நாய், பன்றி, மற்றும் கோழி கழிவுகளை கொட்டுவதாலும், குப்பைகளை தீயிட்டு கொளுத்துவதாலும் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து குப்பைகளை கொட்ட வருவாய்த்துறைக்கு சொந்தமான கல்லாம்குத்து பகுதியில் ஒரு ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆயினும், அங்கு குப்பை கொட்டப்படாதது குறித்து தினகரனில் கடந்த 5ம் தேதி செய்தி வெளியிடப்பட்டது.

இதையடுத்து, கலெக்டர் ஆசிஷ்குமார் குப்பைகள் கொட்டும் இடம் மற்றும் குப்பைகள் கொட்ட தேர்வு செய்யப்பட்ட புதிய இடத்தை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். சாத்தான்குளம் தாசில்தார் குமார், நிலஅளவையர் செல்வராஜ், விஏஓ செந்தில்குமார் ஆகியோர் மூலம் கலெக்டர் புதிய இடத்தை அளந்து பார்த்தார்.

அப்போது பேரூராட்சி தலைவர் ஜோசப், இந்த இடத்தை தேர்வு செய்து தந்தால் உடனடியாக பேரூராட்சி சார்பில் பாதை மற்றும் மதில் அமைத்து குப்பைகளை கொட்ட தயாராக இருப்பதாக தெரிவித்தார். உடனே கலெக்டர், ‘குப்பைகளை கொட்ட இந்த இடம் போதாது. எனவே, இதே இடத்தில் கூடுதலாக ஒன்றரை ஏக்கர் அதிகரித்து இரண்டரை ஏக்கராக வழங்குங்கள்’ என வருவாய்த்துறையினருக்கு உத்தரவிட்டார். உடனடியாக குப்பைகளை கொட்ட நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்தார்.

பேரூராட்சி செயல் அலுவலர் முருகேசன், கவுன்சிலர்கள் சரவணன், இஸ்மாயில், பேரூராட்சி இன்ஜினியர் பிரபாகர், ஒன்றிய ஆணையாளர் ஜேம்ஸ் நிர்மல்ரோஸ், மண்டல துணை தாசில்தார் செந்தூர்ராஜன், வருவாய் ஆய்வாளர் (பொறுப்பு) அகிலா உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
 

ரூ.8 லட்சத்தில் பொதுக் கழிப்பறைகள் திறப்பு

Print PDF
தினமணி           08.03.2013

ரூ.8 லட்சத்தில் பொதுக் கழிப்பறைகள் திறப்பு


சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் பேரூராட்சியில் மக்கள் பயன்பாட்டிற்கென ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் பொதுக் கழிப்பறைகள் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டன. திருப்பத்தூர் தென்மாப்பட்டு, பேருந்து நிலையம், வாரச்சந்தை வளாகம் உள்ளிட்ட மூன்று இடங்களில் இப்பணி மேற்கொள்ளப்பட்டு புதன்கிழமை அன்று பேரூராட்சித் தலைவர் ஆர், சோமசுந்தரம் தலைமை வகிக்க மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்பட்டது.

மேலும், இந்நிகழ்ச்சியில் செயல் அலுவலர் சங்கர நாராயணன், துப்புரவு ஆய்வாளர் தங்கம், துணைத் தலைவர் சையது, பேரூராட்சி கவுன்சிலர்கள் உதயசண்முகம், பாண்டிமீனாள் சேகர், அங்காள பரமேஸ்வரி நாகராஜன், ஆனந்த் மற்றும் துப்புரவு மேற்பார்வையாளர் மோகன், பாலு ஆகியோர் கலந்து கொண்டனர்.
 


Page 85 of 519