Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

சாக்கடை கால்வாயில் தேங்கிய கழிவுகள் அகற்றம்

Print PDF
தினமணி              07.03.2013

சாக்கடை கால்வாயில் தேங்கிய கழிவுகள் அகற்றம்


விழுப்புரத்தில் திருச்சி சாலையில் உள்ள சாக்கடை கால்வாயில் கழிவுநீர் செல்ல வழியில்லாத வகையில் தேங்கிக்கிடந்த கழிவுகள் சனிக்கிழமை அகற்றப்பட்டன.

விழுப்புரம் நகர்மன்றப்பகுதியில் உள்ள 45 வார்டுகளில் பெரும்பாலான பகுதிகளில் முறையான சாக்கடை வசதிகள் இல்லை. ஏற்கனவே சாக்கடை அமைக்கப்பட்ட பகுதிகளில் கழிவுநீர் செல்ல வழியில்லாமல், பராமரிக்கப்படாமல் சாக்கடை மண்மூடி தூர்ந்துவிட்டது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் வீடுகளின் அருகிலேயே கழிவுநீர் சுகாதாரக்கேடாக தேங்கிக்கிடக்கிறது.

குறிப்பாக திருச்சி, சென்னை சாலைகளில், இருபுறங்களிலும் சாக்கடை ஆக்கிரமிக்கப்பட்டு, வியாபாரிகள் கடைகளை விரிவாக்கம் செய்துள்ளதால், செல்ல வழியின்றி கழிவுநீர் முழுவதும், ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பும், சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் முன்பும் தேங்கிக்கிடக்கிறது.

இந்நிலையில், விழுப்புரம் நகர்மன்ற மைதானம் அருகே உள்ள போலீஸ் லைனில் உள்ள சாக்கடை கால்வாயிலும், திருச்சி சாலையில் புது பஸ்ஸாண்ட் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் சாக்கடைகளிலும் கழிவுநீர் செல்லமுடியாத வகையில் தேங்கிக்கிடந்த கழிவுகள் பொக்லைன் மூலம் சனிக்கிழமை அகற்றப்பட்டன. இப் பணிகளை ஆணையர் ராஜேந்திரன் பார்வையிட்டார்.
 

இலவசமாக கொசு வலை வழங்கும் திட்டம் ஆர்வம் காட்டும் நிறுவனங்களுக்கு அழைப்பு

Print PDF

தினமலர்         06,03.2013

இலவசமாக கொசு வலை வழங்கும் திட்டம் ஆர்வம் காட்டும் நிறுவனங்களுக்கு அழைப்பு

சென்னை:விலையில்லா கொசு வலை வினியோகம் செய்ய, ஆர்வம் காட்டும் நிறுவனங்கள், கொசுவலை மாதிரிகளுடன், 13ம் தேதி நேரில் வர வேண்டும் என,மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.சென்னையில், கொசு ஒழிப்புக்காக, ஆண்டுக்கு, 5 கோடி ரூபாய் வரை செலவிட்டும் போதிய பலன் கிடைக்கவில்லை. இந்நிலையில், கால்வாய் ஓரம் மற்றும் சாலையோரங்களில் வசிப்போருக்கு, இலவசமாக கொசு வலைகள் வழங்கப்படும் என, கடந்த மாநகராட்சி கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.இத்திட்டத்தின் கீழ், பயனாளிகளின் பட்டியல் வார்டுகள் தோறும் சேகரிக்கப்படுகிறது. மேலும், கொசு வலை வினியோகம் செய்ய, ஆர்வம் காட்டும் நிறுவனங்களுக்கு மாநகராட்சி அழைப்பு விடுத்து உள்ளது.கொசு வலைகள் பாலி எத்திலினால், ஒற்றை இழையால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.ஒரு சதுர அங்குலத்திற்கு, 156 துளைகளுக்கு குறையாமல் இருக்க வேண்டும்.அதிக அளவில் கொசு வலைகள் தயாரிப்போர், ஆண்டுக்கு, 10 கோடி ரூபாய்க்கு மேல் கொசு வலை விற்பனை செய்வோர் பங்கேற்கலாம், என, நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன."ஆர்வமுள்ள நிறுவனங்கள், வரும் 13ம் தேதி, ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள, மாநகர சுகாதார அலுவலரை நேரில் சந்தித்து, விருப்ப கடிதம் மற்றும் நடுத்தர, பெரிய அளவில் உள்ள கொசு வலைமாதிரிகளையும் அளிக்கலாம்' என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.நிறுவனங்கள் தரும் கொசு வலைகளின் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு, எந்த மாதிரியான வலை வாங்குவது என, முடிவு செய்து, அதன்பின், ஒப்பந்தம் கோரப்படும் என, தெரிகிறது.

 

மாநகராட்சி அதிரடி நடவடிக்கை சுகாதாரமற்ற முறையில் தயாரான 160 கிலோ உணவு பொருள் பறிமுதல்

Print PDF
தினகரன்                    05.03.2013

மாநகராட்சி அதிரடி நடவடிக்கை சுகாதாரமற்ற முறையில் தயாரான 160 கிலோ உணவு பொருள் பறிமுதல்


சென்னை: சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட 160 கிலோ உணவு பொருட்களை மாநகராட்சி அதிகாரிகள் கைப்பற்றி அழித்தனர்.

பிராட்வே பஸ் நிலையம், சென்னை அரசு பொது மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் பிளாட்பார கடைகளில் சுகாதாரமற்ற முறையில் தயாரித்து உணவு பொருட்களை விற்பதாக மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.

இதைத்தொடர்ந்து, ராயபுரம் மண்டல சுகாதார அலுவலர் தலைமையில், சுகாதாரத்துறை சப்-இன்ஸ்பெக்டர்கள் 2 பேர் உள்பட 6 பேர் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, பிராட்வே பஸ்நிலையம், சென்னை அரசு பொது மருத்துவமனை அருகில், பல்லவன் இல்லம், பிரைசர் பாலச்சாலை உள்ளிட்ட இடங்களில் சுகாதாரமற்ற நிலையில் தயாரித்து விற்கப்பட்ட குளிர்பானங்கள், இட்லி, லெமன் சாதம் உள்ளிட்ட 160 கிலோ அடங்கிய பொருட்களை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட குளிர்பானங்கள் அந்த இடத்திலேயே தரையில் ஊற்றி அழித்தனர். இட்லி, லெமன் சாதம் உள்ளிட்ட உணவு பொருட்கள் வேன்களில் ஏற்றி மாநகராட்சி குப்பை கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டு அழிக்கப்பட்டன.

சுகாதாரமற்ற முறையில் உணவு பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 


Page 87 of 519