Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

சுகாதாரப்பணிகள் துறைக்கு புதிய இணை இயக்குநர்

Print PDF
தினகரன்         05.03.2013

சுகாதாரப்பணிகள் துறைக்கு புதிய இணை இயக்குநர்


சேலம், : சேலம் மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குநராக டாக்டர் புஷ்பலீலாவதி நியமிக்கப்பட்டு உள்ளார்.

சேலம் மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குநராக பணியாற்றி வந்த டாக்டர் சந்திரா, கடந்த 31.12.12ம் தேதியுடன் பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து ஓமலூர் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் வாசுகி, இணை இயக்குநர் பொறுப்பில் நியமிக்கப்பட்டார்.  இந்நிலையில், விராலிமலை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வந்த புஷ்பலீலாவதி என்பவர், பதவி உயர்வில் சேலம் மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குநராக நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் கடந்த 1ம் தேதி சேலத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய இணை இயக்குநருக்கு, மாவட்ட சுகாதாரப்பணிகள் துறை அதிகாரிகள், ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர். டாக்டர் புஷ்பலீலாவதியும், வரும் ஜூன் மாதத்துடன் ஓய்வு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

நகரில் சுற்றித் திரிந்த கழுதைகள் பிடிப்பு

Print PDF
தினமணி         05.03.2013

நகரில் சுற்றித் திரிந்த கழுதைகள் பிடிப்பு

செங்கம் நகரில் பொதுமக்களுக்கு இடையூறாகச் சுற்றித் திரிந்த கழுதைகளை பேரூராட்சிப் பணியாளர்கள் பிடித்துக்கொண்டு போய் காட்டில் விட்டனர்.

செங்கம் நகரில் பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் கழுதைகளை பிடிக்க வேண்டும் என செங்கம் பேரூராட்சி நிர்வாகத்துக்கு பலத் தரப்பினரும் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து, பேரூராட்சி செயல் அலுவலர் மோகன்ராஜ் உத்தரவுபடி பேரூராட்சி பணியாளர்கள், துக்காப்பேட்டை, புதிய பஸ்நிலையம், பழைய பஸ்நிலையம், பெருமாள்கோவில் தெரு, ராஜவீதி, காய்கனி மண்டி அருகில் சுற்றித் திரிந்த கழுதைகளை பிடித்தனர். பின்னர் அவற்றை பேரூராட்சி லாரியில் ஏற்றிச் சென்று காட்டுப் பகுதியில் விட்டனர்.

நாய், குரங்குகளை பிடிக்க கோரிக்கை: செங்கம் நகரில் நாய் மற்றும் குரங்குகள் தொல்லை அதிகரித்து வருகிறது. அவற்றையும் பிடிக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகர மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
 

சாலையோர இறைச்சிக் கடைகளால் சுகாதாரக் கேடு

Print PDF
தினமணி       04.03.2013

சாலையோர இறைச்சிக் கடைகளால் சுகாதாரக் கேடு


தேனி அல்லிநகரம் நகராட்சி, பழனிசெட்டிபட்டி ஆகிய பகுதிகளில்  நெடுஞ்சாலையோரங்களிலும், சாக்கடை மீது மேடை அமைத்தும் செயல்பட்டு வரும்  இறைச்சிக் கடைகளை தடை செய்ய நகராட்சி நிர்வாகம்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

நகராட்சிக்கு எல்லைக்கு உள்பட்ட பெரியகுளம், மதுரை, கம்பம் நெடுஞ்சாலை  ஓரங்களிலும், நகராட்சியை எல்லையை அடுத்துள்ள பழனிசெட்டிபட்டியில் கம்பம் நெடுஞ்சாலையோரத்திலும், சாக்கடைகளுக்கு மேல் மூடி அமைத்தும் 300-க்கும் மேற்பட்ட ஆட்டு இறைச்சி, கோழி இறைச்சி மற்றும் மீன் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

ஆக்கிரமிப்பு இடத்தில் திறந்த வெளியில் செயல்பட்டு வரும் கடைகளின் முன்பு, சுகாதாரமற்ற முறையில் ஆடு, கோழி மற்றும் மீன்களை அறுத்து விற்கின்றனர்.  காலையில் இறைச்சி விற்பனை நடைபெறும் கடைகள், இரவில் சிற்றுண்டி கடைகளாகவும், கோழி மற்றும் மீன் வறுவல் கடைகளாகவும் மாறி விடுகின்றன.

இந்த இறைச்சிக் கடைகளில் இருந்து கழிவுகள் சாலையிலும், சாக்கடையிலும் கொட்டப்பட்டு வருகின்றன.  இதனால் அடைப்பு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது.

மேலும் இறைச்சிக் கழிவுகளை உண்பதற்காக ஏராளமான தெருநாய்கள் சுற்றித் திரிகின்றன.

நகராட்சி எல்லைக்கு உள்பட்ட பகுதியில், சுகாதார அலுவலரின் சான்று பெற்று,  நகராட்சி ஆடு அறுக்கும் தொட்டியில் வைத்து ஆடுகளை அறுத்து விற்பனை செய்ய வேண்டும் என்பது விதிமுறை.

இதற்கென நகராட்சி நிர்வாகம் சார்பில் இறைச்சிக் கடைக்காரர்களிடம் கட்டணம்  வசூலிக்கப்படுகிறது.

ஆனால், இந்த விதிமுறையை பின்பற்றாமல், நகராட்சி குத்தகைதாரர்கள் இறைச்சிக் கடைகளுக்கு நேரடியாகச் சென்று கட்டணம் மட்டும் வசூலிப்பதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

சுகாதாரத்துக்குக் கேடு விளைவிக்கும் சாலையோர இறைச்சிக் கடைகளை தடை செய்ய நகராட்சி நிர்வாகம், காவல்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆர்வம் காட்டுவதில்லை என்றும் கூறப்படுகிறது.

நகராட்சி வாரச் சந்தை வளாகத்தில், இறைச்சிக் கடைகளுக்கு தனியாக இடம்  ஒதுக்கீடு செய்தும் பயன்படுத்தப்படாமல் உள்ளது.

சாலையோர இறைச்சி விற்பனைக்  கடைகளை தடை செய்து, வாரச் சந்தை வளாகத்தில் உள்ள இடத்தை இறைச்சிக் கடை பயன்பாட்டுக்கு கொண்டு வரவும், சுகாதாரமான முறையில் இறைச்சி விற்பனை செய்யப்படுவதை கண்காணிக்கவும் நகராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் எதிர்பார்ப்பு.
Last Updated on Monday, 04 March 2013 11:42
 


Page 88 of 519