Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

குப்பை இல்லா பகுதியாக மாற்ற நடவடிக்கை

Print PDF
தின மணி             20.02.2013

குப்பை இல்லா பகுதியாக மாற்ற நடவடிக்கை

தஞ்சாவூர் அருகே புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலை குப்பை இல்லா பகுதியாக மாற்றும் விதமாக செவ்வாய்க்கிழமை பேரணி நடைபெற்றது.

சுற்றுலாத் துறை சார்பில் நடைபெற்ற இந்தப் பேரணியை தஞ்சாவூர் கோட்டாட்சியர் என். காளிதாஸ் தொடக்கி வைத்தார். இந்தப் பேரணி கோவிலைச் சுற்றியுள்ள வீதிகளுக்குச் சென்றது. இதில், மாரியம்மன் கோவில் மகளிர், ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

மேலும், இந்தக் கோவிலுக்கு 10 அலங்கார குப்பைத் தொட்டிகள் வழங்கப்பட்டன. பசுமைப் புரட்சிக்காக 10 மரக்கன்றுகள் நடப்பட்டன. கோவிலில் 200 பணியாளர்கள் தூய்மைப் பணி மேற்கொண்டனர். இதுகுறித்து மாவட்ட சுற்றுலா அலுவலர் ஆர். ராமமூர்த்தி தெரிவித்தது:

பெரியகோவில், புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் போன்ற சுற்றுலா தலங்களை குப்பை இல்லாத பகுதியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அலங்கார குப்பைத் தொட்டிகள் பெரியகோவிலுக்கு 5-ம், மாரியம்மன் கோவிலுக்கு 10-ம் வழங்கப்பட்டுள்ளன. மேலும், பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டைத் தவிர்ப்பதற்காக பொதுமக்கள், சுற்றுலா பயணிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றார் அவர். மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் பா. ராம்மனோகர், நகராட்சி ஆணையர் என். ரவிச்சந்திரன், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ஞானசேகரன், ஊராட்சித் தலைவர் ஆர். தனசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Last Updated on Thursday, 21 February 2013 12:14
 

குளித்தலை பெரியார் நகர் பகுதியில் குப்பைகள் அகற்றம்

Print PDF
தின மணி               21.02.2013

குளித்தலை பெரியார் நகர் பகுதியில் குப்பைகள் அகற்றம்

பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, குளித்தலை நகராட்சி பெரியார் நகர் அருகே கொட்டப்பட்டு வந்த குப்பைகளை அகற்றும் பணி புதன்கிழமை தொடங்கியது.

குளித்தலை நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும், நகராட்சி எல்லைக்குட்பட்ட பெரியார் நகர் பகுதி அருகில் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அருகே பல ஆண்டுகளாகக் கொட்டப்பட்டு வந்தன.

நாளடைவில் இந்த இடம் குப்பைகளால் நிரப்பப்பட்டு மலைபோல காட்சியளித்தது. அதிக அளவில் கொட்டப்பட்ட குப்பைகள் அடிக்கடி தீப்பிடித்து, அப்பகுதியே புகை மண்டலமாக மாறிவந்ததால், இந்தப் பகுதியில் குடியிருப்போர், சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர். மேலும், நீர்த்தேக்கத் தொட்டியின் அருகே குப்பைகளைக் கொட்டுவதால், குடிநீர் மாசுபடும் சூழ்நிலை ஏற்பட்டது. இதன்காரனமாக, இந்தக் குப்பைகளை அகற்றக் கோரி நீண்ட காலமாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில், நகராட்சி நிர்வாகம் குப்பைகளை இந்த இடத்திலிருந்து அகற்றும் பணியை புதன்கிழமை தொடங்கியது. மண் கலந்த இந்தக் குப்பைகள் அனைத்தையும் அகற்றவும், மண் மற்றும் குப்பைகளை தனித்தனியே பிரித்தெடுத்து குப்பைகளை நகராட்சி வசம் ஒப்படைக்கவும் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, தற்போது இந்தப் பணி தொடங்கப்பட்டுள்ளது.

பிரித்து வழங்கப்படும் குப்பைகள் அனைத்தும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் மூலம் உரமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக நகராட்சி ஆணையர் எம். கலைமணி கூறினார்.

Last Updated on Thursday, 21 February 2013 12:11
 

நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழா

Print PDF
தின மணி               21.02.2013

நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழா

அரியலூர் நகராட்சி அலுவலகத்தில் பொது சுகாதாரத் துறை மூலம்  புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

சுகாதார நிலையத்தை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து மாவட்ட ஆட்சியர்  ப. செந்தில்குமார் பேசியது:

அரியலூர் நகராட்சிக்குள்பட்ட 18 வார்டுகளைச் சேர்ந்த 38,687 நபர்கள் பயன்படும் வகையில், நவீன படுக்கை வசதிகளுடன் கூடிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும், இதன்மூலம் 8 தொடக்கப் பள்ளி, 3 உயர்நிலைப் பள்ளி, 3 மேல்நிலைப் பள்ளி, 1 நடுநிலைப் பள்ளி மற்றும் 7 விடுதிகளிகள் தங்கி கல்வி பயிலும் மாணவ, மாணிவகளும் பயன்படுத்திக் கொள்ளலாம். 2 மருத்துவ அலுவலர்கள், தலா 1 மருந்தாளுநர், செவிலியர், ஆய்வக நுட்ப வல்லுநர், துப்புரவு பணியாளர் மற்றும் ஓட்டுநர் ஆகியோர் பணிபுரிவார்கள்.

இந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மருந்து,  மாத்திரைகள் கொள்முதல் செய்ய நிகழாண்டிற்கு ரூ. 1.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இங்கு புறநோயாளிகள், உள்நோயாளிகள், பேறுகால பராமரிப்பு, இலவச பிரசவ சேவை, குழந்தைகளுக்கு தடுப்பூசி, குடும்ப நல ஆலோசனை, பால்வினை நோய் சிகிச்சை மற்றும் ஆலோசனை இலவசமாக வழங்கப்படும்.

மேலும், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டம், ஜனனி சுரக்க்ஷô யோஜனா  பிரசவ நிதியுதவித் திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளது.

எனவே, தனியார் மருத்துவமனைக்கு நிகரான நவீன வசதிகளுடன் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையங்களை, பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார் அவர்.

இந்நிகழ்ச்சியில், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ரவீந்திரன், நகராட்சி ஆணையர் சரஸ்வதி, புள்ளியியல் உதவி இயக்குநர் ராஜேந்திரன், மருத்துவ அலுவலர்கள் கஸ்தூரிபாய், செரோஸ்பானு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Last Updated on Thursday, 21 February 2013 12:10
 


Page 92 of 519