Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

துப்புரவுப் பணியாளர்களுக்கு உடல் பரிசோதனை

Print PDF

தினமணி         28.08.2012

துப்புரவுப் பணியாளர்களுக்கு உடல் பரிசோதனை

கோவை, ஆக. 27: கோவை மாநகராட்சியின் தூய்மையைக் காக்கும் துப்புரவுப் பணியாளர்களுக்கு முதன்முதலாக, முழு உடல் பரிசோதனை முகாம் சனிக்கிழமை துவங்கியது.மாநகராட்சியில் பணிபுரியும் 3 ஆயிரம் துப்புரவுப் பணியாளர்களுக்கு, சீதாலட்சுமி நகர் நல மையத்தில் நடைபெற்ற முகாமை மேயர் செ.ம.வேலுசாமி துவக்கி வைத்தார்.

 3 கட்டங்களாக நடைபெறும் முகாமில், முதல்கட்டமாக 10 மாநகராட்சி மருத்துவ அலுவலர்கள் எடை, நாடித் துடிப்பு, ரத்த அழுத்தம் மற்றும் உறுப்புகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்வர். பின்னர், மாநகராட்சி ஆய்வகத்தில் ரத்தம், சிறுநீர், ஈ.சி.ஜி. உள்ளிட்ட அடிப்படை ஆய்வுகள் செய்யப்படும்.

இதற்காக ரூ.5 லட்சம் செலவில் மருந்துகளும், மருத்துவ உபகரணங்களும் வாங்கப்பட்டுள்ளன. 3-வது கட்டமாக சிறப்பு மருத்துவப் பரிசோதனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளின் பங்களிப்புடன் நடைபெறும் இப் பரிசோதனையில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், எக்கோ மற்றும் பல், தோல் நோய், இருதய சிகிச்சைகளுக்கு சிறப்புப் பரிசோதனைகளும், ஆலோசனைகளும் வழங்கப்படும். 25, 72 மற்றும் 82-வது வார்டு துப்புரவுப் பணியாளர்கள் சனிக்கிழமை பரிசோதிக்கப்பட்டனர்.

ஆணையாளர் தி.க.பொன்னுசாமி, சட்டப்பேரவை உறுப்பினர் சேலஞ்சர் துரை, துணை மேயர் லீலாவதி உண்ணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

சாரதி மாளிகையில் மேயர் ஆய்வு

Print PDF

தினமணி            24.08.2012

சாரதி மாளிகையில் மேயர் ஆய்வு

வேலூர், ஆக. 23: வேலூர் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள சாரதி மாளிகையில் மேயர் பி.கார்த்தியாயினி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

வேலூர் சாரதி மாளிகையில் 3 தளங்களில் 300-க்கும் மேற்பட்ட கடைகள் மாநகராட்சி மூலம் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இந்த வளாகத்தில் தண்ணீர் பிரச்னை, சுகாதாரச் சீர்கேடு உள்ளிட்ட பல்வேறு புகார்கள் மாநகராட்சி நிர்வாகத்துக்கு தொடர்ந்து வந்தன. இதையடுத்து மேயர் கார்த்தியாயினி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். அவருடன் நகரமைப்பு அதிகாரி கண்ணன், நகர்நல அலுவலர் பிரியம்வதா, மாநகராட்சி உறுப்பினர்கள் கோதண்டபாணி, அன்பு, துரையரசன் ஆகியோர் உடன் சென்றனர்.

ஆய்வுக்குப் பிறகு மேயர் கார்த்தியாயினி செய்தியாளர்களிடம் கூறியது:

சாரதி மாளிகையில் சேதமடைந்த சிமென்ட் சிலாப்புகள் உடனே செப்பனிடப்படும். தண்ணீர் பிரச்னையை தீர்க்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். சாரதி மாளிகை எதிரேயுள்ள கால்வாய் தூர்வாரப்படும். மேலும் சமூக விரோத செயல்களை தடுக்கும் வகையில் இரவில் காவலர் நியமிக்கப்பட்டு சாரதி மாளிகையிலுள்ள அனைத்து நுழைவாயில்களும் பூட்டப்படும் என்றார் அவர்.

 

பண்ருட்டியில் ரூ.28 லட்சத்தில் கழிவுநீர் கால்வாய் பணி

Print PDF

தினமணி            24.08.2012

பண்ருட்டியில் ரூ.28 லட்சத்தில் கழிவுநீர் கால்வாய் பணி

பண்ருட்டி, ஆக. 23: பண்ருட்டி நான்கு முனை சந்திப்பில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற திருச்சி சாலை மற்றும் சென்னை சாலையில் ரூ.28 லட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

÷பண்ருட்டி நகரின் மையப்பகுதியாகவும், சென்னை-கும்பகோணம் மற்றும் கடலூர்-சித்தூர் சாலை சந்திக்கும் இடமாகவும் நான்கு முனை சந்திப்பு உள்ளது. மக்கள் நடமாட்டமும், வாகன போக்குவரத்தும் அதிகரித்து காணப்படும்.

÷மழை நீர் வழிந்தோட நான்கு முனை சந்திப்பு பகுதியில் முறையான கழிவுநீர் கால்வாய் இல்லை. இதனால் மழை காலத்தில் மழை நீர் செல்ல வழியின்றி கடலூர்-சித்தூர் சாலையில் பஸ் நிலையம் முதல் ரங்கா பில்டிங் வரையிலும், சென்னை-கும்பகோணம் சாலையில் மார்கெட் முதல் கிளை சிறை வரையிலும் முழங்காலுக்கு மேல் மழை மற்றும் கழிவுநீர் தேங்கி நிற்கும்.

÷தேங்கி நிற்கும் இந்நீரால் பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர். மழை நீர் தேங்கி நிற்காத வகையில் கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என பொது நல அமைப்புகள் பண்ருட்டி நகர்மன்றத் தலைவர் பி.பன்னீர்செல்வத்திடம் கோரிக்கை வைத்தனர்.

÷இக்கோரிக்கைகளை ஏற்று ரூ.28 லட்சம் மதிப்பில் சென்னை சாலையில் 1.5 மீட்டர் அகலத்தில், 150 மீட்டர் நீளத்துக்கு கழிவுநீர் கால்வாய் பணி நடைபெற்று வருகிறது. இதேபோல் திருச்சி சாலையில் (சித்தூர் சாலை) 90 மீட்டர் நீளத்துக்கு கால்வாய் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது.

÷சென்னை சாலையில் அமைக்கப்படும் கழிவு கால்வாயால் இனி நான்கு முனை சந்திப்பு பகுதியில் மழைநீர் தேங்கி நிற்க வாய்ப்பில்லை என  நகராட்சிப் பொறியாளர் ஆர்.ராதா கூறினார். பணி மேற்பார்வையாளர் சாம்பசிவம் உடனிருந்தார்.

Last Updated on Friday, 24 August 2012 10:33
 


Page 98 of 519