Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

குப்பை பெருக்கத்தை தடுக்க வழிமுறைகள்

Print PDF
தினமலர்          20.12.2011

குப்பை பெருக்கத்தை தடுக்க வழிமுறைகள்


மறுசுழற்சி முறையில் குப்பையை மேலாண்மை செய்யும் வகையில் தயாரிக்கப்பட்ட திட்டத்தை செயல் படுத்த மாநகராட்சி முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை, பெருங்குடி பகுதியில் 40 ஆண்டுக்கு முன், குப்பை கிடங்கு உருவாக்கப்பட்டது. மாநகராட்சி தென் சென்னை பகுதியில் சேகரிப்படும் 1,400 டன் குப்பை தினமும் இங்கு கொட்டப்பட்டது. கடந்த 2005ம் ஆண்டு அறிவியல் முறையில் சோதனை செய்யப்பட்ட போது, 70 லட்சம் டன் குப்பை அங்கு தேங்கியிருந்தது. கடந்த ஆறு ஆண்டுகளில் அது ஒரு லட்சம் டன் குப்பையாக அதிகரித்துள்ளது. தென் சென்னை வளர்ச்சியால் கடந்த 20 ஆண்டுகளில் குப்பை கிடங்கை சுற்றி ஏராளமான குடியிருப்புகள் உருவாகிவிட்டன. தினமும் டன் கணக்கில் குப்பை கொட்டப்படுவதால் அப்பகுதியில் கொசு, ஈ, வண்டு ஆகியவை உற்பத்தியாகிவிட்டன. குப்பை கிடங்கை சுற்றி ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, பெருங்குடியில் குப்பை கொட்டக் கூடாது என பொதுமக்களும், சுற்றுச் சூழல் ஆர்வலர்களும் பல ஆண்டுகளாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தான், கடந்த ஆண்டு ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. பெருங்குடி கிடங்கில் மொத்தம் 125 ஏக்கரில் குப்பை கொட்டப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தின் மூலம் 30 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே குப்பை கொட்ட முடிவு செய்யப்பட்டது. மீதமுள்ள 95 ஏக்கர் பரப்பளவை பசுமை நிறைந்த பூங்காவாக மாற்றும் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மை திட்டம் 65 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தவும், குப்பை கிடங்கை சுற்றி ஒன்றரை கோடி ரூபாய் செலவில் 4.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு மதில் சுவர் எழுப்பவும் முடிவு செய்யப்பட்டது. ஆனால், அத்திட்டம் அப்போதே கைவிடப்பட்டது.

இப்போது புறநகரில் பல பகுதிகள் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால், பெருங்குடி குப்பை கிடங்கில் கொட்டப்படும் குப்பை 20 சதவீதம் அதிகரித்துள்ளது. அதற்காக கிடங்கு பல ஏக்கர் பரப்பளவில் ஓசைப்படாமல் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இதனால், அப்பகுதியில் பாதிப்பும் அதிகரித்து வருகிறது.

பெருங்குடி குப்பை கிடங்கில் ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை புத்துயிருடன் செயல்படுத்த புதிய மாநகராட்சி பகீரத முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
 

தனியார் குப்பை அள்ளும் பணி ஜனவரி 3வது வாரத்தில் தொடங்கும்

Print PDF

தினமணி         15.12.2011

தனியார் குப்பை அள்ளும் பணி ஜனவரி 3வது வாரத்தில் தொடங்கும்

சென்னை, டிச.14: சென்னை மாநகராட்சியில் 3 மண்டலங்களில் குப்பை அள்ளும் பணியை 2012-ம் ஆண்டு ஜனவரி 3-ம் வாரத்தில் புதிய தனியார் நிறுவனம் தொடங்கும் என்று ஆணையர் டேவிதார் புதன்கிழமை தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறியது:

டிசம்பர் 2-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை94 ஆயிரத்து 732 சதுரமீட்டர் பரப்பளவில் 1999 சாலைகள் கட்டட இடிபாடுகள் மூலம் சமன்படுத்தப்பட்டுள்ளது.

அந்த இடங்களில் தார்க் கலவை மூலம் செப்பனிடும் பணி டிசம்பர் 18-ம் தேதி முதல் தொடங்கும்.

குப்பை அள்ளும் பணியில் நீல்மெட்டல் நிறுவனத்தின் ஒப்பந்தம் டிசம்பர் மாதத்துடன் முடிவடைகிறது.

சென்னை மாநகராட்சியின் 9 வது மண்டலமான தேனாம்பேட்டை, 10 வது மண்டலமான கோடம்பாக்கம், 13 வது மண்டலமான அடையாறு ஆகிய 3 மண்டலங்களில் குப்பை அள்ளும் பணியை ராம்கி என்விரோ என்ஜினியர்ஸ் என்ற தனியார் நிறுவனத்திடம் விடப்பட்டுள்ளது.

அந்த நிறுவனம் 2012 ஜனவரி மாதம் 3-ம் வாரத்தில் குப்பைகளை அள்ளும் பணியை தொடங்கும். அதுவரை அந்த இடங்களில் மாநகராட்சி மூலம் குப்பைகள் அகற்றப்படும்.

சென்னை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்டுள்ள பகுதிகளில் சேதமடைந்த சாலைகளை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

டிசம்பர் மாதத்தில் ஒப்பந்தங்கள் கோரப்பட்டு 2012-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இறுதி செய்யப்பட்டு பிப்ரவரி மாதத்தில் சாலைப் பணிகள் தொடங்கும்.

பஸ் போக்குவரத்து உள்ள சாலைகள், பிரதான சாலைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றார்.
 

15 மண்டலங்களுக்கும் தானியங்கி துப்புரவு இயந்திரம்

Print PDF

தினமணி         15.12.2011

15 மண்டலங்களுக்கும் தானியங்கி துப்புரவு இயந்திரம்

சென்னை, டிச. 14: சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களுக்கும் தானியங்கி துப்புரவு இயந்திரங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

சென்னை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்படுவதற்கு முன் 10 மண்டலங்களாக இருந்தது.

அப்போது சாலைகளில் தேங்கும் குப்பைகளை அள்ளுவதற்காக 5 தானியங்கி துப்புரவு இயந்திரங்கள் வாங்கப்பட்டன. இந்த இயந்திரங்களில் பொருத்தப்பட்டுள்ள வட்டவடிவமான துடைப்பம் போன்ற அமைப்பு சாலைகளை சுத்தப்படுத்தும். குப்பைகள் இயந்திரத்தில் சேமிக்கப்படும். அதன்பிறகு மொத்தமாக அந்தக் குப்பைகள் அப்புறப்படுத்தப்படும்.

இந்த இயந்திரம் மூலம் சுத்தப்படுத்தும் பணி விரைவாக நடப்பதுடன் குறைவான பணியாளர்களே தேவைப்படும் என்று கூறப்படுகிறது. ஒரு வாகனம் செல்வது போலவே இதன் செயல்பாடு இருக்குமாதலால் வாகனப் போக்குவரத்து அதிகம் உள்ள சாலைகளில் இந்த இயந்திரம் மூலம் சுத்தப்படுத்துவது எளிது.

சென்னை மாநகராட்சி விரிவாக்கப்பட்ட பிறகு 15 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

இதில் 200 வார்டுகள் உள்ளன. மொத்த பரப்பளவு 429 சதுர கி.மீ. ஆகும். புதிதாக இணைக்கப்பட்ட பெரும்பாலான இடங்களில் இருக்கும் துப்புரவு பணியாளர்கள் போதுமான அளவு இல்லை. இதனால் 15 மண்டலங்களிலும் தானியங்கி துப்புரவு இயந்திரத்தை பயன்படுத்த மாநகராட்சி முடிவு செய்யதுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கெனவே 5 தானியங்கி இயந்திரங்கள் இருக்கும் நிலையில் தற்போது கூடுதலாக 10 தானியங்கி துப்புரவு இயந்திரங்கள் வாங்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
Last Updated on Thursday, 15 December 2011 09:41
 


Page 112 of 519