Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

கழிவுநீர் நச்சுத்தன்மை தொட்டிகளை சுத்தம் செய்ய துப்புரவு பணியாளர்களை பயன்படுத்த தடை

Print PDF

தினமலர்         10.03.2011

கழிவுநீர் நச்சுத்தன்மை தொட்டிகளை சுத்தம் செய்ய துப்புரவு பணியாளர்களை பயன்படுத்த தடை

தென்காசி : தென்காசி நகராட்சி பகுதிகளில் கழிவுநீர் நச்சுத்தன்மை தொட்டிகளை சுத்தம் செய்ய துப்புரவு பணியாளர்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தென்காசி நகராட்சி ஆணையாளர் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: தென்காசி மனித உயிர்களுக்கு தேசம் ஏற்படும் வகையில் பல்வேறு விபத்துக்கள் உண்டாவதை தவிர்ப்பதை கருத்தில் கொண்டு தென்காசி நகராட்சி பகுதியில் அமைந்துள்ள தனியார் உணவு விடுதிகள், மருத்துவமனை, தங்குமிடம், திரையரங்கம், கல்வி நிறுவனங்கள், பணிமனைகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் உள்ள கழிவுநீர் தொட்டி மற்றும் கழிவுநீர் நச்சுத்தொட்டியை சுத்தம் செய்ய துப்புரவு பணியாளர்களை பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத பணிகளுக்கு நகராட்சி அனுமதி பெற்று உயிர் பாதுகாப்பு கவசம் அணிந்தும், தகுந்த தொழில்நுட்ப மேற்பார்வையாளர்களின் முன்னிலையில் மட்டுமே துப்புரவு பணியாளர்களை பயன்படுத்த வேண்டும். மேலும் தனியார் கழிவு நீர் அகற்றும் ஊர்திகளின் உரிமையாளர்கள் அனைவரும் கழிவுநீர் நச்சுத்தொட்டியை சுத்தம் செய்யும் போது நகராட்சி அனுமதி பெற்று போதுமான பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும். அரசு மற்றும் கோர்ட் உத்தரவை கடைபிடிக்காமல் செயல்பட்டு உயிரிழப்போ அல்லது பொருள் சேதமோ ஏற்படுமானால் அதற்கான முழுப்பொறுப்பினையும் கட்டட உரிமையாளர் மற்றும் கழிவுநீர் வாகன உரிமையாளரே சேரும். மேலும் அவர்கள் மீது சட்டரீதியான குற்றவியல் வழக்குகள் தொடரப்படும். இவர்கள் சரியாக பணியாற்றுகிறார்களா என்பதை கண்காணிக்க தென்காசி நகராட்சி மூலம் நகராட்சி துப்புரவு அலுவலர் டெல்விஸ் ராய் தலைமையில் துப்புரவு ஆய்வாளர்கள் முகம்மது அப்துல்ஹக்கீம், அப்துல் ஜப்பார், சேகர், மகாராஜன் அடங்கிய குழுவினர் கண்காணிக்கப்படுவர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ரூ.500க்கு "மாஸ்டர் ஹெல்த் செக்கப்':மாநகராட்சி, "பலே' திட்டம்

Print PDF

தினமலர்        04.03.2011

ரூ.500க்கு "மாஸ்டர் ஹெல்த் செக்கப்':மாநகராட்சி, "பலே' திட்டம்

சென்னை: சென்னை மாநகராட்சி பகுப்பாய்வு கூடங்களில், 500 ரூபாய் கட்டணத்தில் முழு உடல் பரிசோதனை செய்யும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. நடுத்தர மக்கள் பயன் பெறும் வகையில், 500 ரூபாய் சலுகை கட்டணத்தில் முழு உடல் பரிசோதனை செய்யும் திட்டம் மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் என்று மேயர் சுப்ரமணியன் பட்ஜெட்டில் அறிவித்தார். அதன்படி, சைதாப்பேட்டை, திருவான்மியூர், வள்ளூவர் கோடட்ம், பெரம்பூர், மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம் ஆகிய ஐந்து இடங்களில் உள்ள பகுப்பாய்வு கூடங்களில் முழு உடல் பரிசோதனை செய்யும் திட்டம் துவங்கப்பட்டது. சைதாப்பேட்டை பகுப்பாய்வு கூடத்தில் நடந்த நிகழ்ச்சியில், திட்டத்தை துவக்கி வைத்து மேயர் சுப்ரமணியன் பேசியதாவது: முழு உடல் பரிசோதனை திட்டத்தில், பல வகையான ரத்த பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், இ.சி.ஜி., எக்ஸ் ரே, கல்லீரல் பரிசோதனை, மஞ்சள் காமாலை பரிசோதனை உள்ளிட்ட 19 வகையான பரிசோதனைகள் செய்யப்படும். இந்த பரிசோதனைகளை தனியார் மருத்துவமனையில் செய்தால் 4,000 ரூபாய் வரை செலவாகும். ஆனால், மாநகராட்சியின் பகுப்பாய்வு கூடங்களில் 500 ரூபாயில், அனைத்து பரிசோதனைகளும் செய்யப்படும். இவ்வாறு மேயர் பேசினார். நிகழ்ச்சியில், தமிழ் பெயர் சூட்டிய 1000 குழந்தைகளுக்கு, ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் வகையில் சைதாப்பேட்டையில், 50 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை மேயர் வழங்கினார். சாலை ஓரங்களில் துப்புரவு பணி செய்யும் இரண்டு மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனங்களையும் மண்டல அலுவலகங்களுக்கு மேயர் வழங்கினார்.
 

கோவை நகர் பகுதி வீடுகளுக்கு குப்பை கொட்ட புதிய திட்டம்

Print PDF

தினகரன்      24.01.2011

கோவை நகர் பகுதி வீடுகளுக்கு குப்பை கொட்ட புதிய திட்டம்


கோவை, ஜன.24:

ஒவ்வொரு வார்டு அலுவலகத்திலும் குப்பை தொட்டி வைத்து அதில் குப்பை கொட்ட வைக்கும் புதிய திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது.

கோவை மாநகராட்சியில் 72 வார்டு, 2661 வீதி, 4.60 லட்சம் வீடுகள் இருக்கிறது. தினமும் சுமார் 600 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. குப்பை கொட்டுவது, அகற்றுவது, மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரிப்பது, உரம் தயாரிப்பது, குப்பைகளை மறு சுழற்றியில் பயன்படுத்துவது போன்றவற்றில் நடைமுறை சிக்கல் இருக்கிறது. பெரும்பாலான வீடுகளில் இருந்து ஒயர், மருந்து, மாத்திரை, பழுதடைந்த வீட்டு உபயோக பொருட்கள் போன்றவை குப்பையில் கொட்டப்படுவதாக தெரியவந்துள்ளது. இவற்றை இதர சாதாரண குப்பையில் கொட்ட கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கேற்ப பிரத்யேகமான குப்பை தொட்டிகளை வார்டு அலுவலகங்களில் வைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியில் உள்ள 72 வார்டு அலுவலகங்களில் தலா ஒரு பிரத்யேக குப்பை தொட்டி வைக்கப்படும். இதில் கண்ணாடி, பீங்கான், அலுமினியம், இரும்பு தவிர, இதர வீட்டு கழிவுகளை கொட்ட அனுமதி வழங்கப்படும். மருந்து, மாத்திரை, ஒயர், பேப்பர், பென்சின், பேனா, கட்டை, ரெக்சின் போன்ற பொருட்களை இதில் கொட்டலாம். இந்த புதிய நடைமுறை ஒரு வாரத்தில் செயல்பாட்டிற்கு வரும். சாதாரண வீட்டு குப்பைகளை அருகேயுள்ள குப்பை தொட்டியில் போடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் மக்கும், மக்காத குப்பைகளை வாங்க வீடு தேடி வாங்க வரும் திட்டமும் விரைவில் நடைமுறைக்கு கொண்டு வரப்படும். வார்டு வாரியாக காலை, மாலை நேரத்தில் குப்பை வாங்க வரும் நேரம் அறிவிக்கப்படும். துப்புரவு தொழிலாளர்கள், வீட்டிற்கு அருகே வந்து குரல் கொடுப்பார்கள் அல்லது மணி ஒலிக்கப்படும். அப்போது குடியிருப்பு மக்கள் குப்பை கூடையில் உள்ள குப்பைகளை தரலாம். ஏற்கனவே மாநகராட்சி நிர்வாகம் சார்பில் வீடுகளுக்கு இலவசமாக மக்கும், மக்காத குப்பை கொட்ட கூடை வழங்கியுள்ளது. கண்ணாடி, பீங்கான், அதிக மைக்ரான் கொண்ட பிளாஸ்டிக் போன்றவை தனியாக பெறப்படும். இவை மறு சுழற்சி முறையிலும் பயன்படுத்தப்படும். புதிய திட்டம் பயன்பாட்டிற்கு வந்தால், ரோடு, பொது இடம், சாக்கடைகளில் குப்பைகள் குவிந்து கிடப்பது வெகுவாக குறையும்.

 


Page 113 of 519