Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

வந்தவாசியில் சிக்குன் குனியா தடுக்க கழிவுநீர் கால்வாய்களை தூர்வார உடனடி ஏற்பாடு

Print PDF

தினகரன்               23.11.2010

வந்தவாசியில் சிக்குன் குனியா தடுக்க கழிவுநீர் கால்வாய்களை தூர்வார உடனடி ஏற்பாடு

வந்தவாசி.நவ.23: வந்தவாசி நகராட்சி மன்றக்கூட்டம், அதன் தலைவர் க. சீனுவாசன் தலைமையில் நேற்று நடந்தது. ஆணையாளர் உசேன்பாரூக் மன்னர், துணைத் தலைவர் வாசுகி முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:

மோகன் (திமுக):

நகரம் முழுவதும் பல்வேறு இடங்களில் மின்விளக்குகள் எரியாமல் உள்ளன.

தலைவர்:

தொடர்ந்து தெரு மின்விளக்குகள் பராமரிப்பு குறித்து புகார்கள் வருகிறது. போன் செய்தாலும் அவர்கள் எடுப்பது இல்லை என்கின்றனர். கவுன்சிலர்கள் விரும்பினால் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட தெருவிளக்கு பராமரிக்கும் பணியை ரத்து செய்து விடலாம்.

ரவிச்சந்திரன்:

அலுவலகத்தில் துப்புரவு ஊழியர், அலுவலக உதவியாளர், தட்டச்சு எழுத்தர் உள்ளிட்ட 26 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் அனைத்து பணி களிலும் தாமதம் ஏற்படுகின்றது.

ஆணையாளர்:

காலி பணியிடம் நிரப்புவது குறித்து, மாநில நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.

பாத்திமாகனி, நூர்ஜகான், பழனியம்மாள்:

நகரில் பல தெருக்களில் கால்வாயில் அடைப்பு காரணமாக மழைநீர் வெளியேறாமல் வீட்டுகளுக்குள் கழிவு நீர் புகுந்துள்ளது.

கால்வாயை தூர்வார பணியாளர்கள் வராததால் கேசவா நகர், காமராஜர் நகர் பகுதியில் சிக்குன் குனியா நோய் பரவியுள்ளது. இதனால் நகராட்சி பொறியாளர் மகாதேவன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தலைவர்:

நகரம் முழுவதும் கழிவுநீர் கால்வாய்கள் உடனடியாக தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 

ஊட்டியில் குப்பைகளை கொட்ட இடம் தேர்வு செய்யும் பணி தீவிரம்:கலெக்டர்

Print PDF

தினகரன்             23.11.2010

ஊட்டியில் குப்பைகளை கொட்ட இடம் தேர்வு செய்யும் பணி தீவிரம்:கலெக்டர்

ஊட்டி, நவ.23: ஊட்டியில் குப்பைகளை கொட்ட இடம் தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருவதாக பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கில் கலெக்டர் தெரிவித்தார். ஊட்டி நகராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழப்புணர்வு கருத்தரங்கு நேற்று மாலை நடந்தது. நகராட்சி தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். துணை தலைவர் ரவிக்குமார், டி.ஆர்.ஓ குப்புசாமி, மாவட்ட பிளாஸ்டிக் ஒழிப்பு அலுவலரும், மாவட்ட வழங்கல் அலுவலருமான சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பல்வேறு நிறுவனங்களை சேர்ந்தவர்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள், கடை உரிமையாளர்கள், வியாபார சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

பிளாஸ்டிக் ஒழிப்பு என்ற பெயரில் மார்க்கெட் வியாபாரிகளிடம் சோதனை மேற்கொண்டு அதிகாரிகள் ஒரு தலைபட்சமாக செயல்படுகின்றனர். மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பிளாஸ்டிக் ஒழிப்பு ரெய்டு நடத்திட வேண்டும். மாவட்ட சீதோஷ்ண நிலை, பிற மாவட்டங்களை காட்டிலும் வேறுபட்டுள்ளது. இதனால் அனைத்து பொருட்களும் விரைவில் நமுத்து விடுகிறது. எனவே பிளாஸ்டிக் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. பொருட்களை பாதுகாப்பாக, கெட்டு விடாமல் இருக்க மாற்று பொருளை அரசு தருவிக்க வேண்டும் என்று வியாபாரிகள் கருத்து தெரிவித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் பங்கேற்று பேசியதாவது:

பிற மாவட்டங்களை காட்டிலும் இம்மாவட்டத்தின் சீதோஷ்ண நிலை, இயற்கை, பருவ நிலை வேறுபட்டுள்ளது. சர்வதேச சுற்றுலா நகரமாக விளங்குவதால் இங்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

இவர்கள் அதிகளவில் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிக்க வியாபாரிகள், பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். அனைத்து பிளாஸ்டிக்கையும் தடை செய்ய முடியாது.

சில பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தவிர்க்க முடியாத நிலை உள்ளது. பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை இம்மாவட்டத்தில் கட்டுப்படுத்த சோதனை சாவடிகளில் பறிமுதல் செய்து தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மாவட்டத்திலுள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் பிளாஸ்டிக்கை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பிளாஸ்டிக் பயன்படுத்தும் வியாபாரிகள், பொதுமக்களுக்கு அபராதம் விதிக்கப்படும். இதனை கடுமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

டாஸ்மாக் கடைகளில் பிளாஸ்டிக் கப்கள் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடைகளின் அருகில் அதிகளவு பேப்பர் கப் குப்பைகள் உள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது. இதனை தடுக்கவும் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வரும் காலங்களில் பேப்பர் கப் குப்பைகள் அதிகளவு கிடக்கும் கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஊட்டியில் குப்பைகளை கொட்ட இடம் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. மாவட்ட காலநிலையை கருத்தில் கொண்டு பிளாஸ்டிக்கிற்கு பதிலாக மாற்று பொருள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 

சுகாதாரமற்ற முறையில் விற்பனை 150 கிலோ ஆட்டிறைச்சி பறிமுதல்

Print PDF

தினகரன்                22.11.2010

சுகாதாரமற்ற முறையில் விற்பனை 150 கிலோ ஆட்டிறைச்சி பறிமுதல்

ஈரோடு, நவ. 22:ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பெரும்பாலான ஆட்டிறைச்சி மற்றும் மாட்டிறைச்சி கடைகளில் சுகாதாரம் அற்ற முறையில் மீன்களையும் விற்பனை செய்வதாக புகார்கள் கூறப்பட்டு வந் தது.

இதையடுத்து ஈரோடு மாநகர் நல அலுவலர் டாக்டர் ரமேஷ்குமார் தலைமையில் மாநகர் நல அதிகாரிகள் இன்று ஈரோடு பெரியார் நகர், மரப்பாலம், நேதாஜி வீதி, மார்க்கெட், வளையக்காரவீதி, அக்ரஹார வீதி போன்ற பகுதிகளில் உள்ள ஆட்டிறைச்சி கடைகளில் விற்பனைக்காக தொங்க விட்டிருந்த இறைச்சிகளை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியதில் முறையாக கால்நடை மருத்துவரிடம் எவ்வித பரிசோதனையும் செய்யாமலும், மாநகர் நல அதிகாரிகளிடம் ஒப்புதல் பெறாமலும் விற்பனை செய்யப்பட்ட 150 கிலோ எடையுள்ள ஆட்டிறைச்சிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஈரோடு ஸ்டோனி பிரிட்ஜ் மீன் மார்க்கட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இப்பகுதிகளில் நீண்ட நாட்களாகி, கெட்டுப்போன நிலையில் மக்களால் சாப்பிட லாயக்கற்ற 30 கிலோ மீன் வகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த ஆட்டிறைச்சி மற்றும் மீன்களை அதிகாரிகள் பினாயில் ஊற்றி அழித்தனர்.

மாநகராட்சி நகர் நல அலுவலரின் அனுமதியின்றியும், கால்நடை வதை கூடத்தில் அதிகாரிகளின் முன்னிலையில் அறுக்கப்பட்ட இறைச்சியை முறையாக சான்று பெற்ற பிறகே விற்பனை செய்ய வேண்டும். தவறினால் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகர் நல அலுவலர் ரமேஷ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 


Page 130 of 519