Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

தீவிர கொசு ஒழிப்பு பணி உபயோகமற்ற பொருட்கள் வீடு வீடாக அதிரடி அகற்றம்

Print PDF

தினகரன்                  15.11.2010

தீவிர கொசு ஒழிப்பு பணி உபயோகமற்ற பொருட்கள் வீடு வீடாக அதிரடி அகற்றம்

சென்னை, நவ.15: மேயர் மா.சுப்பிரமணியன் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் வீடு வீடாக சென்று கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்த உபயோகமற்ற பொருட்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத்துறை சார்பில் தீவிர கொசு ஒழிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, தி.நகர் 127 வார்டிலுள்ள காமராஜர் காலனி, கார்ப்பரேஷன் காலனி ஆகிய இடங்களில் மேயர் மா.சுப்பிரமணியன் தலைமையில் தீவிர கொசு ஒழிப்பு பேரணி நேற்று நடந்தது. இதில், மாநகராட்சி ஊழியர்கள் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட அட்டைகளை கையில் ஏந்தியபடி வீடு, வீடாக சென்று கொசு உற்பத்திக்கு காரணமாக இருக்கும் உபயோகமில்லாத டயர், தேங்காய் ஓடு, ஆட்டுகல், உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து, மேயர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: கொசுக்களால் பரவும் மலேரியா, டெங்கு நோய்களை கட்டுப்படுத்த தீவிர கொசு ஒழிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 30 குழுக்கள் அமைக்கப்பட்டு வீடுகளில் உள்ள மேல்நிலை தொட்டி, கீழ்நிலை தொட்டிகளில் கொசுப் புழு கொல்லி மருந்து தெளித்து வருகின்றனர். வீடுகளில் தேங்காய் ஓடு உள்ளிட்ட உபயோகமற்றப் பொருட்கள் தேக்கி வைப்பதால் கொசு உற்பத்தியாகின்றன.

கடந்த 15 நாட்களில் உபயோகமற்ற 32 டன் பொருட்கள் வீடுகளில் இருந்து அகற்றப்பட்டன. கொசுவை ஒழிக்க புகை பரப்பும் பணியும் தீவிரமாக நடக்கிறது. கொசு ஒழிப்பு பணியில் 1,050 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்று மட்டும் 900 வீடுகளில் ஆய்வு செய்து 5 டன் உபயோகமற்ற பொருட்கள் அகற்றப்பட்டன. விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வீடுகளில் ஒட்டப்பட்டு வருகிறது. இவ்வாறு மேயர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் சுகாதார அதிகாரி குகானந்தம், கவுன்சிலர் ஜெ.கருணாநிதி ஆகியோர் பங்கேற்றனர்.

தி.நகர் கார்ப்பரேஷன் காலனியில் உபயோகமற்ற சைக்கிள் டயர்களை, மேயர் மா.சுப்பிரமணியன் தலைமையிலான மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்துகின்றனர்.

 

மோகனூர் டவுன் பஞ்., பகுதியில் கொசு மருந்து அடிக்கும் பணி துவக்கம்

Print PDF

தினமலர்             11.11.2010

மோகனூர் டவுன் பஞ்., பகுதியில் கொசு மருந்து அடிக்கும் பணி துவக்கம்

மோகனூர்: டெங்கு மற்றும் மலேரியா காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுக்களை அழிக்கும் வகையில், மோகனூர் டவுன் பஞ்சாயத்து பகுதியில் கொசு மருந்து அடிக்கப்பட்டது. மோகனூர் டவுன் பஞ்சாயத்தில் 15 வார்டுகளை சேர்ந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். தற்போது தொடர்மழை பெய்து வருவதால், பள்ளங்களில் மழை நீர் தேங்கி உள்ளது. தேங்கி உள்ள மழைநீரில் தொற்று நோயை ஏற்படுத்தும் கொசுக்குள் உற்பத்தியாகும் அபாயம் உள்ளது. அதனால், டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்கள் பரவவும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அதை தொடர்ந்து தடுப்பு நடவடிக்கை எடுக்கும் வகையிலும், முன்னெச்சரிக்கையாகவும் கொசு மருந்து அடிக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி டவுன் பஞ்சாயத்து உட்பட்ட 15 வார்டுகளிலும், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் டாக்டர் கருணாநிதி தலைமையில், கொசு மருந்து அடிக்கும் நிகழ்ச்சி துவங்கியது. டவுன் பஞ்சாயத்து ஊழியர்கள் தண்ணீர் தேங்கி உள்ள இடங்களில் சென்ற கொசு மருந்து அடித்து கொசுக்களின் உற்பத்தியை தடுத்தனர். மேலும், "தண்ணீரை நன்கு காய்ச்சி ஆரவைத்தும் குடிக்க வேண்டும். தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.

 

நல்ல திட்டம்; விழிப்புணர்வு இல்லையே

Print PDF

தினமலர்                11.11.2010

நல்ல திட்டம்; விழிப்புணர்வு இல்லையே

கோவை மாநகரை தூய்மையான நகராக மாற்ற, மாநகராட்சி நிர்வாகம் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்காக, பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. மட்கும் குப்பை, மட்காத குப்பையை வீடு தோறும் சேகரிக்க, இரு விதமான பிளாஸ்டிக் குப்பைக் கூடைகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. மாநகராட்சி பகுதிகளில் மாட்டு வண்டிகளில் சென்று குப்பை அள்ளும் முறை ஒழிக்கப்பட்டு, புதிதாக வாகனங்கள் வாங்கப்பட்டு சுகாதார பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, மாநகரச் சாலைகளில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் "மொபைல் டாய்லெட்கள்' வைக்கப்பட்டுள்ளன. கோவையில் கடந்த ஜூனில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின்போது வாங்கப்பட்ட இந்த மொபைல் டாய்லெட்கள், தற்போது நகரின் பல் வேறு இடங்களில் மக்களின் பயன் பாட்டுக்காக வைக்கப்பட்டுள்ளன. சாலையோரங்களில் சிறுநீர், மலம் கழிப்பதால் பொதுசுகாதாரம் சீர்கெடுவதை தடுக்க இந்த டாய்லெட்கள் பெரிதும் உதவுகின்றன. எனினும், இவற்றை பராமரிப்பதிலும், பொதுமக்கள் பயன்படுத்துவதிலும் பல்வேறு குறைபாடுகள் நிலவுகின்றன.

 மொபைல் டாய்லெட்கள் சிலவற்றில் போதிய தண்ணீர் சப்ளை இல்லை; சிலவற்றின் கதவுகள் மாயமாகியுள்ளன. சில இடங்களில் டாய்லெட் கழிவுகள் அப்படியே வெளியேறி ரோட்டில் ஓடுகிறது. இதனால், மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை முறையாக பராமரிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். அதேவேளையில், மொபைல் டாய்லெட்களை பயன்படுத்துவோர், பயன்படுத்திய பின் தண்ணீரை திறந்துவிடுவதும், சுகாதாரம் பராமரிக்க மாநகராட்சிக்கு ஒத்துழைப்பதும் அவசியம். ஆனால், போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால், பலரும் இந்த டாய்லெட்களை பயன்படுத்துவதில்லை. அதன்அருகிலேயே சாலையோரத்தில் சிறுநீர் கழித்து பொதுசுகாதாரத்தை சீர்கெடுக்கின்றனர். ஒருசில ஆசாமிகளோ, நள்ளிரவில் இந்த டாய்லெட்களில் இருக்கும் கதவுகளை கழற்றி திருடிச் சென்றுவிடுவதாகவும் கூறப்படுகிறது. பொதுசுகாதாரத்தை மேம்படுத்த மாநகராட்சி நிர்வாகம் எவ்வளவுதான் நல்ல திட்டங்களை அமல்படுத்தினாலும், மக்களின் முழு ஒத்துழைப்பு இல்லாவிடில் அவை பயனின்றி போய்விடும். எனவே, டாய்லெட்களை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுப்பதோடு, பொதுசுகாதாரத்தை காப்பது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கோவை மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்வது அவசியம்.

 


Page 135 of 519