Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

பிளாஸ்டிக் கப்பில் சூடாக சாப்பிட்டால் புற்றுநோய் தாக்கும் அபாயம் மாநகராட்சி எச்சரிக்கை நோட்டீஸ்

Print PDF

தினகரன்                10.11.2010

பிளாஸ்டிக் கப்பில் சூடாக சாப்பிட்டால் புற்றுநோய் தாக்கும் அபாயம் மாநகராட்சி எச்சரிக்கை நோட்டீஸ்

சேலம், நவ.10: பிளாஸ்டிக் கப்பில் சூடாக சாப்பிட்டால் புற்று நோய் ஏற்படும் என்பதால் பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தை தவிர்க்க வேண்டும் என சேலம் மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு நோட்டீஸ்களை மக்களிடம் வழங்கி வருகிறது.

சேலத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகிப்பதை மக்கள் தவிர்க்க வேண்டும் என விழிப்புணர்வு பேரணி கடந்த 1ம் தேதி சேலத்தில் நடத்தப்பட்டது. இதையடுத்து, மாநகராட்சி சார்பில் நமது நலம், நமது கைகளில்...’ என விழிப்புணர்வு நோட்டீஸ்கள் வழங்கப்படுகிறது. அதில், வீடு மற்றும் வணிக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். கடைகளில் பொருட்கள் வாங்க செல்லும் போது துணி பைகளையே பயன்படுத்த வேண்டும் என அந்த விழிப்புணர்வு நோட்டீசில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பிளாஸ்டிக் பொருட்களில் சூடான பானங்களை குடிக்கும்போது அதில் வேதியியல் மாற்றங்கள் ஏற்படும். அதனால் புற்று நோய் போன்ற கொடிய நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப்படுத்திய பிறகு அவற்றை வெளியே போடுவதால் சுற்றுப்புறமும் மாசுபடுகிறது. தொற்று நோயும் பரவுகிறது. எனவே, சூடான பானங்களை பருக காகித கப்புகள், பீங்கான் ஆகியவற்றை பயன்படுத்துவோம். பயனற்ற பிளாஸ்டிக் பொருட்களை மறு சுழற்சி செய்வோம். இவ்வாறு அந்த நோட்டீசில் மாநகராட்சி மேயர் ரேகாபிரியதர்ஷினி, ஆணையர் பழனிசாமி, துணை மேயர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர்.

 

காரைக்கால் குடியிருப்புப் பகுதியில் கழிவுநீரோடு தேங்கிக் கிடக்கும் குப்பைகள்

Print PDF

தினமணி                            09.11.2010

காரைக்கால் குடியிருப்புப் பகுதியில் கழிவுநீரோடு தேங்கிக் கிடக்கும் குப்பைகள்

காரைக்கால், நவ. 8: காரைக்கால் நகரக் குடியிருப்புப் பகுதியில் கழிவுநீரோடு கலந்து குப்பைகள் தேங்குவதாகவும், நகராட்சி நிர்வாகம் இவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

காரைக்கால் நகரில் குப்பைகளை நகராட்சி நிர்வாகம் தனியார் மூலம் அகற்றி வருகிறது. உரிய முறையில் இந்தப் பணிகளை நகராட்சி நிர்வாகம் கண்காணிப்பதில்லை எனப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், பல்வேறு இடங்களில் சாலையோரங்களில் கொட்டப்படும் குப்பைகள் அவ்வப்போது அகற்றப்படாததால், பல நாள்களாக அவை தேங்கிக்கிடக்கின்றன.

காரைக்கால் தலைமை அஞ்சல் நிலையம் அருகே கழிவுநீர் செல்லும் பாதை அருகிலேயே குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. இதனால், கழிவுநீர் எளிதில் வடிய முடியாமல் சாலையில் தேங்குவதாக அந்தப் பகுதியினர் தெரிவித்தனர்.

மழைக் காலம் என்பதால் நகரில் குப்பைகள், கழிவுநீர் தேங்காத வகையில் உரிய முறையில் கண்காணித்து, அவற்றை உடனுக்குடன் அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தினர்.

 

தீபாவளி பண்டிகையால் கூடுதலாக 300 டன் குப்பை துப்புரவுப் பணியாளர்கள் அகற்றினர்

Print PDF

தினகரன்               09.11.2010

தீபாவளி பண்டிகையால் கூடுதலாக 300 டன் குப்பை துப்புரவுப் பணியாளர்கள் அகற்றினர்

திருப்பூர், நவ.8: திருப்பூர் மாநகரில் தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 3 நாட்களில் பட்டாசு கழிவுகள் உட்பட 300 டன் அளவுக்கு குப்பைகள் அதிகளவில் சேகரிக்கப்பட்டுள்ளது.

பல லட்சம் மக்கள் வசித்து வரும் திருப்பூர் மாநகரில், நாளொன்றுக்கு 400 டன் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதாக மாநகராட்சி புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 52 வார்டுகளிலும் சுமார் 800 துப்புரவு ஊழியர்களை கொண்டு குப்பைகள் சேகரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி, லட்சக்கணக்கான பொதுமக்கள் வெளியூர் சென்று விட்டநிலையில், கடந்த 3 நாட்களில் குப்பைகளின் அளவு கணிசமாக உயர்ந்துள்ளதாக கூறுகின்றனர் மாநகராட்சி அதிகாரிகள்.

"திருப்பூர் மாநகரில் தினமும் 400 டன்னுக்கு குறையாமல் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த 3 நாட்களில் இதன் அளவு கிட்டத்தட்ட 25 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது கடந்த 3 நாட்களில் நாளொன்றுக்கு சுமார் 500 டன் குப்பைகள் அள்ளப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை பட்டாசு குப்பை," என மாநகராட்சி சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.3 நாளில் 300 டன் அதிகம் : தீபாவளி கடந்த 5ம் தேதி கொண்டாடப்பட்ட நிலையில், அன்றும், தீபாவளிக்கு முந்தைய நாளும், அடுத்தநாளும் என 3 நாட்களில் தலா 100 டன் அடிப்படையில் கிட்டத்தட்ட 300 டன் குப்பை அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். கடந்தாண்டை விட தீபாவளி பட்டாசு கழிவுகளின் அளவு இந்தாண்டு அதிகம் எனவும் மாநகராட்சி சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

இதற்கிடையே மழை எச்சரிக்கை காரணமாக மாநகரில் கொட்டப்பட்ட குப்பை கழிவுகளை உடனுக்குடன் அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதன்படி மாநகர் முழுவதும் குப்பைகள் அள்ளும் பணி கடந்த இரு தினங்களாக தீவிரமாக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தீபாவளி விடுமுறை காரணமாக சில பகுதிகளில் குப்பைகள் அள்ளப்படாமல், குவிந்து கிடந்தது.

 


Page 137 of 519