Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

தீபாவளிக்கு குவிந்த 1000 டன் குப்பை தேக்கம் 4 நாளாக அகற்றப்படாததால் ஆறு, ஓடைகளில் கொட்டியதால் துர்நாற்றம்

Print PDF

தினகரன்                08.11.2010

தீபாவளிக்கு குவிந்த 1000 டன் குப்பை தேக்கம் 4 நாளாக அகற்றப்படாததால் ஆறு, ஓடைகளில் கொட்டியதால் துர்நாற்றம்

மதுரை, நவ. 8: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 4 நாளாக குப்பை அள்ளப்படாததால் மதுரை நகரில் ஆயிரம் டன் குப்பை தேக்கமடைந்துள்ளது. இறைச்சிக்காக 10 ஆயிரம் ஆடுகள், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் அறுக்கப்பட்டுள்ளன. இந்த கழிவுகள் வைகை ஆறு, கால்வாய்கள், ஓடைகளில் கொட்டப்பட்டுள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது.

மதுரை மாநகராட்சி எல்லைக்குள் தினமும் 400 முதல் 450 டன் குப்பை அள்ளப்பட்டு, அவனியாபுரம் குப்பை கிடங்கில் சேர்க்கப்படுகின்றன.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெடிக்கப்பட்ட பட்டாசு குப்பைகள், அட்டை டப்பாக்கள், இனிப்பு பலகார கடை கழிவுகள் குவியல் குவியலாக தெருக்களில் கிடக்கின்றன. வீடுகளில் இருந்து கொட்டப்பட்ட குப்பைகள் மாநகராட்சி குப்பை தொட்டிகளில் நிரம்பி வெளியே சிதறி கிடக்கின்றன.

தீபாவளி விடுமுறையில் 10 ஆயிரம் ஆடுகள், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் மற்றும் மாடு, பன்றிகள் அறுக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது தவிர மீன்களும் விற்பனை ஆகி உள்ளன.

இவற்றின் கழிவுகள் வைகை ஆறு, கிருதுமால்நதி, அனுப்பானடி, சிந்தாமணி உள்ளிட்ட 11 கால்வாய்கள், ஓடைகள், மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தின் பின்பகுதி, பூ மார்க்கெட் எதிரே உள்ள ஓடை உள்ளிட்ட இடங்களில் கொட்டப்பட்டுள்ளன. புதூர் கற்பகநகர் அருகிலுள்ள மாநகராட்சி மயானத்திலும் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. இதனால் இந்த பகுதிகளில் துர்நாற்றம் வீசுகிறது.

தீபாவளியை முன்னிட்டு நேற்று வரை விடுமுறை என்பதால், மதுரை நகரில் மாநகராட்சி மூலம் குப்பைகள் அள்ளப்படவில்லை. இதனால் ஆயிரம் டன்னுக்கு மேல் குப்பை பல பகுதிகளில் குவிந்து கிடக்கிறது.

மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், "மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளர்கள் 2 ஆயிரத்து 700 பேர் உள்ளனர்.

திங்கள்கிழமை (இன்று) முதல் 3 ஷிப்ட் முறையில் துரிதமாக குப்பைகள் அகற்றும் பணி நடைபெறும்" என்றார்.

இறைச்சி விலை எகிறியது தீபாவளியை முன்னிட்டு இறைச்சி விலை எகிறியது. கிலோ ரூ260 முதல் 280 ஆக இருந்த ஆட்டுக்கறி ரூ300 முதல் 320 ஆகவும், ரூ90&க்கு விற்ற பிராய்லர் கோழி ரூ160 வரையிலும் ஏறியது. ரூ160&க்கு விற்ற நாட்டுக் கோழி ரூ220 முதல் 250 ஆக பறந்தது. வான்கோழிக்கறி ரூ400&க்கு விற்றது. இது தவிர மாடு, பன்றி, காடைகளும் விற்பனை ஆயின. இந்த அளவுக்கு அதிக விலை கொடுத்தும் ஆட்டு இறைச்சியில் கலப்படம் அதிகம் இருந்தது.

 

மாநகராட்சி எடுத்த நடவடிக்கையால் பட்டாசு குப்பை குறைந்தது

Print PDF

தினகரன்                08.11.2010

மாநகராட்சி எடுத்த நடவடிக்கையால் பட்டாசு குப்பை குறைந்தது

புதுடெல்லி, நவ.8: மாநகராட்சி எடுத்த நடவடிக்கையால் இம்முறையில் டெல்லியில் பட்டாசு குப்பை 10 சதவீதத்துக்கு மேல் குறைந்தது என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மாநகராட்சியின் செய்தி தொடர்பாளர் தீப் மாத்தூர் கூறியதாவது:

சாதாரணமாக தீபாவளி பண்டிகையின் போது டெல்லியில் 6000 &65000 மெட்ரிக் டன் குப்பைகள் குவியும். ஆனால், இம்முறை 5,500 மெட்ரிக் டன் குப்பைதான் குவிந்துள்ளது. இதற்கு மாநகராட்சி கடந்த 2 மாதமாக எடுத்த தூய்மையான டெல்லி நடவடிக்கையே காரணம். குறிப்பாக கடந்த 15 நாட்களுக்கு முன், தீபாவளி நாளில் டெல்லியை தூய்மையாக வைத்திருக்கும் பிரசாரத்தை மாநகராட்சி தொடங்கியது. அன்றாடும் குவியும் குப்பைகள் உடனுக்குடன் அகற்றப்பட்டன. இதற்காக துப்புரவு தொழிலாளர்கள் 24 மணி நேரமும் பணியாற்றினர்.

தீபாவளி நாளிலும் அதற்கு அடுத்த நாளிலும் பட்டாசு குப்பைகள், உயர்ரக அன்பளிப்பு அட்டைகள், இனிப்பு பெட்டிகள் ஆகியவை மலைப் போல் குவிந்திருக்கும். இதில் மார்க்கெட் பகுதிகளில்தான் குப்பைகள் மலை போல் குவிந்திருக்கும்.

ஒவ்வொரு ஆண்டும் குப்பையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், பலனளித்தது இல்லை. ஆனால், இம்முறை இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. குப்பைகளை குவிய வைக்கும் பொருட்கள் மீது பணத்தை செலவழிப்பதை மக்கள் முதலில் கட்டுப்படுத்த வேண்டும்.

சாதாரணமாக கட்டிட கழிவுகள்தான் குப்பை அதிகளவில் குவிய காரணமாக இருக்கும். இந்த ஆண்டு, புராரியில் கட்டிட கழிவுகளை மறுபயன்பாட்டுக்கும் தயாரிககும் நிலையம் அமைக்கப்பட்டது. அங்கு கட்டிட கழிவுகள் உடனுக்கு உடன் எடுத்து செல்லப்பட்டு விடுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

 

கண் சிகிச்சை முகாம்

Print PDF

தினமணி               02.11.2010

கண் சிகிச்சை முகாம்

மதுரை, நவ.1: மதுரை மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு வாசன் கண் மருத்துவமனையின் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

மாநகராட்சி கல்தூண் மண்டபத்தில் நடைபெற்ற இம்முகாமை ஆணையர் எஸ்.செபாஸ்டின் தொடங்கிவைத்தார். முகாமில் 200-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தங்களது கண்களை பரிசோதனை செய்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் வாசன் கண் மருத்துவமனை சார்பில் 5 மருத்துவர்கள் 10-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்துகொண்டனர். வாசன் கண் மருத்துவமனை மக்கள் தொடர்பு அலுவலர் வி.பிச்சைக்கனி இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.

 


Page 139 of 519