Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

கோவை மாநகராட்சியில் தனியார் மூலம் குப்பை சேகரிப்பு விரைவில் அமலாகிறது

Print PDF

தினகரன்               01.11.2010

கோவை மாநகராட்சியில் தனியார் மூலம் குப்பை சேகரிப்பு விரைவில் அமலாகிறது

கோவை, நவ.1: கோவை மாநகராட்சியில் மழை நீர் வடிகால், குப்பை சேகரிப்பு பணியை தனியார் வசம் ஒப்படைக்கப்படவுள்ளது. கோவை மாநகராட்சியில் சுகாதார பணிகள் முழு அளவில் மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் 800க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர். மாநகர் முழுவதும் 2700 துப்புரவு தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், சுகாதார பணியில் பல்வேறு சிக்கல் இருப்பதாகவும், பணி வேகமாக நடப்பதில்லை எனவும் புகார் அதிகரித்தது. இந்நிலையில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை தனியார் மூலம் (அவுட்சோர்சிங்) நடத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

நகரில் 2761 வீதிகள், 72 வார்டு இருக்கிறது. இதில் குப்பைகளை சேகரித்தல், தரம் பிரித்தல், குப்பை மாற்று நிலையம் கொண்டு செல்லும் பொறுப்பு தனியார் வசம் ஒப்படைக்கப்படும். வடக்கு மண்டலத்திற்குட்பட்ட 3, 6வது வார்டு, கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட 16, 23, 24 வது வார்டு, தெற்கு மண்டலத்திற்குட்பட்ட 25வது வார்டு, மேற்கு மண்டலத்திற்குட்பட்ட 49 மற்றும் 49 வார்டுகளில் முதல் கட்ட குப்பை சேகரிப்பு தனியார் மூலம் நடத்தப்படும். இது மட்டுமின்றி, தெருக்களை கூட்டி சுத்தம் செய்தல், மழை நீர் வடிகால் சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளும் தனியார் வசம் ஒப்படைக்கப்படும். முதல் கட்ட குப்பை சேகரிப்பு பணி நடத்தப்பட்ட இந்த 9 வார்டுகளையும் மாடல் வார்டுகளாகமாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. இப்பகுதிக்கு தனியார் மூலம் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நியமிக்கப்படுவர்.

இவர்களுக்கு தினக்கூலி வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. படிப்படியாக, அனைத்து வார்டுகளிலும் தனியார் மூலம் குப்பை சேகரிப்பு பணி செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.வெள்ளலூர் குப்பை கிடங்கில் உர தொழிற்சாலை, கழிவு கட்டமைப்பு, குப்பை பிரிப்பு பணி நடக்கிறது. இந்த பணிக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர். மேலும் நகரில் 96.50 கோடி ரூபாய் செலவில் திடக்கழிவு திட்டம் முழு அளவில் செயல்பாட்டிற்கு வரவுள்ளது. நகரில் அனைத்து வார்டுகளிலும் வீடு, வீடாக குப்பை சேகரிப்பு பணி மேற்கொள்ளவேண்டியுள்ளது. அனைத்து வார்டுகளிலும் சுமார் 7 லட்சம் வீடு இருக்கலாம் என தெரியவந்துள்ளது. ஏற்கனவே 4.80 லட்சம் குப்பை கூடை இலவசமாக வழங்கப்பட்டது. அடுத்த கட்டமாக 4.80 லட்சம் குப்பை கூடை வழங்க மாநகராட்சியில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விரைவில், மாநகராட்சியுடன் 12 உள்ளாட்சிகள் இணைக்கப்படவுள்ளது.

இதன் மூலம் மாநகராட்சியில் சுகாதார பணிக்கு அதிக தொழிலாளர்கள் தேவைப்படுவர். எனவே, சுகாதார பிரச்னை ஏற்படாமல் தடுக்க தனியார் பங்களிப்பிற்கு மாநகராட்சி நிர்வாகம் அதிக முக்கியத்துவம் வழங்கியுள்ளது. மாநகராட்சி மன்றத்திலும் தனியார் மூலம் குப்பை சேகரிப்பு பணிக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. விரைவில், தனியார் மூலம் குப்பை அகற்றும் பணி நடைமுறைக்கு வரும்.

 

கட்டுரைகள் :குப்பை இல்லா நல்லுலகம்?

Print PDF

தினமணி                     29.10.2010

கட்டுரைகள் :குப்பை இல்லா நல்லுலகம்?

உலகில் சீனாவுக்கு அடுத்ததாக அதிக மக்கள்தொகையைக் கொண்ட நாடு என்ற பெருமையைப்பெற்ற இந்தியாவில் மக்கள் நெருக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப சுகாதாரக்கேடு, புதுப்புது நோய்கள், குடிநீர்ப் பஞ்சம், உணவுப் பற்றாக்குறை என பல பிரச்னைகள் பெருகி வருகின்றன. இவற்றில் பெரும் ஆபத்தை விளைவிப்பவை பெருகிவரும் மாசுக்கள்தான்.

வழக்கம்போல மாசுபடுதலுக்கு முக்கிய காரணம் ரசாயனப் பொருள்களின் பயன்பாடு, மரங்களை அழித்தல் போன்றவற்றைக் கூறலாம். இப்படியே நிலைமை பூதாகரமாகிப் போவதால் புவிவெப்பமயமாதல், சுற்றுச்சூழல் சீர்கேடு என பல கடுமையான பின்விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

இந்தியாவைப் பொறுத்தவரை குப்பைகள் மிகுந்த நாடு என வெளிநாட்டவர்களால் கேலி பேசப்படும் அளவுக்கு மாறிவிட்டது. சரி இவர்கள்தான் நம்மை இளக்காரமாகப் பேசுகிறார்களே என்றால் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அண்மையில் பேசும்போது, குப்பைகள் அதிகமாக இருப்பதற்காக இந்தியாவுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் என கிண்டலாகப் பேசியுள்ளார். கிண்டலோ..சீரியúô இன்றைய நிலையில் குப்பைகள் குவிந்த நாடு இந்தியாதான் என்பதை மறுப்பதற்கில்லை.

இல்லாவிட்டால் வெளிநாடுகளிலிருந்து இலவசமாகக் கதிரியக்கக் குப்பைகளை இறக்குமதி செய்வோமா? ஏதோ இலவசமாகக் கொடுக்கிறார்களே என்பதற்காக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வீணான கம்ப்யூட்டர்கள், கதிரியக்க உலோகத் துண்டுகள், பழைய இரும்புப் பொருள்கள் என வாங்கிக் குவித்து நாட்டை மேலும் சீரழிக்கிறோம். அமெரிக்கா போன்ற நாடுகள் நல்லது செய்வது போல செய்து அவர்கள் நாட்டை தூய்மைப்படுத்திக் கொள்கிறார்கள்.

இது தேசிய அளவில் செய்யப்படும் காரியம். ஆனால் மாநிலம் வாரியாக சேரும் குப்பைகளை யாரும் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை.

நாட்டில் நாளுக்குநாள் குப்பைகளின் பெருக்கம் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனாலும் மக்கள் மனது வைத்தால் மட்டுமே இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

அண்மையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரே நாளில் 150 டன் குப்பைக் கழிவுகள் அகற்றப்பட்டன. இதேநிலை தினமும் ஏற்பட்டால் நிலைமை என்ன ஆகும்?

குப்பைகளைச் சேகரித்து அதை இயற்கை உரமாக மாற்றுதல், மின்சாரம் தயாரித்தல் என பல்வேறு ஆக்கப்பூர்வமான செயல்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன.

ஆனாலும், இதை அனைவரும் பின்பற்றினால்தான் குப்பைகள் இல்லா நல்லுலகம் அமையும். நம்மில் பலர் குப்பைகளை முறையாக அகற்றுவதில் அலட்சியம் காட்டுகிறோம்.

இதனால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவது தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்டது. மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்தால் மட்டுமே சுகாதாரத்தைப் பேணலாம்.

மக்காத குப்பைகள் என பார்த்தால் பிளாஸ்டிக், பாலிதீன் பைகளைக் கூறலாம்.

மக்காத குப்பையால் மண்ணில் மழைநீர் தேங்குகிறது. தண்ணீரை மண் உறிஞ்சாத நிலை ஏற்படுகிறது.

சிங்கப்பூர், மலேசியா, கொரியா போன்ற பல நாடுகளில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் தீவிரமாகச் செயல்படுத்தப்படுகிறது. குப்பைகளை எங்குமே பார்க்க முடியாது. ஆனால், நம் நாட்டிலோ குளம், குட்டை, ஆறு, நீர்த்தேக்கங்களில் கழிவுகள்தான் அதிகமாகக் காணப்படுகின்றன. நம் ஊரில் அவசரத்துக்கு டிரான்ஸ்பார்மர்களும் கூட ஒதுங்குமிடமாகிவிட்டது வேதனை தரும் விஷயம்.

எனவே, இதைத் தவிர்ப்பதில் ஒவ்வொருவருமே அக்கறை காட்ட வேண்டும். குறிப்பாக, வீட்டில் உள்ள குப்பைகளை உரமாக மாற்ற சிறிய கருவி தயாரிக்கப்பட்டுள்ளது. அதைப் பயன்படுத்தலாம். பாலிதீன் கவர்களைப் பயன்படுத்தக் கூடாது என்ற சட்டம் ஏட்டளவில்தான் உள்ளது. அதை எத்தனை பேர் பின்பற்றுகிறார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது. குமரி மாவட்டம் மட்டும் முன்னோடியாக தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருவது பாராட்டத்தக்கது.

பொதுவாக, சில கடைகளில் மட்டுமே காகிதத்தைப் பயன்படுத்துகின்றனர். இன்னும் பல கடைகளில் பாலிதீன் கவர்களின் உபயோகம் காணப்படுகிறது. இதை நிரந்தரமாகத் தடுக்க வேண்டும். புகை பிடிப்போருக்கு அபராதம், நடவடிக்கை என சில காலம் பரபரப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்புறம் பழைய மாதிரியாகி விட்டது. அதே நிலைதான் பாலிதீன் தடுப்பு நடவடிக்கையிலும் காணப்படுகிறது. எனவே மாற்றம் என்பது மக்கள் மனதில் தானாக ஏற்பட வேண்டும்.

கையில் துணிப்பைகளை எடுத்துச் செல்ல வேண்டும். இலைகளைப் பயன்படுத்தலாம். பிளாஸ்டிக் குடங்களுக்குப் பதில் மண் பானைகளைப் பயன்படுத்தலாம். வீடுகளில் உள்ள குப்பைகளைத் தோட்டங்களில் உரமாகப் பயன்படுத்தலாம்.

இதுபோல அலுவலகம், ஹோட்டல் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருமே ஒன்றிணைந்து செயல்பட்டால் குப்பைகளை அறவே இல்லாது அகற்றலாம். சுகாதாரக்கேட்டையும் தவிர்க்கலாம்.

மேலும், தொண்டு நிறுவனங்கள், ரசிகர் மன்றங்கள், சுயஉதவிக் குழுவினர், பிறந்தநாள் கொண்டாடும் பிரபலங்கள் குப்பைகளை அகற்றுவதைச் சேவையாகச் செய்யலாம்.

சாலைப் பாதுகாப்பு வாரம், சுகாதார வாரம் என்பதைப் போல குப்பை ஒழிப்பு வாரம் கடைப்பிடிக்கலாம். நாட்டுநலப்பணித் திட்ட மாணவர்களைக் கொண்டு குப்பைகளை அகற்றலாம்.

இது தவிர, அரசு மகளிர் குழுக்களைப் பயன்படுத்தி குப்பையிலிருந்து உரம் தயாரித்தல், திடக்கழிவு மேலாண்மை மற்றும் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் ஆகியவற்றைச் செம்மையாகச் செயல்படுத்தலாம்.

இந்த விஷயத்தில் மக்களுக்குப் போதிய விழிப்புணர்வு மூலம் மனமாற்றத்தை ஏற்படுத்தினால் குப்பை இல்லா நல்லுலகு தொட்டுவிடும் தூரத்தில்தான் உள்ளது. மனது வைப்பார்களா?

 

டெங்கு காய்ச்சலை தடுக்க மாநகராட்சி ஊழியர்கள் வீதி வீதியாக பிரசாரம் ஒரேநாளில் 6 டன் குப்பை அகற்றம்

Print PDF

தினகரன்              28.10.2010

டெங்கு காய்ச்சலை தடுக்க மாநகராட்சி ஊழியர்கள் வீதி வீதியாக பிரசாரம் ஒரேநாளில் 6 டன் குப்பை அகற்றம்

சென்னை, அக்.28: டெங்கு காய்ச்சலை தடுக்க மாநகராட்சி ஊழியர்கள் வீதிவீதியாக சென்று தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வீடுகளில் கொசுப்புழு உற்பத்திக்கு காரணமான உபயோகமற்ற பொருட்களையும் அகற்றி வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 6 டன் குப்பையை அவர்கள் அகற்றினர்.

சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத்துறை சார்பில் அந்தந்த பகுதி உதவி சுகாதார அதிகாரிகள் தலைமையில் துப்புரவு அதிகாரிகள், பூச்சியியல் வல்லுனர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மலேரியா கொசுத் தடுப்பு பணியாளர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கையில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கையில் ஏந்தி நேற்று வீதி, வீதியாக சென்று டெங்கு காய்ச்சல், மலேரியா குறித்த விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.

இந்த பிரசாரத்தின் போது, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர். மேலும் 4 ஆயிரம் வீடுகளில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டினர். நேற்று ஒரே நாளில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளை ஆய்வு செய்யப்பட்டது.

அதில் 3 ஆயிரம் வீடுகளிலிருந்து கொசுப்புழு உற்பத்திக்கு காரணமாக இருந்த உபயோகமற்ற தேங்காய் ஓடு, பிளாஸ்டிக் கப்கள், உடைந்த வாளிகள், காலி பாட்டில்கள், தெருக்களில் இருந்த உபயோகமற்ற டயர்கள் என 6 டன் பொருட்களை மாநகராட்சி ஊழியர்கள் சேகரித்து குப்பை வளாகத்திற்கு கொண்டு சென்றனர்.

 


Page 141 of 519