Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

ஆயுத பூஜை கழிவுகள் 1,000 டன் சேலம் மாநகராட்சியில் அகற்றம்

Print PDF

தினமலர் 18.10.2010

ஆயுத பூஜை கழிவுகள் 1,000 டன் சேலம் மாநகராட்சியில் அகற்றம்

சேலம்: சேலம் மாநகராட்சியில் ஆயுத பூஜை காரணமாக, நேற்று ஒரே நாளில் 1,000 டன் கழிவுகள் அகற்றப்பட்டது.ஆயுத பூஜையின் போது, வீடு, அலுவலகம், தொழில் புரியும் இடம், வாகனம் ஆகியவற்றுக்கு பூஜை செய்யப்படும். பூஜையை முன்னிட்டு தேங்காய் மற்றும் பூசணிக்காய்கள் உடைக்கப்படும். மறு நாள் பூஜைக்கு பயன்படுத்திய வாழைக்கன்றுகள், மாலைகள் உள்ளிட்ட கழிவு பொருட்கள் அப்புறப்படுத்தப்படும்.சேலம் மாநகர பகுதியில் விபத்துக்களை தவிர்க்கும் நோக்கத்தில், ரோட்டில் பூசணிக்காய்களை உடைக்க வேண்டாம் என்று மாநகராட்சி கமிஷனர் பழனிசாமி மற்றும் மாநகர போலீஸ் கமிஷனர் சுனில்குமார் சிங் ஆகியோர் வேண்டுகோள் விடுத்தனர். இருப்பினும் அனைத்து இடங்களில் ரோட்டிலேயே பூசணி மற்றும் தேங்காய் உடைக்கப்பட்டது.

ஆயுத பூஜை கழிவுகள் தேக்கம் அடையாமல் இருக்க, சேலம் மாநகராட்சி சார்பில் நேற்று முன்தினம் இரவில் இருந்தே துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டது. மாநகராட்சியின் 60 வார்டிலும் ஒரே நேரத்தில் ஆயிரத்து 600 துப்புரவு பணியாளர்கள் பூஜை கழிவு அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.மாநகராட்சிக்கு சொந்தமான டிராக்டர், குப்பை லாரி, மினி ஆட்டோ உள்ளிட்ட 26 வாகனங்களில் கழிவுகள் சேகரிக்கப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு நாளில் மட்டும் 1,100 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டது. வழக்கமாக சேலம் மாநகராட்சியில் 600 டன் குப்பைகள் சேகரிக்கப்படும்.

 

வடகிழக்கு பருவ மழையை சமாளிக்க கூவம் - பக்கிங்ஹாம் கால்வாய் சீரமைப்பு

Print PDF

தினமணி 15.10.2010

வடகிழக்கு பருவ மழையை சமாளிக்க கூவம் - பக்கிங்ஹாம் கால்வாய் சீரமைப்பு

சென்னை சேப்பாக்கத்தில் சீரமைக்கப்பட்டு வரும் பக்கிங்ஹாம் கால்வாய்

சென்னை, அக்.14: வடகிழக்குப் பருவ மழையைச் சமாளிக்கும் வகையில் சென்னையில் உள்ள கூவம் ஆறு மற்றும் பக்கிங்ஹாம் கால்வாயினை தூர்வாரி, குப்பைகளை அகற்றும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.

÷பொதுப் பணித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட இந்தப் பணிகள், வட கிழக்கு பருவ மழை தொடங்குவதற்கு முன்பாகவே முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை நகரில் வடகிழக்கு பருவமழையைச் சமாளிக்கும் வகையில், கால்வாய்களில் மழை நீர் தேங்காமல் இருக்கவும், கால்வாயின் கரை பகுதிகளைச் சீர்படுத்தும் பணிகளுக்காகவும் ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் வடகிழக்கு பருவமழையைச் சமாளிக்கும் வகையில் கொசஸ்தலை ஆறு வட்டத்தின் கீழ் வரும் போரூர் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி, பருத்திப்பட்டு தடுப்பணை மற்றும் அம்பத்தூர் கால்வாயினை சீர்படுத்துவதற்கு ரூ.89 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோல ஆரணியாறு வட்டத்தின் கீழ் வரும் கூவம் ஆறு-மத்திய பக்கிங்ஹாம் கால்வாய்களின் கரைப் பகுதிகளை பலப்படுத்தியும், குப்பைகளை அகற்றி, சீர்படுத்தும் பணிகளுக்காகவும் ரூ.1.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.2 கோடி நிதி ஒதுக்கி பணிகள் நடந்து வருகின்றன.

கடந்த அக்டோபர் 1-ம் தேதி தொடங்கிய இந்தப் பணிகளை வட கிழக்கு பருவ மழை தொடங்குவதற்கு முன்பாகவே முடிக்கப் பொதுப் பணித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

கடந்த ஆண்டுகளின்போது வட கிழக்குப் பருவ மழையைச் சமாளிப்பதற்கு ரூ.4 கோடி வரை நிதி ஒதுக்கப்பட்டு வந்தது. இப்போது, ஜவாஹர்லால் நேரு புனரமைப்புத் திட்டத்தின் கீழ் பொதுப் பணித்துறை மற்றும் சென்னை மாநகராட்சியின் சார்பில் ரூ.1,440 கோடியில் கால்வாய்கள் சீரமைப்பு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.

Last Updated on Friday, 15 October 2010 10:11
 

ஆவடி, ஊத்துக்கோட்டை, பொன்னேரியில் தயாரிப்பு தேதி குறிப்பிடாத குடிநீர் பாக்கெட்டுகள் அழிப்பு

Print PDF

தினகரன் 15.10.2010

ஆவடி, ஊத்துக்கோட்டை, பொன்னேரியில் தயாரிப்பு தேதி குறிப்பிடாத குடிநீர் பாக்கெட்டுகள் அழிப்பு

ஆவடி, அக். 15: ஆவடி நகராட்சி பகுதியில் உள்ள டாஸ்மாக் பார், பெட்டிக்கடை, குளிர்பான கடை, மளிகை கடைகளில் காலாவதி மற்றும் தயாரிப்பு தேதி குறிப்பிடப்படாத குடிநீர் பாக்கெட்டுகள் விற்கப்படுவதாக நகராட்சி தலைவர் விக்டரி மோகன், நகராட்சி ஆணையர் ராமமூர்த்தி ஆகியோருக்கு புகார்கள் வந்தன.

இதனை அடுத்து, நகராட்சி சுகாதார அதிகாரி (பொறுப்பு) மோகன், பூந்தமல்லி சுகாதாரத் துறை நல அலுவலர் டாக்டர் செந்தில்குமார் ஆகியோர் ஊழியர்களுடன் கடைகளுக்கு சென்று நேற்று அதிரடி சோதனை நடத்தினர். ஆவடி, திருமுல்லைவாயல், கோவில்பதாகை, பட்டாபிராம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில், தயாரிப்பு தேதி இல்லாத 1,000க்கும் மேற்பட்ட குடிநீர் பாக்கெட்டுகளும், காலாவதியான உணவுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதனை நகராட்சி வளாகத்தில் கொண்டு வந்து அழித்தனர்.

ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டை டாஸ்மாக் பார்களில் தரமற்ற தண்ணீர் பாக்கெட்டுகள் விற்கப்படுவதாக திருவள்ளூர் மாவட்ட சுகாதாரதுறை துணை இயக்குனர் சம்பத்திற்கு புகார் வந்தது.

அவரது உத்தரவின்பேரில் கச்சூர்ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார மேற்பார்வையாளர் தீனதயாளன் தலைமையில், சுகாதார ஆய்வாளர் தாரகேஸ்வரன், லோகநாதன் ஆகியோர் பென்னலூர்பேட்டை, கச்சூர், சீத்தஞ்சேரி ஆகிய பகுதியில் உள்ள டாஸ்மாக் பார்களில் நேற்று முன்தினம் சோதனை செய்தனர்.

சீத்தஞ்சேரி பாரில் தரமற்ற தண்ணீர் பாக்கெட்டுகள் 350 பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

பொன்னேரி:

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ராஜேஷ் உத்தரவின்பேரில் மாவட்ட சுகாதார துணை இயக்குனர் சம்பத் மேற்பார்வையில் மீஞ்சூர் வட்டார மருத்துவர் தினகரன் தலைமையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பாலகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் காசிநாதன், நீதிவாசன், பாலகுமார், முருகையன், சுந்தர்ராஜன், தங்கவேலு ஆகியோர் மீஞ்சூர் மற்றும் பொன்னேரியில் உள்ள 16 டாஸ்மாக் பார்கள் மற்றும் 28 குளிர்பான கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர்.

ரூ.10,000 மதிப்புள்ள காலாவதியான தண்ணீர் பாக்கெட்டுகள் மற்றும் குளிர் பானங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். பறிமுதல் செய்யப்பட்ட குளிர்பானங்கள் மற்றும் தண்ணீர் பாக்கெட்டுக்களை சம்பவ இடத்திலேயே அழித்தனர்.

 


Page 146 of 519