Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

சுகாதாரப் பயிற்சி முகாம்

Print PDF

தினமணி 09.09.2010

சுகாதாரப் பயிற்சி முகாம்

வந்தவாசி, செப்.8: வந்தவாசி நகராட்சி சுவர்ண ஜெயந்தி திட்டம் 2009-2010 மூலம் பயன்பெற்ற பயனாளிகளுக்கான சுகாதாரம், சுற்றுச்சூழல், தொழில் முனைதல் குறித்த பயிற்சி முகாம் வந்தவாசி மேற்கு பாடசாலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நகர்மன்றத் தலைவர் க.சீனுவாசன் தலைமை வகித்தார். சுற்றுச்சூழல் குறித்து வந்தவாசி நகராட்சி ஆணையர் என்.உசேன் பாரூக் மன்னர் பேசினார்.

தொழில் முனைதலும் தொழில் முனைவோரும், தொழில் வாய்ப்புகளை கண்டறிதல், சந்தை ஆய்வு, தொழில் நிர்வாகம், தொழில் திட்ட அறிக்கை பற்றிய கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் குறித்து திருவண்ணாமலை மாவட்ட வாழ்ந்து காட்டுவோம் திட்ட உதவி மேலாளர் எஸ்.சுபாஷ்சந்திரன், சமூக பயிற்றுநர் டி.கண்ணகி ஆகியோர் பேசினர். சுற்றுப்புற சுத்தம், தன்சுத்தம், திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்டவை குறித்து வேலூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் அலுவலக சமுதாய வளர்ச்சி அலுவலர் செல்வராஜ் பேசினார்.

நகர்மன்றத் துணைத்தலைவர் வாசுகி, நகராட்சி சமுதாய அமைப்பாளர், பள்ளித் தலைமை ஆசிரியர் க.சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Last Updated on Thursday, 09 September 2010 10:34
 

கொசு ஒழிப்புப் பணி

Print PDF

தினமணி 09.09.2010

கொசு ஒழிப்புப் பணி

பழனி, செப். 8: பழனியில் பெரிய அளவிலான போகிங் மெஷின் மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணி புதன்கிழமை துவங்கியது.

பழனி வார்டு பகுதிகளில் கடந்த காலங்களில் சிறிய போகிங் மெஷின் மூலம் நகராட்சிப் பணியாளர்கள் கொசு மருந்து தெளித்து வருகின்றனர்.

இந் நிலையில், பெரிய அளவிலான போகிங் மெஷின் கொண்டு வார்டு பகுதிகளில் கொசு மருந்தை மினி லாரி வாகனங்களில் கொண்டு சென்று தெளிக்கும் பணி புதன்கிழமை துவங்கியது.

பழனி நகர்மன்றத் தலைவர் ராஜமாணிக்கம், நகராட்சி ஆணையர் மூர்த்தி, நகர்மன்றத் துணைத் தலைவர் ஹக்கீம் ஆகியோர் இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கொசு மருந்து தெளிக்கும் பணியைத் துவக்கி வைத்தனர்.

ஒருவார காலம் இந்த இயந்திரம் மூலம் அனைத்து வார்டுகளிலும் கொசு மருந்து தெளிக்கப்படும் என நகர்மன்றத் தலைவர் தெரிவித்தார். பைத்ரீன் மற்றும் டீசல் கலந்து பெரிய போகிங் இயந்திரம் மூலம் ஸ்பிரே செய்யப்படுகிறது. அடிவாரம் மதனபுரம், இட்டேரி ரோடு, அடிவாரம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற இப் பணியில் நகர்நல அலுவலர் (பொறுப்பு) நெடுமாறன், சுகாதார ஆய்வாளர்கள் மணிகண்டன், அபுதாகீர், அனீபா, பழனிச்சாமி, களப் பணி உதவியாளர் நாகராஜ், ஆண்கள் சுய உதவிக் குழுத் தலைவர் தாரிக்ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

கொசு ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த புது திட்டம்: வீடு வீடாக ஸ்டிக்கர்

Print PDF

தினமலர் 09.09.2010

கொசு ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த புது திட்டம்: வீடு வீடாக ஸ்டிக்கர்

சென்னை : கொசு ஒழிப்பு விழிப்புணர்வு ஸ்டிக்கர் மூலம், கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஒரு லட்சம் ஸ்டிக்கர்களை வீடு வீடாக ஒட்ட, சென்னை மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கொசு ஒழிப்பு பணிக்கு மக்களின் விழிப்புணர்வு குறித்து, சென்னை மாநகராட்சி ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. இதில் நகரில் 120 கிலோ மீட்டர் நீளத்திற்கு கால்வாய்கள் 1,400 கி.மீ., நீளத்திற்கு மழைநீர் வடி கால்வாய்கள், மூன்று லட்சம் மேல்நிலைத் தொட்டிகள், 25 ஆயிரம் கிணறுகள், ஐந்தாயிரம் திறக்கப்படாத குடோன்கள் மற்றும் திறந்தவெளி நிலங்கள் உள்ளதாக கணக்கெடுக்கப்பட்டு, அவற்றின் மூலம் அதிக அளவில் கொசு உற்பத்தியாவதாக கண்டறியப்பட்டுள்ளது.

கால்வாய்களிலும், மழைநீர் வடிகால்வாய்களிலும் தண்ணீர் தேங்குவதாலும், மேல்நிலைத் தொட்டிகள், கிணறுகள் மூடப்படாமல் இருப்பதாலும், கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தி ஆவதாகவும் தெரிகிறது. மேலும் வீடுகளில் ஆங்காங்கே கிடக்கும் தேங்காய் ஓடு, ஆட்டுக்கல், டயர் மற்றும் தேவையில்லாத பிளாஸ்டிக் பொருட்களில் தேங்கும் மழைநீரிலும் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இந்த கொசுக்களால் மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்கள் பரவுகின்றன. இதனால், மாநகராட்சி வீடுகளில் சாதாரணமாக போட்டு வைக்கும் பொருட்களில் மழைநீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வலியுறுத்தும் விழிப்புணர்வு துண்டு ஸ்டிக்கர்கள், வீடுவீடாக ஒட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

நகரில் உள்ள 1,400 குடிசைப் பகுதிகளிலும் கொசு உற்பத்தி அதிக அளவில் உள்ள இடங்களையும் கண்டறிந்து, அந்த பகுதிகளில் "கொசுக்களை கட்டுப்படுத்துவது நம் கையில்' என்ற விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணி நேற்று தொடங்கியது. அது போல் நகர் முழுவதும் ஒரு லட்சம் ஸ்டிக்கர்களை ஒட்ட மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கொசு உற்பத்தியைத் தடுக்க பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, விழப்புணர்வு ஏற்படுத்த சுகாதாரத்துறை தயாரித்த "சிடி'யை., சினிமா தியேட்டர்களில் இரண்டு நிமிடம் இலவசமாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

 


Page 170 of 519