Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

கோவில்பட்டியில் நகராட்சி குப்பை வண்டியால் தெருவில் சுகாதாரகேடு

Print PDF

தினகரன் 08.09.2010

கோவில்பட்டியில் நகராட்சி குப்பை வண்டியால் தெருவில் சுகாதாரகேடு

கோவில்பட்டி, செப். 8: கோவில்பட்டி காங்கேயன் கோயில் தெருவில் நிறுத்தப்படும் நகராட்சி குப்பை வண்டியால் சுகாதாரகேடு ஏற்பட்டுள்ளது.

கோவில்பட்டி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. தெருக்களில் சேரும் குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் அகற்றி வருகின்றனர். இங்குள்ள காங்கேயன் கோயில் தெருவில் நகராட்சி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வண்டியில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் குப்பைகளை கொட்டுகின்றனர். அவை மறுநாள் அப்புறப்படுத்தப்படுகிறது.

நகைக்கடை, பட்டறை மற்றும் குடியிருப்புகள் அதிகமுள்ள இத்தெரு சைக்கிள் தவிர பிற வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு மிகவும் குறுகலானது.

இங்கு நிறுத்தப்படும் குப்பை வண்டியில் இருந்து வீசும் துர்நாற்றத்தால் சுகாதார கேடு ஏற்படுவதுடன், கொசுக்களால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.

சில சமயங்களில் இந்த குப்பைகளில் தீ வைக்கப்படுவதால் புகை மண்டலம் சூழ்கிறது.

எனவே ஆட்கள் நடந்து செல்லவே சிரமப்படும் இத்தெருவில் நிறுத்தப்பட்டுள்ள குப்பை வண்டியை மாற்று இடத்தில் நிறுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கோவில்பட்டி காங்கேயம் தெருவில் குப்பைகள் அகற்றப்படாததால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது

 

 

மக்கள் எதிர்ப்பை மீறி மழைநீர் குழாய் அடைப்பு அகற்றம்

Print PDF

தினகரன் 07.09.2010

மக்கள் எதிர்ப்பை மீறி மழைநீர் குழாய் அடைப்பு அகற்றம்

ஆவடி, செப். 7: ஆவடி நகராட்சி 18வது வார்டில் சங்கரர் நகரில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் தேங்கும் மழைநீர் கல்லூரி சாலை வழியாக 17வது வார்டில் உள்ள சரஸ்வதி நகருக்கு குழாய் மூலம் செல்கிறது.

கடந்த ஒரு மாதமாக அடிக்கடி பெய்யும் மழையால், சங்கரர் நகர் பகுதியில் அதிக அளவு தண்ணீர் தேங்கியது. இது, சரஸ்வதி நகர், வெற்றி நகர் பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டதால், அங்குள்ள வீடுகள், தெருக்களில் தண்ணீர் புகுந்தது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

சிலர், சங்கரர் நகர் பகுதிகளில் இருந்து வரும் தண்ணீர் குழாயை கல்லூரி சாலையில் மணல் கொட்டி அடைத்தனர். இதன் காரணமாக, சங்கரர் நகர் பகுதியிலிருந்து தண்ணீரை வெளியேற்ற முடியவில்லை.

இதுகுறித்து, சங்கரர் நகர் பகுதி மக்கள், ஆவடி நகராட்சி தலைவர் விக்டரி மோகன், ஆணையாளர் ராமமூர்த்தி ஆகியோரிடம் புகார் தெரிவித்தனர். நகராட்சி அதிகாரிகள், ஆவடி போலீஸ் உதவி கமிஷனர் முகிலன், சப் இன்ஸ்பெக்டர்கள் பெரியபாண்டியன், முருகன் ஆகியோர் தலைமையில் நேற்று காலை பொக்லைன் இயந்திரத்துடன் குழாய் அடைப்பை திறக்க வந்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த 17வது வார்டு கவுன்சிலர் பசுபதி உட்பட 18 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர், அடைக்கப்பட்டிருந்த குழாய் திறந்துவிடப்பட்டது. சங்கரர் நகர் பகுதியிலிருந்து சரஸ்வதி நகருக்கு மழைநீர் சென்றது.

சரஸ்வதி நகர் பகுதியினர் கூறுகையில், "குழாய் அடைப்பை திறந்து விட்டதால், எங்கள் பகுதியில் உள்ள 1000க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்படுகின்றன.

இங்கு தேங்கிய நீரை உடனடியாக வெளியேற்ற வேண்டும் இல்லாவிட்டால், கலெக்டரை சந்தித்து ரேஷன் கார்டு, அடையாள அட்டையை திரும்ப ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்றனர்.

 

கழிவுநீர் சூழ்ந்ததால் நோய் பரவும் அபாயம் : விவேகானந்தா நகர் பொதுமக்கள் அவதி

Print PDF

தினமலர் 06.09.2010

கழிவுநீர் சூழ்ந்ததால் நோய் பரவும் அபாயம் : விவேகானந்தா நகர் பொதுமக்கள் அவதி

ஆவடி: ஆவடி விவேகானந்தா நகரில் மழைநீருடன், கழிவுநீர் கலந்து தெருக்களில் குளம் போல் தேங்கியிருப்பதால், அப்பகுதி மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆவடி, நகராட்சியின் கீழ் 48 வார்டுகளிலும் ஜவகர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் 103.84 கோடி ரூபாயில் குடிநீர் திட்டம், 158.05 கோடி ரூபாயில் கழிவு நீர் பாதாள சாக்கடை திட்டம் நடைபெற்று வருகிறது. இத்திட்ட பணிகளுக்காக சாலைகளில் பள்ளம் தோண்டியதால், பல இடங்களிலும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். கழிவு நீர் வெளியேற சரியான வழியில்லாததால் ஆங்காங்கே குளம் போல் தேங்கியுள்ளது. தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், பருத்திப்பட்டு ஏரியில் கலக்கின்றது. இதனால் பருத்திப்பட்டு ஏரி மாசடைந்து விட்டது. இந்நிலையில், ஏரியில் கலக்கும் கழிவு நீர், வெளியேறி ஆவடி- பூந்தமல்லி சாலையில் கன்னிகாபுரம் அடுத்துள்ள விவேகானந்தா நகர், திருவள்ளுவர் தெரு, காந்தி, பல்லவன், அண்ணா, சேரன் தெருக்களில் புகுந்து விட்டது. விவேகானந்தா நகரில் உள்ள கால்வாய் அடைப்பு காரணமாக கழிவுநீர் இங்கேயே தேங்கி விட்டது. இதனால், இங்கு வசிப்பவர்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற இரண்டு மதகுகள் உள்ளன.
தற்போது ஒரு மதகு வழியாக ஏரி நீர் வெளியே செல்கிறது. மற்றொரு மதகு பகுதியில் ஏரி நீர் வெளியே செல்ல வழியில்லாமல் இத்தெருக்களில் புகுந்து விடுகிறது. இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், "விவேகானந்தா நகரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் கழிவு நீர் வெளியேற வசதியில்லை. நாங்கள் கழிவு நீரை, கழிவு நீர் தொட்டியில் சேமித்து வைத்து, வாகனங்கள் மூலம் அப்புறப்படுத்துகிறோம். தொற்று நோய் பரவும் என்பதால் எங்கள் வீட்டு கழிவு நீரை வெளியே விடாமல் பாதுகாப்பாக நாங்கள் வெளியேற்றுகிறோம். ஆனால் எங்கோ இருந்து வரும் கழிவு நீர் சுற்றுப்பகுதியில் உள்ள அனைத்து தெருக்களிலும் தேங்கி, இங்குள்ள குழந்தைகளுக்கு தொற்று நோய் பரவும் வகையில், முழங்கால் அளவிற்கு தேங்கி நிற்கிறது. நகராட்சி அதிகாரிகள் இப்பகுதியில் தேங்கும் கழிவு நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

 


Page 172 of 519