Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

குப்பை இல்லா குமரி மாவட்டம்: முழுமை பெறுமா முன்மாதிரி திட்டம்?

Print PDF
தினமணி 03.09.2010

குப்பை இல்லா குமரி மாவட்டம்: முழுமை பெறுமா முன்மாதிரி திட்டம்?

களியக்காவிளை: குப்பைகள் இல்லாத மாவட்டமாக கன்னியாகுமரி மாவட்டத்தை மாற்ற முன்னோடி முயற்சி எடுத்துள்ள மாவட்ட நிர்வாகத்தின் செயல் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் இயற்கைப் பண்ணை விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் முன்னோடி திட்டமாக பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டிற்கு கடந்த ஏப்ரல் முதல் தேதியிலிருந்து மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

அது தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி இதில் பெரும் வெற்றியும் கண்டது.

இதையடுத்து குப்பை இல்லாத மாவட்டத்தை உருவாக்க இலக்கு நிர்ணயித்து, அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது மாவட்ட நிர்வாகம்.

முதல்கட்டமாக செப்டம்பர் 1-ம் தேதி முதல் குப்பைகளை வீதிகளிலும், நீர் நிலைகளிலும் கொட்ட மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இதைத் தொடர்ந்து 2011 ஜனவரி முதல் தேதியிலிருந்து அபராதம், குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கவும், அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் திட்டமிட்டு பூஜ்ய கழிவு திட்ட கலந்துரையாடல்கள், பயிலரங்குகள் என பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தற்போது நடத்தப்பட்டு வருகிறன்றன.

மேலும் திடக்கழிவு மேலாண்மை, குப்பைகளை உரமாக்குவது, மறுசுழற்சிக்கு உள்படுத்துவது உள்ளிட்டவை குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு உருவாக்கும் பணியிலும் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன்னர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகளின் பின்புறங்களில் குப்பைகளைக் கொட்ட தனியாக குழிகளை வெட்டி வைத்திருந்தனர். இந்த குழிகளில் கொட்டப்படும் குப்பைகள் சில மாதங்களில் மக்கி இயற்கை உரமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. இப்பகுதியில் வாழை மற்றும் காய்கறி செடிகளுக்கும், மரச்சீனி பயிரிடும் நிலத்திலும் இந்தவகை இயற்கை உரங்கள் பயன்படுத்தப்பட்டன. யூரியா, பாஸ்பேட் உள்ளிட்ட ரசாயன உரங்களின் வருகைக்குப் பின்னர் இயற்கை உரங்கள் மட்டுமன்றி குப்பைக் குழிகளும் காணாமல் போய்விட்டன.

இந்த குப்பைக் குழிகளை அனைத்து வீடுகளிலும் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்து இயற்கை பண்ணை விவசாயிகள் மற்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் மத்தியில் தற்போது பலமாக எழுந்துள்ளது. புதிதாக வீடு, கட்டடங்கள் அமைப்பவர்கள் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது.

அதே போல குப்பைக் குழிகள் அமைக்க அறிவுறுத்துவதுடன், சம்பந்தப்பட்ட இடங்களுக்கு உரிய அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் சென்று பார்வையிட்டு, அதன் பின்னரே கட்டட அனுமதி வழங்கி, அதற்கான சொத்துவரி வசூலிக்க வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். ஏற்கெனவே கட்டப்பட்ட பிற வீடுகளிலும் குப்பைக் குழிகள் அமைக்க அறிவுறுத்தப்பட வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தை குப்பை இல்லாத மாவட்டமாக மாற்றுவதில் இம் மாவட்டத்தில் உள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளையும் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும் ஈடுபடுத்தி அனைத்துப் பகுதிகளிலும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை முனைப்புடன் மேற்கொள்ள வேண்டும்.

இத் திட்டம் அரசின் கண்துடைப்பு திட்டமாக மாறிவிடாமல், குப்பையில்லாத மாவட்டமாகவும் இயற்கை விவசாயம் மட்டுமே செய்யப்படும் மாவட்டமாகவும் மாறி நாட்டிற்கே முன்மாதிரி மாவட்டமாக கன்னியாகுமரி மாவட்டம் திகழ வேண்டும்.

Last Updated on Friday, 03 September 2010 09:20
 

கோவையில் 1,750 கிலோ கலப்பட டீத்தூள் பறிமுதல்

Print PDF

தினமணி 02.09.2010

கோவையில் 1,750 கிலோ கலப்பட டீத்தூள் பறிமுதல்

கோவை, செப்.1: கோவையில் 1,750 கிலோ கலப்பட டீத்தூளை உதகை தேயிலை வாரிய அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.

÷கோவையில் உள்ள பெரும்பாலான டீக் கடைகளில் கலப்பட டீத்தூள் பயன்படுத்தப்படுவதாக தேயிலை வாரியத்துக்கு புகார்கள் வந்தன.

இது குறித்து விசாரணையில் இறங்கிய தேயிலை வாரிய அதிகாரிகளுக்கு கோவை மணியகாரம்பாளையத்தில் கலப்பட டீத்தூள் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்படுவது குறித்து ரகசிய தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, அந்தத் தொழிற்சாலையில் திடீரென தேயிலை வாரிய நிர்வாக இயக்குநர் அம்பலவாணன் தலைமையிலான அதிகாரிகள் சோதனை செய்தனர்.

÷அப்போது அந்தத் தொழிற்சாலையில் டீத் தூளுடன் ரசாயனப் பொருள்கள் கலப்படம் செய்யப்படுவது தெரிய வந்தது. அந்தத் தொழிற்சாலையில் இருந்த 1,700 கிலோ டீத்தூள் பறிமுதல் செய்யப்பட்டது.

அதே போல், கணபதி பகுதியில் செயல்பட்ட மற்றொரு தொழிற்சாலையில் இருந்து 50 கிலோ கலப்பட டீத்தூளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

÷இதுகுறித்து தேயிலை வாரிய அதிகாரிகள் கூறியது: டீயின் நிறத்தையும், அடர்த்தியையும் அதிகரிக்க டீத்தூளில் கலப்படம் செய்யப்படுகிறது. இதற்காக பயன்படுத்தப்படும் ரசாயனமானது உடல் நிலத்துக்கு ஊறுவிளைவிக்கக் கூடும். கோவையில் செயல்படும் சில தொழிற்சாலைகள் உதகையில் இருந்து டன் கணக்கில் டீத்தூளை வாங்குகின்றன. அவற்றுடன் ரசாயன பொருள்களை சேர்த்து எடை அதிகரிக்கப்படுகிறது என்றனர்.

 

கொசுவால் பரவும் மலேரியாவை தடுக்க மாத்திரை

Print PDF

தினகரன் 02.09.2010

கொசுவால் பரவும் மலேரியாவை தடுக்க மாத்திரை

பெர்லின், செப்.2: உள்ளங்கையில் பிடித்துவிட்டால் இடிபாடுகளில்சிக்கி மூச்சு திணறி செத்துவிடக்கூடிய தம்மாத்தூண்டு பூச்சி கொசு. என்னமாய் படுத்தி எடுக்கிறது. மாலை 5 மணிக்கே வாசல் கதவு முதற்கொண்டு ஜன்னல்கள், இண்டு, இடுக்கு விடாமல் வீட்டின் அத்தனை துவாரங்களையும் அடைத்து.. வலை கட்டி, வீடு முழுக்க ஸ்பிரேஅடித்து, கொசுவர்த்தி கொளுத்தி, மேட் புகையவிட்டு என்று எவ்வளவு தடுப்பு வூயகம் அமைத்தாலும், அத்தனை வியூகத்தையும் தகர்த்துக் கொண்டு நைசாக வீட்டுக்குள் ஊடுருவில், நம்மை கடித்து விட்டு தப்பிககிறது கொசுக்கள். டெங்கு, சிக்கன்குனியா, மலேரியா என பல நோய்களை பரப்பி நம்மை படாதபாடு படுத்திவிடுகிறது. இந்த இரண்டரை மில்லிகிராம் பூச்சியால் பரவும் . மலேரியா காய்ச்சலால் ஆண்டுதோறும் சராரியாக 10 லட்சம் பேர் பலியாகின்றனர். 50 கோடி பேர் பாதிக்கப்படுகின்றனர். கொசுக்களை ஒழிக்கவும் அது பரப்பும் நோய்களை கட்டுப்படுத்தவும் பட்ஜெட் ஒதுக்கீடுகள் ஆண்டுக்கு ஆண்டு எகிறுகின்றன.

இந்நிலையில், கொசுக்கடிக்கு பயப்பட வேண்டாம் என்ற சூப்பர் தகவலை சொல்லி மலேரியாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்திருக்கின்றனர் ஜெர்மனி ஆராய்ச்சியாளர்கள். பெர்லின் நகரில் உள்ள மேக்ஸ் பிளாங்க் தொற்றுநோய் தடுப்பு நிறுவனம்தான் இந்த ஆய்வை மேற்கொண்டு வெற்றியடைந்துள்ளது. ஆய்வு பற்றி விஞ்ஞானி கய் மேடஸ்சூகி கூறியதாவது:

அனோபிலிஸ் எனப்படும் பெண் கொசுதான் மலேரியாவை பரப்புகிறது. அது கடிக்கும்போது ஸ்போரோசாய்ட்ஸ் கிருமிகள் நம் உடலில் நுழைகிறது. இவை கல்லீரலுக்கு சென்று வேகமாக வளர்கின்றன. கிருமிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கிறது. பின்னர் மலேரியாவை உருவாக்கும் மெரோசாய்ட்ஸ் என்ற கிருமியாக விஸ்வரூபம் எடுக்கிறது.

இனி இதற்கு பயப்படத் தேவையில்லை. கடைசிக்கட்டத்தில் மலேரியா கிருமிகளை ஒழிக்கும் ஆன்டிபயாடிக் மருந்துகளை கண்டறிந்துள்ளோம். வழக்கமாக மலேரியா பரவும் இடத்தில் உள்ள எல்லாரும் முன்கூட்டியே இந்த தடுப்பு மருந்து சாப்பிட வேண்டும். வழக்கம்போல கொசு கடிக்கும். கிருமி பரவும். கல்லீரலில் மெரோசாய்ட்ஸ் கிருமிகள் அதிகரிக்கும். ஆனாலும் பயப்பட தேவையில்லை. ரத்த செல்களில் அவை நுழையமுடியாதபடி ஆன்டிபயாடிக் மருந்து தடுத்துவிடும். மலேரியா வராது. கிளிண்டாமைசின், அசித்ரோமைசின் என்ற ஆன்டிபயாடிக் மருந்துகளை இதற்கு பயன்படுத்தியுள்ளோம். எலிகளை வைத்து நடத்திய ஆராய்ச்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது. தொடர்ந்து ஆராய்ச்சி நடக்கிறது. ஆய்வுக்கூட சோதனைகள் விரைவில் தொடங்கும்.

 


Page 175 of 519