Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

மாநகரில் சுகாதாரமின்றி விற்பனை அதிகாரிகள் அதிரடி ரெய்டு 50 கிலோ இறைச்சி பறிமுதல்

Print PDF

தினகரன் 30.08.2010

மாநகரில் சுகாதாரமின்றி விற்பனை அதிகாரிகள் அதிரடி ரெய்டு 50 கிலோ இறைச்சி பறிமுதல்

ஈரோடு, ஆக. 30: ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட கறிகடைகளில் நேற்று நடத்திய திடீர் ரெய்டில்சுகாதாரமின்றி விற்பனை செய்த 50 கிலோ பழைய ஆட்டிறைச்சியை மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஈரோடு மாநகராட்சி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஆட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சி கடைகளில் சுகாதாரமின்றி இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக பல்வேறு புகார்கள் வந்ததையடுத்து நேற்று காலை மாநகராட்சி நகர்நல அலுவலர் (பொறுப்பு) தங்கராஜ் தலைமையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் திடீர் ரெய்டு நடத்தினர்.

நாச்சியப்பா வீதி, இடையங்காட்டுவலசு, மாதவகிருஷ்ணா வீதி, சூரம்பட்டி நால் ரோடு போன்ற பகுதிகளில் உள்ள 25க்கும் மேற்பட்ட ஆட்டிறைச்சி, கோழி கடைகளில் திடீர் ரெய்டு நடந்தது. சோதனையின் போது பெரும்பாலான ஆட்டிறைச்சி கடைகளில் மாநகராட்சி சுகாதார அலுவலர்களின் அனுமதியின்றியும், இறைச்சிக்கு சீல் வைக்காமலும் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. சில இடங்களில் பழைய, சுகாதாரமற்ற இறைச்சியும் விற்பனைக்கு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. ஒருசில இறைச்சி கடைக்காரர்கள் எவ்வித அனுமதியும் இல்லாமல் சுகாதாரமற்ற முறையில் இறைச்சி விற்பனை செய்து கொண்டிருந்ததும் தெரிய வந்தது. இதைதொடர்ந்து அக்கடைகளில் இருந்து இறைச்சிகளை அதிகாரிகள் கைப்பற்றினர்.

மாநகராட்சி ஆடு வதை நிலையத்தில் ஆட்டை அறுத்து அதற்கு சீல் வைத்த பிறகே கறிக்கடைகளில் ஆட்டிறைச்சி விற்பனை செய்ய வேண்டும் என்றும், மீறும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்தனர். இதேபோன்று சுகாதாரமற்ற முறையில் கோழிகளை அறுத்து அவற்றை சுத்தம் செய்யும் கடைக்காரர்களையும் அதிகாரிகள் எச்சரித்தனர். 25க்கும் மேற்பட்ட கோழி, ஆட்டிறைச்சி கடைகளில் நடத்திய திடீர் ரெய்டில் 50 கிலோ ஆட்டிறைச்சியை அதிகாரிகள் கைப்பற்றி அவற்றை அழித்தனர்.

ரெய்டு குறித்து மாநகர் நல அலுவலர் (பொறுப்பு) தங்கராஜ் கூறுகையில், ‘மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆடுகளை வெட்டி இறைச்சி விற்பனை செய்பவர்கள் தாங்கள் விற்பனை செய்யும் இடத்திலேயே ஆடுகளை வெட்டி விற்பனை செய்கின்றனர். ஆட்டிறைச்சி கடைக்காரர்கள் கட்டாயம் ஆடுகளை மாநகராட்சி ஆட்டிறைச்சி கூடத்தில் வெட்டி, சுகாதாரத்துறை அதிகாரிகளால் சோதனையிட்டு விற்கத் தகுதியுள்ளவை என சான்று அளித்தப்பிறகே இறைச்சியை விற்க வேண்டும்.

சுகாதாரமில்லாத ஆடுகளை வெட்டி விற்பனை செய்தாலோ, பழைய கறியை ஸ்டாக் வைத்து விற்றாலோ சம்பந்தப்பட்ட கடைக்காரருக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன், கடைக்கும் சீல்வைக்கப்படும். இந்த திடீர் ரெய்டு மீண்டும் தொடரும்என்றார்.

 

பொன்னேரி ஓட்டல், டீக்கடைகளில் போலி டீத்தூள் பறிமுதல்

Print PDF

தினகரன் 30.08.2010

பொன்னேரி ஓட்டல், டீக்கடைகளில் போலி டீத்தூள் பறிமுதல்

பொன்னேரி, ஆக.30: பொன்னேரி பகுதியில் டீக் கடை மற்றும் ஓட்டல்களில் சுகாதார அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, கடைகளிலிருந்து போலி டீத்தூள், காலாவதி தண்ணீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பொன்னேரி மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் தரமானதாக இல்லை என திருவள்ளூர் மாவட்ட சுகாதார பணி இயக்குனர் சம்பத்துக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து, உணவு கடத்தல் பிரிவு ஆய்வாளர்கள் சிவகுமார், முருகன் தலைமையில் அலுவலர்கள் காசிநாதன், நீதிவாசன் ஆகியோர் நேற்று முன்தினம் பொன்னேரியில் உள்ள ஓட்டல், டீக்கடை, குளிர்பான கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது, போலியாக தயாரித்த 15 கிலோ டீத்தூள், காலாவதியான 1,200 லிட்டர் தண்ணீர் பாக்கெட் மற்றும் பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அவை மைதானத்தில் கொட்டி அழிக்கப்பட்டது.

‘சுகாதாரமற்ற உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்வது தொடரும். பிஎப்ஏ சான்றிதழ் இல்லாத ஓட்டல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். முறைகேடு செய்யும் டீக்கடை, ஓட்டல்களுக்கு சீல் வைக்கப்படும். உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

ரூ.1 1/2 கோடி செலவில் மெரீனா கடற்கரையை சுத்தப்படுத்தும் எந்திரங்கள்; மேயர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்

Print PDF

மாலை மலர் 27.08.2010

ரூ.1 1/2 கோடி செலவில் மெரீனா கடற்கரையை சுத்தப்படுத்தும் எந்திரங்கள்; மேயர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்

ரூ.1 1/2 கோடி செலவில் மெரீனா கடற்கரையை 
 
 சுத்தப்படுத்தும் எந்திரங்கள்;
 
 மேயர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்

சென்னை, ஆக. 27- மேயர் மா.சுப்பிரமணியன் மெரீனா கடற்கரையை சுத்தப்படுத்தும் மணல் ஜலிக்கும் எந்திரம், சாலை உருளைகள், சிறிய வகை லோடர்கள் ஆகியவற்றை இன்று வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

சென்னை மாநகராட்சி சார்பில் முன்பு சிறிய சாலைகளில் உள்ள கட்டிட இடிபாடுகளை பணியாளர்கள் மூலம் அகற்றப்பட்டது. 2006ம் ஆண்டு புதிய நிர்வாகம் பொறுப்பேற்ற பிறகு கட்டிட இடிபாடுகளை அகற்றுவதற்காக சிறிய வகை லோடர்கள் வாங்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மெரினா கடற்கரை முதல்-அமைச்சர் கருணாநிதி உத்தரவுப்படியும், துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரைப்படியும் ரூ.26 கோடி செலவில் அழகுபடுத்தப்பட்டு, பொது மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.

14 அமர்வு மேடைகள், 80 இடங்களில் புல்வெளி தரைகள், மூன்றரை கிலோ மீட்டர் நீளத்திற்கு பொது மக்கள் நடைபயிற்சி மேற்கொள்வதற்காக நடைபாதைகள், பறவைகள் பறப்பது போன்ற அழகிய மின்விளக்குகள் போன்ற பல்வேறு அழகிய பணிகள் மூலம் மெரினா கடற்கரை பொதுமக்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டது.

லட்சக்கணக்கான பொது மக்கள் பயன்படுத்தும் மெரினா கடற்கரையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது குறித்து சென்னை மாநகராட்சி மூலம் தடை விதிக்கப்பட்டு பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

எனவே, அனைவரும் ஒத்துழைத்து இயற்கை தந்த அழகிய மெரினா கடற்கரையை தூய்மையாக வைத்திருக்கவும், சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்கவும் ஒத்துழைக்க வேண்டும்.

மெரினா கடற்கரையை தூய்மையாக வைத்திருப்ப தற்காக மணல் ஜலித்து சுத்தம் செய்யும் இயந்திரம் ரூ.32 லட்சத்து 68 ஆயிரம் செலவில் ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த இயந்திரம் சிறப்பாக செயல்படுவதால் சென்னை மாநகராட்சி நிதி நிலை அறிக்கையில் அறிவித்தபடி பெசன்ட் நகரில் உள்ள எலியட்ஸ் கடற்கரையை சுத்தம் செய்ய பெல்ஜியம் நாட்டிலிருந்து தருவிக்கப்பட்டு, எஸ் கார்ட்ஸ் ட்ராக்டரில் பொருத்தப்பட்ட மணல் ஜலிக்கும் இயந்திரம் ஒன்று கொள்முதல் செய்யப்பட்டு, இன்று முதல் பயன் பாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது.

இந்த மணல் ஜலிக்கும் இயந்திரத்தின் விலை ரூ. 21 லட்சத்து 96 ஆயிரம் ஆகும். மொத்தம் இன்று 15 வாகனங்கள் ரூபாய் ஒரு கோடியே 59 இலட்சத்து 48 ஆயிரம் செலவில் வழங்கப்படுகிறது. இவ்வாறு மேயர் கூறினார்.

நிகழ்ச்சியில் துணை ஆணையர்(சுகாதாரம்) ஜோதி நிர்மலா, துணை மேயர் சத்தியபாமா, மன்ற ஆளுங்கட்சித் தலைவர் ராமலிங்கம், நிலைக் குழுத்தலைவர்கள் சுரேஷ்குமார், ஜானகி, மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Last Updated on Friday, 27 August 2010 11:22
 


Page 179 of 519