Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

கூவத்தில் கொசு உற்பத்தியாகும் ஆகாய தாமரைகள் அகற்றம்

Print PDF

தினமணி 27.08.2010

கூவத்தில் கொசு உற்பத்தியாகும் ஆகாய தாமரைகள் அகற்றம்

சென்னை அண்ணா நகரில் எம்.ஜி.ஆர். காலனி மற்றும் நடுவங்கரை நடைபாலம் அமைந்துள்ள கூவம் ஆற்றின் நடுவே வேலி அமைத்து கொசு உற்பத்தியாகும் ஆகாயத் தாமரைகளை அகற்றம்

சென்னை, ஆக.26: சென்னையில் கூவம் ஆற்றில் கொசு உற்பத்தியாகும் ஆகாயத் தாமரைகள் அகற்றப்பட்டு வருகின்றன. கூவத்தின் நடுவே தடுப்பு வேலி அமைத்து இப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சென்னை மாநகராட்சி வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:

சென்னை அண்ணா நகரில் உள்ள எம்.ஜி.ஆர். காலனி மற்றும் நடுவங்கரை நடைபாலம் கூவம் ஆற்றின் நடுவே வேலி அமைத்து, நீரில் வரும் ஆகாயத் தாமரைகள் மற்றும் கொசுப்புழு தடுப்பு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.

இதனால் புறநகர் பகுதி மற்றும் 100 அடி சாலை, அரும்பாக்கம், நியூ காலனி போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் ஆகாயத் தாமரைகள் அகற்றப்படுவதுடன், உற்பத்தியாகும் கொசுப் புழுக்கள் அழிக்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை முழுவதும் கொசுப்புழு மற்றும் கொசு ஒழிப்பு பணிகளுக்காக 350 கைத்தெளிப்பான்கள், 75 இயந்திர தெளிப்பான்கள், 20 கால் அழுத்த தெளிப்பான்கள், 236 சிறிய புகை பரப்பும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு கொசு ஒழிக்கும் பணி மாநகராட்சி துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சுகாதார அலுவலர் பெ.குகானந்தம் மேற்பார்வையில், சுகாதார அலுவலர் பிரபாவதி உள்ளிட்ட பூச்சியியல் வல்லுநர்கள், துப்புரவு அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோர் கொசு ஒழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்

 

டெங்கு, சிக்-குன் குனியா காய்ச்சல்: கட்டுப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை

Print PDF

தினமலர் 27.08.2010

டெங்கு, சிக்-குன் குனியா காய்ச்சல்: கட்டுப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை

மதுரை:""மதுரையில் பரவும் டெங்கு மற்றும் சிக்-குன் குனியா காய்ச்சலுக்கு காரணமான கொசுவை ஒழிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது,'' என்று நகர்நல அலுவலர் டாக்டர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.மதுரை நகரிலும் மாவட்டத்திலும் சமீப காலமாக டெங்கு மற்றும் சிக்-குன் குனியா காய்ச்சல் அதிகம் பரவுகிறது. இதற்கு காரணமான கொசுக்களின் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. மாநகராட்சி கூட்டங்களில், பல்வேறு கட்சிகள் இது குறித்து கேள்வி எழுப்பின. கொசுக்களை கட்டுப்படுத்தும் மருந்து, மாநகராட்சி "ஸ்டாக்' இல்லை என்ற புகாரும் எழுந்தது.

இது குறித்து நகர்நல அலுவலர் சுப்பிரமணியன் கூறியதாவது:நகரில் வில்லாபுரம், புதூரில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது, கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதம் முதல் கொசுக்களின் இனப்பெருக்க காலம். எனவே, தற்போது கொசுக்களின் உற்பத்தி அதிகம் உள்ளது. இதைத் தடுக்க டெட்ராமித்ரின் என்ற புகை மருந்து அடிக்கப்படுகிறது. கழிவு நீர் தேங்கிய இடங்களில் "அபேட்' என்ற மருந்து ஊற்றப்படுகிறது. இடையில் இம்மருந்து, "ஸ்டாக்' இல்லாமல் இருந்தது. இப்போது மருந்து வந்துவிட்டது.அனைத்து மாநகராட்சி மருத்துவமனைகளிலும், காய்ச்சல் பாதிக்கப்பட்டு வருவோரிடம் ரத்த பரிசோதனை செய்யப்படுகிறது. டெங்கு, சிக்-குன் குனியா பாதிக்கப்பட்டிருந்தால், அதற்குஉரிய சிகிச்சை தரப்படுகிறது. கொசுக்களை கட்டுப்படுத்த, தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

அறிகுறிகள் என்ன: டெங்கு ஏற்பட்டால், குறிப்பிட்ட அறிகுறியாக, அதிக காய்ச்சல், கடும் தலைவலி, கண்ணுக்குள் வலி, மூட்டு வலி போன்றவை ஏற்படும். பாதிக்கப்பட்டவரால் எழுந்து நடக்க முடியும். சிக்-குன் குனியா நோயால் பாதிக்கப்பட்டால், காய்ச்சலுடன், உடலின் சிறு மூட்டுகள் கூட வலிக்கும். எழுந்து நடக்க முடியாது. இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக, ரத்த பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம்.

 

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை: ஓசூர் அரசு மருத்துவமனையில் ஏற்பாடு

Print PDF

தினமலர் 27.08.2010

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை: ஓசூர் அரசு மருத்துவமனையில் ஏற்பாடு

ஓசூர்: ஓசூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கிட 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் சுத்திகரிப்பு இயந்திரம் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஓசூர் அரசு மருத்துவமனையில் தினம் 2,000 பேர் உள் மற்றும் வெளி நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். மருத்துவமனையில் கடந்த காலத்தில் போதிய டாக்டர்கள், மருத்துவ சிகிச்சை கருவிகள் மற்றம் கட்டிட வசதியில்லாமல் நோயாளிகள் முழுமையான சிகிச்சை பெற முடியாமல் அவதியடைந்து வந்தனர். தற்போது, தமிழ்நாடு அரசு சுகாதார திட்டத்தில் மருத்துவமனைக்கு போதிய டாக்டர்கள், பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதோடு, கட்டிடங்கள், புதிய அறுவை சிகிச்சை கருவிகள், ஜெனரேட்டர் மற்றும் நோயாளிகள் துணிகளை சலவை செய்ய வாஷிங் மிஷின் என மாவட்ட மருத்துவமனைக்கு தகுந்தவாறு நவீன வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. சில மாதமாக மருத்துவமனையில் பொதுப்பணித்துறை மூலம் போடப்பட்ட போர்கள் வறண்டு தண்ணீர் இல்லாமல் நோயாளிகள் கடும் அவதியடைந்தனர். இது குறித்து, "காலைக்கதிர்' நாளிதழிலில் செய்தி வெளியானது. தகவல் அறிந்த கலெக்டர் அருண்ராய் அதிகாரிகளுடன் மருத்துவமனையை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

நகராட்சி கமிஷனர் பன்னீர் செல்வம் மற்றும் அதிகாரிகளை அழைத்து, மருத்துவமனைக்கு நிரந்தரமாõ தண்ணீர் கிடைக்கும் வகையில் புதிய போர் போட கலெக்டர் உத்தரவிட்டார். தற்போது, நகராட்சி நிர்வாகம் மருத்துவமனையில் போர் போடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. அது வரை நகராட்சி மூலம் லாரிகளில் மருத்துவமனைக்கு தேவையான அளவு தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் நோயாளிகள் சுகாதாரமான குடிநீர் குடிக்கும் வகையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க தமிழ்நாடு சுகாதார திட்டத்தின் கீழ் 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நவீன குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் வழங்கப்பட்டுள்ளது. புதிய போர் போடப்பட்டதும், நவீன சுத்திகரிப்பு எந்திரம் பொறுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் பொன்ராஜ் கூறியதாவது: ஓசூர் அரசு மருத்துவமனைக்கு தேசிய என்..பி.ஹெச்., தர அங்கீகாரம் கிடைப்பதற்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் சுகாதார துறை மூலம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக தற்போது நவீன குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த சுத்திகரிப்பு எந்திரம் மூலம் மணிக்கு 500 லிட்டர் சுகாதாரமான குடிநீர் பெறலாம். இதன் மூலம் நோயாளிகள் உடல் நலம் பாதுகாக்கப்படுவதோடு குடிநீர் மூலம் பரவும் தொற்று நோய்களை முற்றிலும் தடுக்கலாம். விரைவில் போர் போட்டு நவீன சுந்திகரிப்பு எந்திரம் பொருத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 


Page 180 of 519