Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

டெங்கு பாதிப்பு 76 ஆக உயர்வு கொசு பரவலுக்கு காரணமான 37,187 பேருக்கு நோட்டீஸ்

Print PDF

தினகரன் 06.08.2010

டெங்கு பாதிப்பு 76 ஆக உயர்வு கொசு பரவலுக்கு காரணமான 37,187 பேருக்கு நோட்டீஸ்

புதுடெல்லி, ஆக. 6: டெல்லியில் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது. கொசுக்களால் ஏற்படும் டெங்கு காய்ச்சல் டெல்லியில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 8 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. அவர்கள் வெவ்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவர்களையும் சேர்த்து இந்த சீசனில் டெல்லியில் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை டெங்குவுக்கு ஒருவர் பலியாகியுள்ளார். அவர் பீகாரில் உள்ள தனது சொந்த ஊருக்கு சென்றிருந்தபோது உடல்நலம் பாதிக்கப்பட்டார். டெல்லி வந்தபிறகே அவருக்கு டெங்கு இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. மருத்துவமனையில் அவர் இறந்தார்.

டெங்கு ஒருபக்கம் பரவினாலும், இன்னொரு பக்கம் மாநகராட்சி சார்பில் தீவிர தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி கூறுகையில், "இதுவரை 1 கோடியே 49 லட்சத்து 4 ஆயிரத்து 602 வளாகங்களில் மாநகராட்சி ஊழியர்கள் சோதனை நடத்தியதில், 37,187 வீடுகளில் தேங்கியிருந்த கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதில், 3,942 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது" என்றார்.

2009ம் ஆண்டில் டெல்லியில் மொத்தம் 1153 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். 3 பேர் இறந்தனர். 2008ம் ஆண்டில் 1312 பேர் பாதிக்கப்பட்டனர். இருவர் இறந்தனர். 2007ம் ஆண்டில் டெங்குவின் தாக்கம் குறைந்திருந்தது. 548 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டனர். ஒருவர் இறந்தார். 2006ம் ஆண்டில்தான் டெங்கு காய்ச்சல் கடுமையாக பரவியது. 3366 பேர் பாதிக்கப்பட்டனர். 36 பேர் இறந்தனர்.

 

தோல் மண்டிக்கு "சீல்'

Print PDF

தினமலர் 06.08.2010

தோல் மண்டிக்கு "சீல்'

திண்டிவனம் : திண்டிவனத்தில் உள்ள தோல் மண்டிக்கு நகராட்சி சுகாதார அதிகாரிகள் சீல் வைத்தனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கசாமியான் தெருவில் தனியாருக்கு சொந்தமான தோல் மண்டி உள்ளது. இதனால் அப்பகுதியில் பொது சுகாதாரக்கேடு ஏற்படுவதால், அவர்களே அகற்றிக்கொள்ள வேண்டியது என்று நகராட்சி சுகாதாரத் துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. ஆனாலும் தோல் மண்டி அகற்றப்பட வில்லை. இதனையடுத்து நகராட்சி கமிஷனர் முருகேசன் உத்தரவின் பேரில் நேற்று காலை 10 மணிக்கு சுகாதார அலுவலர் பாலச்சந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் ராஜரத்தினம், சரவணன் ஆகியோர் போலீஸ் பாதுகாப்புடன் சென்று, தோல் மண்டியை பூட்டி "சீல்' வைத்தனர்.

 

காரையாரில் ஆற்றுநீரை குடிக்க வேண்டாம் செயல் அலுவலர் வேண்டுகோள்

Print PDF

தினகரன் 05.08.2010

காரையாரில் ஆற்றுநீரை குடிக்க வேண்டாம் செயல் அலுவலர் வேண்டுகோள்

வி.கே.புரம், ஆக. 5: காரையாருக்கு ஆடி அமாவாசைக்கு வரும் பக்தர்கள் ஆற்று நீரை குடிக்கவேண்டாம் என வி.கே.புரம் செயல் அலுவலர் வேண்டு கோள் விடுத்துள்ளார்.

பிரசித்தி பெற்ற பாபநாசம் காரையார் சொரிமுத்துஅய்யனார் கோயிலில் வருகிற 9ம் தேதி ஆடி அமாவாசை திருவிழா நடைபெறுகிறது. விழாவையொட்டி பல்வேறு இடங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருவார்கள்.

பக்தர்களின் வசதிக்காக வி.கே.புரம் நகராட்சி சார்பில் சின்டெக்ஸ் தொட்டிகள் மூலம் பாதுகாக்கபட்ட குடிநீர் வழங்கப்படும். மேலும் 2 லாரிகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது. பக்தர்கள் யாரும் ஆற்றுநீரை பருக வேண்டாம் என வி.கே.புரம் நகராட்சி செயல் அலுவலர் முருகன் தெரிவித்துள்ளார். மேலும் பக்தர்கள் பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தக்கூடாது. மீறி பயன்படுத்தினால் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்வதோடு அபராதமும் விதிக்கப்படும் என்று கூறினார்.

 


Page 204 of 519